வசவு; வசவு வாங்களையோ வசவு.. (வா.செ.ஒ.நி – 20)

விரல்களை விட்டு ஒரு பத்து குற்றங்களை, தான் செய்தது பிறர் செய்ததெனப் பிரித்தெடுத்துக் கொள்ளுங்கள். எல்லோரும் ஒருசேர சாகக்கிடக்க, உயிர் போகவிருக்கும் கடைசித் தருவாயில் ஒரு சட்டியில் அமிர்தம் ஊற்றி கிடைக்கிறதென்று வைத்துக்கொள்ளுங்கள். அதை குடிப்போறெல்லாம் சாகாமல் பிழைத்துக் கொள்வர் என்பதால், இந்தா இங்கிருந்து ஆரம்பித்து யார் யாருக்கு வேண்டுமோ வேகமாகக் குடித்துவிடுங்கள்’ என்று சொல்லிக்கொடுத்தால் உடனே நாமென்ன செய்வோம்? அதும் அந்தச் சட்டியை வாங்கிப் பார்த்தால் அந்த சட்டியில் காணக் கிடைத்ததாக ஒரு சொச்சமே இருப்பதாகத் தெரிகையில் முதல் மினர் அமிர்தத்தை ‘அவன் குடிக்கட்டுமே, அவன் குடித்து பிழைத்துக் கொள்ளட்டுமே, பிறகு நான் குடிக்கிறேன் என்று சொல்லி யாரேனும் ஒருவரேனும் நாம் பிறருக்கு விட்டுதந்துவிட்டு தான் குடிக்காமலிருக்க தயராகயிருப்போமா ?

மடக்கென்று பாதி சட்டியில் உள்ளதை எடுத்து அடுத்தவன் பிடுங்கிக் குடிப்பதற்குள் தானே குடித்துவிட்டு மகிழும் சுயநலப் புழுக்கள் தானே நாமெல்லோருமே?

யாரையும் இங்கே குற்றம் சொல்வதற்கில்லை. நாமெல்லோருமே அப்படித்தான். விட்டுக்கொடுத்துப் பழகாததால் இன்றைய நிலவரப்படி நாம் அப்படித் தான் ஆகிப்போயிருக்கிறோம். அதலாம் ஒருபுறமிருக்கட்டும், முதலில் அந்தப் பத்து குற்றங்களை ஒரு காகிதத்தில் எழுதிக்கொள்ளுங்கள். எது செய்தால் செய்தவர் தீயவர் என்றுக் கருதப் படுவரோ அதையெல்லாம் எழுதுங்கள்.

அப்படி எழுதி வந்தால் முதலில் எது வரும்? பொய், பொறாமை, தீண்டாமை, பேராசை, திருட்டு, புறங்கூறுவது, பிற உயிரரைக் கொல்வது, உயிர்களை உழைப்பை அவமதிப்பது, உழைக்காதிருப்பது, ஏமாற்றுவது, இன்னும் தற்கொலை மோசடி சுயநலமென பட்டியல் நீண்டுக்கொண்டே போகுமில்லையா?

இதில் எல்லாம் செய்பவர், பாதி செய்பவர், கொஞ்சம் மட்டும் செய்பவர், இல்லை எப்பொழுதேனும் கொஞ்சம் பொய் சொல்வேன், அல்லது பொறாமை படுவேன், பேராசையில் வீழ்வேன் என்பவரென; குற்ற மூட்டைகளை தன்முதுகில் சுமந்துகொண்டு, பிறரைப் பார்த்து ச்சீ என உடல் கூசும், பொறுப்பற்ற ஜென்மங்களாகத் தானே நம்மில் அதிகம்பேர் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

இதற்கெல்லாம் மூலக்காரணம் நாம் மட்டுமா என்று யோசித்தால், இல்லை. இதலாம் நாம் கற்றது. இப்படித்தான் நமக்கு வாழ்க்கை உண்மைக்கு அப்பாற்பட்டோ அல்லது யதார்த்தங்களை மீறியோ கற்பிக்கப்பட்டுள்ளது. நம்மில் நிறையப்பேர் ஒழுங்கற்று தவறாகவே வாழ்ந்து வளர்ந்து தன்னை சரியென்று மிகக் கெட்டியாக நம்பிக்கொண்டுள்ளோம்.

இதில், நாம் அடுத்தவருக்கு வேறு கற்றுத்தர முயன்றால் இவ்வுலகு என்ன கதியாகும்? இப்படி நானும் கெட்டு பின் அதையே சரியென்றெண்ணி, பிறரையும் கெடுத்துவிட்டு, மொத்தப் பேரை நாம் கிணற்றில் விழாமலே சாகப்போகும் பொதுவழிச் சாலையில் பயணிக்கவைத்த பாவமான பிறவிகள்தானே நாமெல்லாம்?

ஆக, நமது மொத்தக் குற்றங்களையெல்லாம் எடுத்து ஆராய்வதெனில், காடழித்தாலும் எழுத வெள்ளைத்தாள் கூட இல்லாமல் போய்விடலாம் என்பதால், குற்றங்களை விடுத்து, அது துவங்கும் ஒரு புள்ளியான ‘பார்வை’ என்பதை மட்டும் சற்று ஆராய எடுத்துக்கொள்வோம். காரணம் பார்வையில்தான் நாம் படிக்கிறோம். பார்த்துப் பார்த்துத்தான் வளர்கிறோம். பார்த்து நட என்றுச் சொல்லிச் சொல்லியே நம் சந்ததிகளை வளர்க்கிறோம். ஆக, நம்முடைய அத்தனை முயற்சியும்’ வெற்றியும்’ தோல்வியும்’ வாழ்தலும்’ அழிதலும்’ எதுவாயினும் சரி;  எதைக் கண்டோமோ அதன்படி பின் வாழ்வதாகவே உள்ளதொரு இயல்பைத்தான் இயற்கை நமக்கு காலங்காலமாக கற்றுத்தந்திருக்கிறது.

அதனால் எதைப் பார்க்கிறோமோ அதுவாகவே மாறிப்போகிறோம். எப்படிப்பட்ட சுற்றத்தில் வளர்கிறோமோ அப்படிப்பட்ட குணங்களைக் கொண்டே நம் உயிர்வட்டத்தின் முதல் புள்ளி துவங்குகிறது. முன்பெல்லாம் பார்த்தீங்கனா தெரியும், வீட்டிற்குமுன் அதிகப்படியாக ஒரு வேப்பமரம் வளர்ந்திருக்கும். அந்த வேப்பமரம் முழுக்க முழுக்க வெளிக்காற்றை உள்ளிழுத்து கரியமிலவாயுவை தான் செரித்துக்கொண்டு, பிராணவாயுவை வெளியே விடும். அதோடு அதன் இலைகள் உதிர மூளிகையாகவே கீழ் விழும். அதன் பழத்தை காக்கை தின்று கொட்டை போட அதுகூட மருந்தாகம். அதன் பட்டை வேர் என எல்லாமே பயனுற்று கடைசியில் மிஞ்சும் நெடுமரம் கூட வீடு கட்டவும், வாசகால் செய்யவும் உதவும். அப்படி வாழணும்டா மனுசன்னு அந்த மரத்தைப் பார்க்க பார்க்க நமக்கு புத்தியில் உரைக்கும்.

அப்படி உரைக்கனும்னுதான் மரத்தை சாமின்னு கும்பிட்டுது நம்ம சனம். நன்றியை வணக்கத்தின் வழி சொல்லி இயற்கைக்குக் கூட தான் கடனற்று வாழவே பழகியிருந்தோம் நாம். வாழும் உயிர்களைக் கண்டு வாழ்க்கையை செதுக்கினோம்.

இன்று உண்பது உறங்குவது நடப்பது பறப்பது என உயிர் வாழும் அத்தனையையும் நாம்ப கற்றுக்கொண்டது இயற்கையை பார்க்கமுடிந்ததால் தான். இயற்கையிடமிருந்துதான்.

பறவையை கண்டான் விமானம் படைத்தான்
பாயும் மீன்களில் படகினை கண்டான்
எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான்

என்று பாட்டாலும் பார்ததாலும் பல கதைகளை கேட்டதாலேயே இத்தனை தூரம் வளர்ந்திருக்கிறோம் என்பதில் ஒருதுளி சந்தேகமும் இல்லை. எனில், நம் பிள்ளைகள் பார்க்கவும், நமைப் பார்த்து வளரவும்  இன்று நாம் எதை உயர்வாக மிச்சம் வைத்திருக்கிறோம்?

உன் அப்பா அம்மா உனக்கு சிலதை தரவில்லை, அல்லது சரியாக சிலதை சொல்லிக்கொடுக்கவில்லை, சரி, நீ தவறு இல்லை. உன்னை மன்னிக்கலாம். ஆனால் இன்று நீயும் அதே தவறுகளை செய்தே வாழ்ந்து மடிகிறாயே, நீயென்ன செய்தாய்? உனை உலகிற்கு தந்த இந்த மண்ணிற்கு நீ எதை விட்டுச் செல்கிறாய்? நாளை உனது பிள்ளைகள் உன்னை கேள்வி கேட்குமே, அப்போதுனக்கு வலிக்காமல் சொல்ல உன்னிடம் என்ன பதிலுண்டு?

என் அப்பன் பாட்டன் தண்ணி அடிச்சான், பீடி சுருட்டு வழியே புகை குடித்தான், புகையிலை போட்டான், பொய் சொன்னான், பிறர் பொருட்களை அபகறித்தான், ஆசையிலேயே செத்தொழிந்தான், அவன் போய்ட்டான் சரி; நானும் அதையே செய்தால், நாளை என் பிள்ளைகளுக்கு என்ன நல்வழி கிடைக்கும்?

எந்த திரைப்படம் பாரு, “குடி குடியை கெடுக்கும், புகை நாட்டுக்குப் பகைன்னு” போடுற. போட்டாமட்டும் போதுமா? குடிகாரன் ஒருத்தன் குடிக்க கடைக்கு வரான், சில்லறை எடுக்க அவன் பின்னால எட்டி கஜானா திறப்பதற்குள்ள மேலப் பார்த்தா “குடி குடியை கெடுக்கும்” என்று பலகை வைக்கப்பட்டிருக்கு. அப்படியெல்லாம் வைத்துவிட்டு காலத்திற்கும் நாம் குடிகாரர்களாகவும் போதைக்கு அடிமையகவுமே வாழ்ந்துத் தீர்த்தால் நமது வாழ்க்கை சரியாக முடியுமா?

யோசித்துப்பாருங்க எத்தகைய முட்டாள்தனமிது? நானே குற்றம்னு சொல்வேன், ஆனா நானே செய்வேன். அதுபோல, நான் செய்வேன் அதை யாரும் மறுக்கக்கூடாது, ஆனால் என் பிள்ளைகள் செய்தால் அதை நான் மறுப்பேன்.  தொலைக்காட்சியிலக் காட்டுவேன், திரைப்படத்துலக் காட்டுவேன், தெருவில கவிதை எழுதி ஒட்டுவேன், கதை சொன்னாக்கூட குடியினைப் பற்றி பான்பராக் போதை பற்றியெல்லாம்கூடச் சொல்வேன், எல்லாம் கருமத்திலும் எல்லாம் கெட்டதும் இருக்கும். கேட்டா நான் சமகாலத்தை பதிய முயற்சிக்கிறேன்னு சொல்லி பொதுப் பார்வையிலிருந்து இன்று நான் தப்பித்துக்கொள்ளலாம். நாளை என் மனப்பார்வையை உற்றுப்பார்க்கையில் காலத்திற்கும் அது எனை குற்றவாளியாகவே வைத்திருப்பதை உணர்வேனே; அதை யாரால் தடுத்திடமுடியும்?

ஒரு செயலை பிறர் செய்யக்கூடாது எனில் முதலில் அதை நாம் செய்யக்கூடாது. பிறகு மெல்ல மெல்ல அதை பிறரையும் செய்யவிடக் கூடாது. பிறரை தடுக்கக் கூட போஸ்டர் அடிச்சி ஓட்டனும்னு இல்லை, மனதால் நல்லதை நடப்பவாறு நினைத்தால் போதும். தீயது தன்னைத்தானே மாறும். ஒரு செயல் தப்புன்னா அதை செய்ய உடம்பு கூசனும். அதைப் பற்றி காட்சியோ கேளியோ, கருத்தோ ஒன்னும் சொல்லாம சட்டுன்னு தீயதை விட்டொழிக்கணும். கூடி நான்கு நண்பர்கள் பேசினால்கூட தவறுகள் அற, பொய்யும் பேராசையும் பிறருக்கான தீங்கும் நீங்க நல்லொழுக்கத்தைப் பற்றிப் பேசிப்பழகனும்.

வெறுமனே முகத்துக்கு நேரா கேள்வி கேட்கிறேன் பாருன்னு, புகைப் பிடித்தல் குற்றமா? தண்ணி அடிக்கிறதெல்லாம் ஒரு தவறா? பாக்கு புகையிலை எல்லாம் இன்று சாதாரணம்னு பீத்திக்குற அல்லது குற்றங்களை நேர்மைபடுத்துற பழக்கத்தை முதலில் விடுங்கள். ஒரு மயக்கம் வந்தா மருத்துவம் பார்க்கும் அறிவுள்ள நாம், காசுகொடுத்து தன்னை மயக்கத்தில் ஆழ்த்திக் கொள்வது முட்டாள்தனமன்றி வேறென்ன?

நம்மப்பா அம்மா இது தப்புன்னு சொன்னாங்க திருத்திக்கொண்டோம். ஆசிரியர் இதலாம் தவறுன்னு சொல்லித்தந்தார் தவறை விட்டு நகர்ந்துக் கொள்கிறோம். நன்றாகத்தானே வளர்ந்து வருகிறோம், இடையே புகுந்து எல்லாம் சரியென்று சொல்லி சொல்லிக் கெடுக்க கெடுக்க நாம் நமது உண்மைநிலையிலிருந்து விலகி மீண்டும் பெரிய பள்ளத்தினுள் விழுந்துப் போகிறோமென்றால்; தவறு எங்கே நடக்கிறது? தவறை சரியென்று ஏற்றுக்கொள்வதில் தானே தவறிருக்கிறது. தவறை இப்போதைக்கு மட்டுமென்று அங்கீககரிக்கிற அந்த ஒற்றைப் புள்ளியை முதலில் மனதிலிருந்து கலைத்துவிடுங்கள். இன்று ஒருநாளைக்கு மட்டுமென்று எண்ணி தனது நிகழ்காலத்தை இழந்த அத்தனைப் பேருமே எதிர்காலம் முழுக்க துன்பப் படுவோமென்பதை உணருங்கள்.

சிலர் இன்னும் பெரிய வேடிக்கை செய்வர். குழந்தைகளை விட்டே சிகரெட் வாங்கி வரவும், வெளிவூர் போனால் சாராயம் வாங்கி வரவும் சொல்கிறார்கள். தோளுக்கு மேல் வளர்ந்தால் அவன் தோழன் தான். அந்த தோழன் நன்றாக வாழவேண்டாமா? சமுதாயத்தில் பிற உயிர் பற்றிய அக்கறையுள்ள நல்ல மனிதனாக அவனோ அவளோ விளங்கவேண்டாமா? மரத்தில் ஒரு இலை பறிப்பதுகூட பாவமென்று அஞ்சவேண்டிய மனசு ஆல்கஹாலுக்கும் நிக்கோடினுக்கும் அடிமையாகிச் சாவதா?  ஒரு செயல் தீது, உடலுக்குத் தகாது, இந்த சுற்றுச் சூழலை அது பாதிக்கும் எனில் அதை செய்யத் தவிர்ப்பதே அறிவுக்கு உகந்தது. பிறர் வாழ்வை உடம்பை உயிர்களை மெல்ல மெல்ல நசுக்கி மனதை கெடுக்கும் செயல் குற்றமன்றி வேறில்லை. அதிலும் அது மேலும் உள்ளூறி நம் எதிர்காலத்தையும் பாதிக்கும் எனில் அது பெருங்குற்றம்.

ஒரு சிகரெட்டின் புகை அருகில் உள்ளோரையும் சேர்த்து பத்துப் பேரினுடைய சுகாதரத்தையாவது கெடுக்கும். ஒரு நாள் அருந்தும் விஸ்கி பீயரில் உள்ள ஆல்கஹால் காலத்திற்கும் நமக்குள் தங்கிப்போகும் நாற்றத்தின் பெருவெளிக்கான ஒரு துளி நஞ்சாகவேனும் கலந்துப்போகும். எப்போ நம்மால அறிவுக்கு முன் நின்று சரியாகச் சிந்தித்து’ நல்லதை எடுத்து கெட்டதை விட்டுவிலகி’ மேன்மையாக வாழும் மனவுறுதியோடு இருக்கமுடியவில்லையோ, பிறகெங்க பொய் பொறாமை அவநம்பிக்கை அவதூறு அக்கறையின்மை பேராசை சோம்பல் பலவீனமென பல தீயதை விட்டுவிலகி நின்று நன்மையை நோக்கிப பயணிக்க இயலும்?

முதல்ல நாம நம்ம மாத்தனுங்க. கொஞ்சம் கொஞ்சமா நம்மை நல்லதைமட்டுமே நோக்கித் திருப்பனும். எப்படியோ கெட்டுப் போச்சு சமூகம், எங்கயோ அதோட கலந்துவந்து நின்னுட்டோம். ஆனா இப்போகூட நமக்கு சிந்திக்க அவகாசம் இருக்கே? சரிசெய்து வாழ மிச்ச வாழ்க்கையிருக்கே? நிம்மதியும் சந்தோசமும் உண்மையின் பூரிப்புமா வாழ எதிர்காலச் சந்ததியின் வாழ்க்கை முழுசா இருக்கே? அதை எண்ணி நமை நாம் சரிசெய்துக்கணும்.

லஞ்சம் வாங்குவது குற்றம். பிறருக்கு உதவிக்கு இல்லமா நாம் பொருள் சேர்ப்பது குற்றம். பிறர் வலியை தனதாக உணராது சுயநலக் கிடங்கில் வீழ்ந்திருப்பது குற்றமென ஆயிரம் குற்றங்களை சரிசெய்ய நமக்கு முதலில் நடத்தை சரியா இருக்கணும். யோசித்துப் பாருங்க; நாம சுவாசிக்கிற சுவாசத்தின் வழியே உள்சென்று உற்றுப் பார்த்தால்தான் பிறப்பின் ஞானமே கிடைக்கும் என்கிறார்கள் யோகிகள். ஆனா ஒரு சிகரெட் பத்துப் பேரோட சுவாசத்தை கெடுக்குது, ஒரு மாச சிகரெட் செலவு ஒரு வீட்டோட ஒரு வார சாப்பாட்ட முழுங்குது, ஒரு வருட செலவுல ‘ஒரு பெண் மணம் முடிக்க பணம் கிடைத்து ஒரு முதிர்கன்னிக்கு வாழ்க்கையை தருது’. ஆக; காலம் முழுதும் நாம் குடிக்காத ஓட்கா விஸ்கியும், புகைக்காத வெண்சுருட்டும் நல்லவனெனும் நற்பெயரை தந்து வாழையடி வாழையாக நமை அறிவோடு வாழவைக்கிறது.

பழகிப் பார்த்தீங்கன்னா தெரியும். சுத்தமா கண்ணியமா வெண்மையா பொய்யின்றி வாழ்வதில் ஒரு மகிழ்ச்சி இருக்கு. நிம்மதி இருக்கு. உண்மையின் ஆனந்தம் நாம் உண்மையாக வாழ்வதன்மூலம் தான் வெளிப்படும். பலா வெறும் காயாக மட்டுமே இருந்திருந்தால் அது ஒரு முற்களின் கூட்டாகத்தான் இருந்திருக்கும். முழுக்கப் பழுப்பதால்தான் அது சுவைகூடி உள்ளே உணர்வில் இனிக்கிறது. அப்படி நாமும் நன்மையால் பழுக்கப் பழுக்க ஆன்மாவின் இனிப்பை உணரமுடியும்.

ஒரு குவளை சாராயமோ அல்லது எந்தவித போதையையோ கொடுத்து, நம் எண்ணங்களை சிதறடித்து, மொழியை மூச்சுத் திணறவைத்து, உடம்பை சோர்வாக்கி, அதற்கெல்லாமும் நம்மிடமிருந்தே பணத்தையும் குணத்தையும் பிடுங்கிக் கொள்வோரை எவராயினும் எதிர்ப்போம். இன்றைக்கில்லை என்றாலும், நாளைக்கேனும் இழுத்துமூடுங்கள் மதுக் கடைகளையும் போதை தொழில்களையும். இன்றைக்கு சிரித்துக்கொண்டும் விளையாடிக்கொண்டும் புத்தகப் பை நிறைய அறிவை சுமக்கும் பிள்ளைகள் என்றைக்குமாய் நல்லறிவை கொண்டே வளர நாமே முன்னிற்போம்.

எப்படி ஒவ்வொன்றையும் இயற்கையிடமிருந்து கற்று உலகத்திற்குத் தந்தோமா, அப்படித்தான், நம்மையும் இயற்கையோடு வைத்து பல கண்கள் உற்றுப் பார்த்துக்கொண்டிருப்பதையும் உணர்வினால் அறிவோம். யாரும் பார்க்கவில்லையே என்று எவ்வித தவறை செய்வதைக் காட்டிலும், நான் பார்க்கிறேனே என்று தவறுகளைச் செய்ய தனக்குத்தானே அஞ்சுங்கள். நமக்குப் பிறக்கும் குழந்தைகள் அழியா செல்வங்களை இம்மண்ணிற்கு விட்டுச் செல்பவர்களாகப் பிறக்க நாம் அத்தகு உயர்ந்த தகுதியோடு வாழவேண்டுமென்று ஆசை கொள்ளுங்கள். எண்ணம் கொள்ளுங்கள். முழு லட்சியம் வைத்துக்கொண்டு உறுதியோடு நடைபோடுங்கள். அழுக்கென்று மனதுள் ஊறிக்கிடக்கும் மனமாசுகளை உறுதிகொண்ட மனதால் கழுவிக்கொள்ளுங்கள்

வளரும் குழந்தைகளுக்கு எண்ணம் சுத்தம், மனது புனிதம், சிந்தனையில் தெளிவு, வளர்ச்சியில் விவேகம், வேகத்தோடு பலம், பலத்தோடு பணிவு, பண்பில் நிறைவு, குறையில்லா நினைவாற்றல், இயற்கைக்கு எதிரில்லா உறுதி என எல்லாம் இருக்க அவர்கள் மகிழ்வோடு வாழட்டும். மண்ணின் பெருவளத்தின் அடையாளங்களாய் திகழட்டும். எல்லாவற்றிற்குமாய் சேர்த்து முதலில் கையிலிருக்கும் வெண்சுருட்டையும் பீடியையும் போதை பொருட்களையும் மதுக் கோப்பையினோடு சேர்த்துக் கீழே விடுங்கள். சட்டென விட்டுவிடுங்கள். இந்த நாள், இந்த நிமிடம், இது சரியென்று அறிவில் உரைக்கிற இந்த நொடியிலேயே எல்லாவற்றையும் உதறிவிடுங்கள். உள்ளே இழுக்கப்பட்டுவிட்டதால் உலகை அழிக்கும் புகையும், விழுங்கிவிட்டதால் கண்ணீரில் நனைத்து மிதக்கச் செய்யும் போதையின் ஈரமும் இதற்குமுன் தொட்டதே கடைசியானதாக இருந்துவிட்டுப் போகட்டும்..

வித்யாசாகர்

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in வாழ்வியல் கட்டுரைகள்! and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s