மிலேச்ச நாடுகளுள்
கோலோச்சிய நாயகன்,
சுழல்மாடிப் பள்ளிகளுள்
சுடரொளிக்கும் சூரியன்;
பகலிரவு பொழுதெங்கும்
விழித்திருக்கும் வீரியன்,
அதர்மமென்று அழைத்தாலோ –
நழுவி தர்மத்தில் வீழ்பவன்;
கடல்போல் விரிந்த மனதை
கேட்காமலே தருபவன்,
உழைக்கும் பணத்தில் பாதியை
உதவிக்கென்றுத் தந்தவன்;
இளைஞர் பட்டாளத்திற்கு
முதுகெலும்பாய் தேய்பவன்,
இனியோர் விதிசெய்ய
இயந்திரவியல் கற்றவன்;
பணத்தைச் சம்பாதிப்பதில்
பழைய குபேரனுக்கே வழிசொல்பவன்,
இருப்பதை அனுபவிக்க –
எளிமையை கையாள்பவன்!
எண்ணிலடங்கா சொல்லுள் இப்படி
பேறு பல வாய்த்தவன் – இன்று
மனையாள் கைகோர்த்து நடந்து
இல்லறத்தைச் சேர்பவன்;
செல்வங்கள் பதினாறும் – அவன்
மனம்போலச் சேரட்டும்,
பெற்ற வயிறு நிறைய – இருவர்
சொந்தங்கள் மகிழட்டும்;
சொர்க்கம் இதுவென்று – இதயக்
கூடுதன்னை அறியட்டும், அதில்
அன்பு அன்பொன்றே நிறைய – வாழ்க்கை
முழுதாய் இவர்க்கு அர்த்தப்படட்டும்!!
வாழ்க தம்பி மணி,
வளர்ந்து –
நலமோடும் வளமோடும் பெருகட்டும்
அவரின் நல்லறம் மிக்க இல்லறமும்!!
பேரன்புடன்..
அண்ணன்
வித்யாசாகர்