குறிப்பு: இந்தக் கவிதைகள் தெய்வீக மருத்துவர்களைப் பற்றியதல்ல; தெய்வீகத்தை தொலைத்தவர்களுக்குச் சமர்ப்பணம்..
பிரசவத்தின்போது
இரண்டேகால் கிலோதானிருக்கு குழந்தை
ஆனாலும் மூச்சடைச்சிபோகும்
அறுவைசிகிச்சை செய்யவேண்டும்
செய்யட்டுமா என்றார்கள்,
‘மருத்துவர் சொல்கிறாரே
சரி செய்யுங்கள்’ என்றேன்
ஆனால் நாற்பத்தைந்தாயிரம் ஆகும்
இப்போதே கட்டு என்றபோது
கொஞ்சம் வேதனையாகத்தான் இருந்தது;
என்றாலும்
இரண்டாவது குழந்தை
சுகப்பிரசவத்தில் பிறந்ததெல்லாம் வேறுகதை;
பல் ஓட்டை
எது சாப்பிட்டாலும் அடைத்துக் கொள்கிறது
ஒரே தொல்லை என்றேன்,
உற்று உற்று பார்த்துவிட்டு
எங்கே வேலை எவ்வளவு சம்பளம்
எல்லாம் கேட்டுவிட்டு
உள்ளே சொத்தை இருக்கு
உடனே ரூட் கேணல் செய்யனும்
என்றார்,
சரி
செய்யுங்கள் என்றேன்
ரெண்டு பல்லு சேர்ந்தாப்புல
இருக்கு
ரெண்டும் செய்துட்டேன் என்றார்,
மயக்க ஊசியில
ஒண்ணும் தெரியலை டாக்டர்
எவ்வளவு ஆச்சு என்றேன்,
ரூட்கேனல்
வெள்ளி அடைப்பு எல்லாம் சேர்த்து
ரெண்டு பல்லுக்கு பத்தாயிரம்
ஆகுமென்றார்,
பல்வலி போய் எனக்கு
நெஞ்சு வலியே வந்தது;
நிமோனியா காய்ச்சல்
மூக்கில் ரத்தம் வருது
பயப்படத்தான் வேண்டுமோ’ என்றேன்,
ஆமாமா இது கேன்சர்போல இருக்கு
நிறைய சோதனை செய்யனும்
இங்கு பத்துநாள் தங்கனும்
அநேகம் பெரிய மருத்துவரைக்கூட
பார்க்கவேண்டி வரும் என்றார்கள்,
மருத்துவர்மேலெனக்கு சந்தேகமெல்லாமில்லை
செய்யுங்கள் என்றேன்,
ஆனால் ஒரு எட்டு லட்சம்
பத்து லட்சம் வரை ஆகும்
பரவாயில்லையா என்றார்,
பத்து லட்சம்
கேன்சரைவிட பெரிதாகத் தெரிந்ததெனக்கு;
தோழி கையறுத்துக் கொண்டால்
ஆழமா இருக்கே
ஒரு ஊசி போட்டா நல்லதோன்னு
மருத்துவமணை போனோம்
தோண்டிப் பார்க்கணும்
நரம்பு கட்டாயிருக்கலாம்’ என்றார் மருத்துவர்
சரி என்றேன்
மொத்தமாய் அறுவை சிகிச்சையே
செய்துவிட்டு
நல்லவேளை அறுத்துப் பார்த்ததும்தான் தெரிந்தது
உள்ளே சவ்வு லேசா அறுபட்டிருந்தது
தையல் போட்டுவிட்டிருக்கோம்’ என்றார்
விரல்தான்
மடக்கியதும் மடங்கியதே என்றேன்,
அதலாம் மடங்கும்
ஆனால் உள்ளே காயமிருந்தது என்றார்,
சரி மருத்துவர்
சரியாகத் தானே செய்வார்,
எவ்வளவு ஆச்சு என்றேன்
மொத்தத்தில் ஒரு
அறுபதாயிரத்திற்கும் மேலாச்சு
உங்களுக்காக
ஒரு ஐம்பத்தி ஐந்தாயிரம் கொடுங்க போதும்’ என்றார்..
இருநூறோ முன்னூறோ
கேட்டுவிடுவாரோ என்று
பயந்திருந்த எனக்கு
இதயமே நின்றுப்போனது போலாச்சு..
ஆனால்
இப்போதும் எனக்கு
மருத்துவர்மேல் சந்தேகமெல்லாமில்லை,
தோழிக்காக நகையைவைத்து
பணத்தை கட்டினோம்..
மறுநாள் தோழி அழைத்தாள்
சவ்வு என்ன
விரல் போனால் போதுன்னு
விட்டிருக்கலாம்டி
வீட்டில் வசவு தாங்கலை’ என்றாள்
அச்சோ..
அப்படியெல்லாம் சொல்லக்கூடாது
மருத்துவர் காதில் கேட்டால்
அறுவைசிகிச்சை செய்துவிடுவார்’ என்றேன்
அவளுக்கு வலிதான் என்றாலும்
கலுக்கென்று சிரித்துவிட்டாள்..,
வேறென்ன செய்ய
இந்த மானங்கெட்ட சமுதாயத்தை யெண்ணி
எங்களால்
சிரிக்கத்தானே முடிந்தது (?)
காரி அவர்கள் முகத்தில்
உமிழ்ந்துவிடவா முடிந்தது.. ??
—————————————————-
வித்யாசாகர்
நல்லா சொன்னீங்க சார் ! சில நேரங்களில் டாக்டரிடம் செல்லவே இருக்கிறது 🙂
LikeLiked by 1 person
நல்லா சொன்னீங்க சார் ! சில நேரங்களில் டாக்டரிடம் செல்லவே பயமாகத்தான் இருக்கிறது 🙂
LikeLike
ஓரிரண்டு என்றால் பரவாயில்லை; நிறைய அனுபவங்கள் நேர்ந்துவிட்டதுஂ தெருவில் போன ஒருவர் ஏதோ பேச மகனுக்கு மருத்துவம் படிக்க ரூ. நாற்பது லட்சம் கட்டினேன் என்றார். அவ்வளவு அவசியமா காத்திருந்து அடுத்த வருடம் தகுதியோடு முயற்சிக்கலாமே என்றேன். அதற்கவர் மிக இயல்பாகச் சொன்னார் ‘ அதனால ஒன்னுமில்லை போட்டதை ஒரு வருடத்துல எடுத்துடலாம் நஷ்டம் வராது என்றார். எனக்கு பயத்தில் மனது உதறியது. ஒரு மகனை மருத்துவத்திற்கு படிக்க அனுப்பும் தந்தையின் மனது’ வியாபாரச் சிந்தனையில் மட்டும் இருப்பதையெண்ணி..
LikeLike