வாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் – 19

இறுகப்பிடித்துக்கொண்டால் இனிக்கும் உறவுகள்..

கைகளிரண்டும் உடைந்திருக்கையில் பறக்க இரு சிறகு கிடைத்ததற்குச் சமமானது உறவினர் உடனிருப்பது. மேலானதும் போதாதுமாய் இருக்குமந்த உறவுகள்; இருக்கிறார்கள் என்பதே பலம். சிரிக்கையில் சிரிக்கவும் அழுகையில் துடைக்கவும் உடனிருக்கும் உறவுகளின் கைகள் மகத்தானது. கசங்கிப்போன மலர்களின் வாசம்போல உதவிக்கில்லாதபோதும் உறவுகள் இருக்கிறார்கள் என்பது இனிக்கவே செய்கிறது. முரசடிக்கும் கைகள்ஓய்ந்து போனாலும் அடுத்தடுத்து உயிருள்ள கடைசி நொடியிலும் கொட்டும் முரசொலி சப்தம் காதுகளை எட்டித் தொடுவதைப்போல், உறவுகளின் பங்கில் ஒரு புள்ளியேனும் நம் மனதை எட்டி தொட்டுக்கொண்டேதானிருக்கிறது. பச்சைவயலின் ஈரமும் பரந்த வானின் நீளமும் கொண்டு அகன்றிருக்கும் மனசு உறவுகள் சிலரிடத்தில் வெகுவாக இருப்பது நமக்கான நம்பிக்கை கூடுவதன் உச்சமன்றி வேறில்லை.

எனக்கு நீ உனக்கு நான் என்று வாழ்வது; இலை வேருக்கு வெளிச்சம் பாய்ச்சுவதும், வேர் இலைக்கு நீர் பாய்ச்சுவதும்போன்ற இயல்பின் நிறைவன்றி வேறென்ன? காற்றிற்குப் பாகுபாடில்லை, நதி யாரைக் கண்டும் கோபத்தில் நின்றுக்கொள்ளப் போவதில்லை, அலைகள் உதைப்பவரின் காலைக் கூட நனைத்துத் தான் விலகிச் செல்கிறது; பின் மனிதன் மட்டும் தனக்கென வாழ்ந்து தனக்கென்று சாகையில், எந்த புதிய புல்முளைத்து மனிதரைநீ மேலானவனாக வாழ்ந்தாயடா என்றுக் காட்டிவிடப் போகிறது?

சார்ந்திருத்தல், சாய்ந்துக்கொள்ளல், தாங்கிப்பிடித்தல், வாகைசேர்த்தல், வாலிபத் திமிரையும் வாஞ்சை மனதையும் விதைகளாக்கி வருங்காலத்திற்கு விட்டுச் செல்லல்போன்ற நிறைவுகளை மனிதன் வாழையடி வாழையாகப்பெற மனிதருக்கு அன்பின் நெருக்கமும் அதைப் பெருக்கும் உறவுகளின் ஈர்ப்பும் ஒருவருக்கு ஒருவரென அனைவருக்குமே வேண்டும்.

தனித்து அழும் கண்ணீரைப்போல சேர்ந்துமகிழும் கனமும் மனதிற்கு இனிப்பானதென உணர உறவுகளுடன் செர்ந்திருந்துப் பார்த்தல்வேண்டும். நெருங்கி நிற்கையில் சிலவேளை குழப்பங்கள் நேரிடலாம், பிடித்தங்கள் மாறுபடலாம், முரண்படுகையில் கோபம் வரும் சண்டை மூளலாம், உனக்கா எனக்கா என்று சுயநலத்தில் மார்புதட்டி இருவேறாகக் குடும்பம் வெட்டி முறியலாம், முறியட்டுமே. முறிந்து, பின் புரிந்து, அன்பின் ஏக்கத்தில் மீண்டும் சேர்ந்து அணைக்கையில் கூடும் சுகம் பிரிந்திருப்பதில் இல்லையே.

பிறருக்குக் காட்டாத பூரிப்பு, பகிர்ந்துகொள்ளாத வெற்றி, வெளியில் தெரியாத வீரம் ஒருவருக்குள் ஒருவருக்காக மட்டும் வலுத்தென்ன பயன்? இருக்கும் உணர்வை சலிப்பு காட்டி, சிரிப்பு கூட்டி, மலிய மலியகொடுத்துக் கொடுத்து மீளும்ஆனந்தக் கண்ணீர் ததும்ப தெரியும் முகம்மானுட நீதியை மனிதத்துள் பொத்திக்காக்க ஒற்றுமையின் வழிநின்று முயற்சிக்கும் இக்காலத் தேவையறிந்த முகமன்றி வேறென்ன..?

வெவ்வேறு  பக்கமாக மாறி மாறி வேறு பக்கம் திருப்புகையிலும் வாழ்க்கை வேறுவேறாகத் தெரிகிறது. வெவ்வேறு வண்ணமும் எண்ணமுமாக நாளும் பொழுதும் நொடிக்குநொடி மாறிக்கொண்டே இருக்கிறது. இதில் தனியே நின்று செய்துமுடித்தவை செய்தவையாகவே முடிகிறது, சுற்றத்தோடு அறிந்துச் செய்யப்பட்டவையே சாதித்ததாகிறது. காரணம், மகிழ்ச்சி என்பது பகிர்தலில் இருக்கிறது. சிரியோருக்கு கொடுப்பதிலும், பெரியவரிடமிருந்து பெறுவதிலும் இருக்கிறது மகிழ்ச்சி.

நண்பரொருவர் கார் வாங்கினார். வீட்டிற்குப் போனதும் எப்போதும் போல தனது அறைக்குப் போனார் உடை மாற்றிக்கொண்டு படுக்கச் சென்றுவிட்டார். யாரோ ஒருவர் விவரமறிந்து தொலைபேசியில் அழைத்து என்னப்பா கார் வாங்கியிருக்கியாம், சொல்லவேயில்லையேஎன்கிறார் இமைகள் விரிய. அதற்கந்த நண்பன், இதில் உன்னிடம் சொல்வதற்கு என்ன இருக்கு, எனக்கு லோன் கிடைத்தது அதில் வாங்கினேன். நீயா பணத்தைக் கட்டப்போற மாசம் மாசம்” என்று கடுப்படிக்க அவர் எதிர்முனையில் டப்பென இணைப்பை துண்டித்தார்.

இன்னொரு நண்பருக்கு, கார் கிடைக்கிறது. வேலைசெய்யும் நிறுவனத்தில் கார் தருகிறார்கள். உபயோகித்த கார். அவர் வேகவேகமாக வீட்டிற்கு வருகிறார், வரும் வழியிலேயே தொலைபேசியில் அழைத்து தனது அம்மா அப்பா மனைவி குடும்பத்திற்கு சொல்லிவிடுகிறார். கார் வாசலில் வந்து நின்றதும் அம்மா ஓடிவந்து ஆரத்தி எடுக்கிறாள். நம் வீட்டிற்கு முதல் கார் வந்துவிட்டது என்று அண்ணன் தம்பிகள் எல்லாம் அவனை கொண்டாடுகிறார்கள். குழந்தைகள் காரில் ஏறி அமர்ந்து எட்டி எட்டி குதித்து ஆரவாரப் படுத்துகிறார்கள். அந்த நண்பன் உடனே குளித்துவிட்டு எல்லோரையும் அழைத்துக் கொண்டு கோவிலுக்குச் செல்கிறான். வரும் வழியில் நல்ல உணவகம் பார்த்து அரிய உணவுகளை வாங்கித்தந்து உண்டு மகிழ்சியை எல்லோரிடமும் பகிர்ந்துக்கொள்கிறான். அவனுடைய நண்பர்களில் ஓரிருவரும் உடன் கலந்துக்கொண்டு அவனோடு மகிழ்ச்சியில் பூரிக்கிறார்கள். வீட்டிடம் வண்டி வந்து நின்று எல்லோரும் இறங்கியதும், அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து மகிழ்ச்சியோடு விசாரிக்கிறார்கள். இடையே “அவர் என்ஜினியரா இருக்காறா(?) நான் ஏதோ சாதாரண வேலை செயறாரோன்னு நினச்சேன்என்று பக்கத்து வீட்டுக் காரரின் மனைவி பேசி உசுப்பேத்திவிட, நண்பனின் மனைவி பெருமையோடு அவனைப் பார்க்கிறார்கள். அவன் அன்று படித்து பட்டம் வாங்கியதற்கான அத்தனை மதிப்பும் மகிழ்ச்சியும் இந்த ஒரு காரில் இன்று அவனுக்குக் கிடைக்கிறது.

இரண்டுப்பேருமே கார் வாங்கினார்கள். முதல் நண்பன் புதிதாக வாங்கினான். இரண்டாம் நண்பனுக்கு கம்பனி முன்பு பயனப்டுத்திய பழையக் காரையே தருகிறது. இதில் மகிழ்ச்சி யாருக்கு கிடைத்தது பார்த்தீர்களா? இது ஒரு மாயையான உலகம். மகிழ்ச்சியையும் வெற்றியையும் ஆடம்பரத்திலும் அடுத்தவரின் தோல்வியிலுமே வைத்திருக்கிறது இவ்வுலகம். தான் ஜெயிப்பது, தான் அடைவது மட்டுமே இங்கே கொண்டாடப் படுகிறது.

கொண்டாட்டம் என்பது ஒரு கை ஓசையல்ல, இரு கை நான்காகி நான்கு எட்டாக கொக்கரிக்கும் உறவுகளின் ஆர்ப்பரிப்போடு வருகிறது கொண்டாட்டம். தான் உண்டு உறங்கி எழுவதைவிட, உண்டோமா உறங்கினோமா என்று பார்த்து கவனித்து அன்பு செய்து அக்கறையோடு பரிமாறும் உணவிலும் உறக்கத்திலும் ஒரு இனிப்புண்டு. அந்த இனிப்பை அடைய உறவுகளோடு கூடி வாழுங்கள்.

தீபாவளிக்கு வெடிக்கும் பட்டாசும் பொங்கலுக்கு மெல்லும் கரும்பும் தனியே இருப்போருக்கு வீண்செலவாகவே கருதப்படுகிறது. உறவுகள் நெருங்கி இருக்கையில் தான், பண்டிகையும் விழாக்களும் கோலாகலப் படுகிறது. குழந்தைச் சிரிப்பதும், கிழவர் வாழ்த்தும், அம்மாப்பா ஆசிர்வதிப்பும், அக்கா தங்கை அண்ணன் தம்பிகளின் மகிழ்வும் மனதிற்கு நிறைவை தருவது முழ உண்மை. என்றாலும் உறவுகளைப் பிரிவது என்பது பெறு வலிஅன்றி வேறில்லை. எனக்கு ஊர் விட்டு வருகையில் எனது எதிர்வீட்டு மரத்தைப் பிரிந்துவந்தால் கூட வலிக்கும்.

ஒவ்வொரு முறை ஊர் போகையிலும், வழியே நெடுகிலும் இருக்கும் மரம், மரத்திற்குமேல் தெரியும் வானம், வானத்தில் நகரும் மேகம், மேகமுரசிப் பெய்யும் மழை, மழையோடு ஆடும் மலர்கள், மலரில் சிறகடிக்கும் தேனீ, தேனீக்கள் தாண்டிப்போகும் காக்கை, காக்கையோடு சுற்றும், குருவி தலை அமர்ந்திருக்கும் கன்னுக்குட்டி என எல்லாமே ஊரில் பார்க்கையில் எத்தனை அழகோ அத்தனைக் கொடுமை அவைகளை விட்டு விலகிவருவதும்.

தோல் இறுக்கிக் கட்டிக்கொண்டு முத்தமிடும் குழந்தையை இறக்கிவிட்டுவிட்டு விமானம் ஏறுவது அத்தனை சுலபமல்ல. போகும் வழியெல்லாம் உயிரருக்கும் குழந்தையின் நினைவை பிரிந்துச்செல்லும் பெற்றோர் மட்டுமே அறிவர் அதை. எனவே ஒரு இதயத்தையும் பிரிவால் அறுக்காதீர்கள். உறவுகளோடு கூடி மகிழ்ந்திருங்கள். உறவுகளின் நெருக்கத்தில் வாழ்க்கை பலவாக மகிழ்வாக சிறகடிக்கட்டும். சின்ன இதயம் முழுதும் சிரிப்பு நல்லுறவுகளால் நிறையட்டும். உறவுகள் சிரித்துக்குலுங்கும் வீடு சொர்கமாகவே எல்லோருக்கும் வாய்க்கட்டும்..

வெற்றியின் அர்த்தம்; ஒருவர் தோற்பதென்பது மாறி, திறமையை அறிவதும் பகிர்வதுமாய் ஒரு சகோதரத்துவ பூமி எல்லோருக்குமாய் சமதர்மத்தில் உருவாகட்டும்..

வித்யாசாகர்

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in வாழ்வியல் கட்டுரைகள்! and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s