1
பூத்த பூ உதிர்வதென்பது இயல்புதானே? மரணமொன்றும் புதிதில்லையே? ஆனால் வெறுமனே வாழ்ந்துவிட்டு வேண்டாமலே மரணித்துப்போக நாம் தகுதியுடையவர்களா? வாழும்போது நாம் எவ்வாறு வாழ்ந்தோமென்று இறக்கும்முன் எத்தனைப் பேரால் நினைக்கமுடிகிறது? நினைத்தாலும் கண்ணீரால் நனையுமந்த கடைசி தலையணையுள் பதிவாகும் நம் கவலைகளை யாரறிந்து தனை திருத்தி மீண்டும் நன்றாக வாழத் தனை பழகிக்கொள்ளப் போகின்றனர்? பின் யாருக்குமே நமை முழுதாகத் தெரியாமல் வாழ்ந்து மறைத்த பல ரகசியங்களோடு இறத்தலென்பது மனதை பாரப்படுத்தி மண்ணை கனக்கச் செய்யாதா? அதனால் தான் ரகசியங்களால் புதையுண்ட உடல்களை அரித்த மண் வெடித்து பூகம்பமாகவும் பொங்கும் எரிமலையாகவும் கனன்று கனன்று எஞ்சிய உலகை அழிக்க இயற்கை காத்து நிற்கிறதோ?
2
பிறகு நாம் என்னதான் செய்வது?
என்ன செய்வதென்பதை வாழும்போதே யோசிப்போம். இந்த உடல் வரம். இந்த உயிர் வரம். இந்த வாழ்க்கை இனிது. நம்மிடமிருக்கும் இந்த ஆற்றல் வலிது. உலகை மடித்து உள்ளங்கைக்குள் மூளையால் அடக்கிக் கொண்டது அறிவியல் எனில் ஒரு விரலால் தாங்கிநிற்கும் பலத்தை மனதால் உடலால் பெறமுடியும். அதெப்படி என்று சந்தேகிப்பீரெனில் ஒரு தீக்குச்சியை எடுத்து வெய்யிலில் போடுங்கள், அது உடனே எரியுமா? எரியாதுதானே? அதே ஒரு லென்ஸ் எடுத்து சூரியஒளியை அந்த தீக்குச்சியினுடைய மருந்தின்மீது குவியுமாறு காட்டிப்பாருங்கள், அந்த தீக்குச்சி உடனே தீப்பற்றி எரியும், காரணம், “எங்கு சக்தியானது ஒருமித்துக் குவிக்கப்படுகிறதோ அங்கிருந்து வேறொரு அதீத சக்தி விரைவாக வெளிப்படுகிறது”.
ஆக, அப்படி, எண்ணத்தை குவித்து திறமையை வெளிக்கொண்டுவரல் என்பதொரு கலை. அந்தக் கலையைத்தான் தியானம் வழியே நிகழ்த்தி உடலைத் தனியாகப் பார்க்கவும், மனதை தனியாக அசைக்கவும் நம் பெரியோர் கற்றுத் தந்துள்ளனர்.
3
தியானம் என்பதில் பலர் பலவாறு சொன்னதும், அங்ஙனம் அவரவர் வென்றதுமாய் நிறையப் புத்தகங்களும் செவிவழி பாடமும் பயிற்சியும், உண்மையின் குறிப்புகளுமென ஏராளமுண்டு. அவைகளெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். இங்கே நமக்கு மனதின் எண்ணத்தைக் குவித்து செயலை வெற்றியாக வெளிக்கொண்டுவர ஒரு இலகுவான பயிற்சி தேவைப்படுகிறது. ஆடும் மனதை அடக்கி அலைபாயும் எண்ணத்தை சீராக்கி ஒரே இடத்தில் நிறுத்தி, வேண்டுவதையெல்லாம் பெறும் சக்தி மனிதனிடம் உண்டென்பதை அறிய இத்தகையப் பயிற்சிகள் பெரிதும் உதவும்.
தன்னை தானறியும் மனிதன், செருக்கோடு அலைந்தால் பூமி தாங்காதென்று எண்ணிய முன்னோர், உனக்கும் மேல் ஒருவன் உள்ளான் அவனை நம்பு எல்லாம் நடக்குமென்று இயற்கையின் சக்திக்கு நன்றியறிவிக்கும் விதமாக கடவுள் நம்பிக்கையை முன்வைத்து, எல்லாம் அவன் செயலென்று கற்பித்ததன்பேரில்; நம்பிக்கையின் முதன்மை தன்மையென்பது இறையினிடத்து ஒன்றே என்றாகி, அது பின்னர் பலவாக மாறி, இன்று தனையே மறக்கும் நிலைக்கு நாம் வரப்பட்டுள்ளதையும் நாம் அறியவேண்டும்.
4
ஒரு யானைக்குட்டியை யானைப் பாகன் மேய்ச்சலுக்கு கொண்டுபோய் திரும்பிவருகையில் ஒரு சிறிய கொம்பு நட்டு அதில் அந்த யானைக்குட்டியை கட்டிவைப்பானாம். சிலவேளை அவன் மேய்ச்சலுக்குப் போக தாமதமாகையில் யானைக்குட்டிக்கு பசியெடுத்து தனைக் கட்டப்பட்டுள்ள கயிற்றை இழுத்து இழுத்து அறுத்துப்பார்க்க முயன்று அறுக்கமுடியாமல் தோற்றுப்போகுமாம். இப்படி எத்தனையோமுறைப் போராடியும் அந்தக் கயிற்றை அறுக்க முடியவில்லை என்பதால் அவன் வந்து அவிழ்த்து விடும்வரை அந்த யானை அந்த இடத்திலேயே பசியோடு காத்திருக்குமாம்.
பின் வளர்ந்து பெரிதாகிப்போன அந்த யானையை காட்டிற்கு கொண்டுபோய் விட்டால் போதும், வெறி வந்தாற்போல் பெரியப் பெரிய மரங்களையெல்லாம் சர்வசாதரணமாகப் பிடுங்கி தரையில் எறியுமாம். அட்டகாசம் தாங்கமுடியாமல் யானைப்பாகன் அந்த யானையை ஓட்டிவந்து அந்தச் சிறிய கொம்பில் கட்டிவைத்துவிட்டு வீட்டிற்குப் போய்விடுவானாம். அந்த யானை மீண்டும் தன்னை பழையப்போலவே கருதிக்கொண்டு மறுநாள் அந்த யானைப்பாகன் வந்து யானையை அவிழ்த்துவிடும்வரை அந்தக் கயிற்றை இழுத்துக்கூட பார்க்காதாம்.
காரணம், அதைப் பொறுத்தவரை, அந்தக் கயிறு ஒரு அறுக்கமுடியாத கயிறு. சிறு வயதிலிருந்து இழுத்து இழுத்துப் பார்த்து அறுக்கமுடியாமல் போகவே ஒரு கட்டத்தில் இனி அதை அறுக்கவே முடியாதென்று எண்ணிக்கொண்டே அந்த யானை வளர்ந்துவந்ததால், அந்த யானைக்கு தான் வளர்ந்து காட்டையழிக்கும் சக்தியை பெற்றபோதுகூட அந்த சிறிய கொம்பை பிடுங்கிக்கொண்டு ஓடமுடியாது என்றே எண்ணம் இருந்துள்ளது.
நாமும் இப்படித்தான், இந்த மரத்தில் கட்டிவைத்த யானையைப் போலவே சிறுவயது எண்ணங்களையே மனதில் சுமந்து வாழ்ந்துகொண்டுள்ளோம். வளர வளர அறுபடவேண்டிய பல நம்பிக்கைக்குரிய கட்டுகளை அறுத்துக்கொண்டு சுதந்திரமாகப் பயணிக்காமல், காதால் கேட்டதையும் யார்யாரோ சொன்னதையுமே நமக்கான கடைசி வட்டமென்று எண்ணிக்கொண்டு வாழ்ந்துவருகிறோம்.
5
சாமி.. வழிபாடு.. பண்டிகை.. கலாச்சாராமெல்லாம் மனிதரின் நன்மைக்கானதும், மேன்மையை எதிர்நோக்கி நாம் கட்டமைத்ததும் மட்டுமே. பிறகு அந்தந்த வேளை வருகையில் அததற்கான விளக்கங்களை எடுத்துச் சொல்லி வளரும் குழந்தைகளை விடுதலை உணர்வோடும்’ போதுமான பண்போடும்’ பகுத்தறியக் கூடியத் தெளிவோடும்’ மனித மற்றும் உயிர்களின் மீதான மதிப்பும் மரியாதையோடுமாய் வளர்க்கவேண்டியது நமது கட்டாயமாகிறது.
அங்ஙனம் அவிழ்க்கவேண்டிய கட்டில் ஒன்றும், புரியவேண்டிய உண்மையில் ஒன்றுமானதுதான் அந்த “நம் ஆத்தா கண்ணை குத்தும்” என்று சொன்னப் பொய்யும். எல்லாம் அவன் செய்வான் என்று நம்பவைத்த நம்பிக்கையுமாகும். ஏனெனில் இன்று அத்தகையப் பொய்யில் வளர்ந்த மூடப்பழக்க வழக்கங்களும், அவசியமற்ற நம்பிக்கைகளும் பயமும் மாறவேண்டுமெனில் குறைந்தது ஆயிரமிரண்டாயிரம் வருடங்களாவது இனியும் நமக்குத் தேவைப்படும்போல்.
6
கோவில்.. சாமி.. என்று காட்டும் அக்கறையை இன்று நாம் நம் மனிதரிடத்தே காட்ட மறுக்கிறோம். சாகும் மனிதனைவிட சாகாதக் கல்லிற்கு ஊற்றும் பாலும் பூஜையும் மட்டுமே பெரிதென்று நம்பிக்கொண்டது நம் பெருத்த மூடத்தனம்தான். வெறும் ஒரு கல்லில் ஒரு கோவிலில் மட்டுமல்ல சாமி. இந்த அண்டசராச்சரமும் இறைசக்தியால் நிறைந்தது. எதெல்லாம் இயற்கையிலிருந்து வந்ததோ அதெல்லாம் தெய்வீகமானதுதான். கல்லை நம்பி கையெடுத்து வணங்கினாலும் கல் நம்மைக் காப்பாற்றும். மரத்தை நம்பினாலும் மரம் நமைக் காப்பாற்றும். அத்தகைய நம்பிக்கைக்குரிய வகையில்தான் இயற்கையெனும் இறைசக்தி நம்முள் எங்கும் பரவியுள்ளது’ என்றுச் சொன்னதை நாம் வெறும் ஒரு கல்லிலும் மரத்திலும் மட்டுமே உண்டென்று நம்பிக்கொண்டது பிழை.
கையெடுத்து வணங்கி உள்ளே பேசும் சொற்கள் ஆழ்மனதுள் பதியுமெனில் அதற்கு செயல்வடிவம் ஏற்பட்டு நம்பியது நடப்பதற்கான சாத்தியக்கூறுகளும் அமைவதென்பது இயற்கைச் சக்தியின் இயல்பிற்கு உட்பட்டதே. இதைத்தான் எண்ணங்களே செயலாகும் என்றார் விவேகானந்தர்.
7
தனை தானுணர்ந்து, தனக்குள் பேசி, தான் வளர வளர பூரண அன்புகொண்டு பிறருக்காய் வாழ்வதையே ஆன்மிகம் போதிக்கிறது. உள்ளே கடைந்து வெளியே தெரியும் காட்சியின் சூழ்சுமத்தை அறியவே “நானே கடவுள்” என்றது மதம். அனால் நாமென்ன செய்தோம்? நானே கடவுள் என்பதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல், தன்னைத்தான் முழுதாக நம்பாமல், எங்கும் நிறைந்த இறைத்தன்மையை சுயநலமறுத்துக் காணாமல், வெறுமனே கடவுள் எங்கென்று தேடித் தேடியே காலத்தை கழித்துவிடுகிறோம். எது உண்மை என்றுப் புரிவதற்குள் மரணம் நெருங்கி வாழ்நாள் முடிந்து மீண்டும் மறுபிறப்பெடுத்தும் உண்மையறியாமலே மரணிக்கவும் தயாராகிவிடுகிறோம்.
ஆக பிறருக்காக, பிறரின் அனுபவத்தின் பாடத்திற்காகக் காத்திருந்ததையெல்லாம் விட்டுவிட்டு விழிப்பென்னும் வெளிச்சத்திற்கு நாமெல்லோரும் வரவேண்டும். எதைக் குறித்தும் சுதந்திரமாய் தனது அறிவிற்கு புரியும்வகையில் சிந்திக்கவேண்டும். பிறருக்கும், மொத்த உலகிற்கும் நல்லதை ஏற்படுத்தும் வகையில் மட்டுமே நம் ஒவ்வொருவரின் வாழ்க்கயை நாம் அமைத்துக்கொள்ளவேண்டும். எங்கு நமது அசைவால் ஒரு நன்மை நடக்குமோ’ அங்கு அந்த இறைசக்தி நிறைந்திருக்கும் என்பதை அனுபவத்தால் புரிந்துணரவேண்டும்.
8
நாமெல்லாம் கடவுளின் பிள்ளைகள். இயற்கை ஈன்றெடுத்தக் குழந்தைகள். நமக்கு வணங்கினாலும் வணங்காவிட்டாலும் அந்த தாயுமான சுவாமி துணை இருந்தேத் தீரும். பிறகெதற்கு கடவுள் கோவில் மதம் எனும் பல கட்டுக்குள் அவிழ்க்கவே முடியாத அளவிற்குபோய் ஆழ்ந்துவிடுவானேன்? நம்பிக்கை ஏற்கும் மறுக்கும் மாற்றிக் கொள்ளும் அளவில் இருக்கையில்கூட அது கேடில்லை.
மாறவே முடியாது, திருந்தவே ஒன்றுமில்லை, இதுதான் சரி என்று ஒன்றிற்குள் மட்டுமே சென்று அடங்கிக் கொண்டால் உண்மையை அதுவாக உணர்ந்தறிவதெப்போது?
மாற்றம் என்பது இருந்துக்கொண்டேயுள்ளது. இந்த ஒவ்வொரு கணமும் மாறிக்கொண்டேயுள்ளது. நாமும் மாறிக் கொண்டேயுள்ளோம். பிறகு நமது நம்பிக்கையை மட்டும் ஆராயாமல் இதுதான் சரி என்று அழுத்திக்கொள்வதைப பற்றி நாம் உணர்வுரீதியாகச் சிந்திக்கவேண்டாமா?
9
சிந்திப்போம். எல்லாவற்றையும் சிந்திக்கும் சமயத்தில் நமைப் பற்றியும் நாமறிந்துகொள்ள முயற்சிப்போம். நமையறிந்துக் கொள்ளல், நம் பலத்தை, நமக்குரிய பண்பை, இயல்பான நற்குணங்களை அறிந்துக்கொள்ளல் நமது கடன். பிறகு, தனை தானறிந்துக்கொள்வதெனில் வேறென்ன செய்வது?
தனைப் பார்க்கவேண்டும். எந்த மதமும் போதனையும் அறிவில் முடிவாகச் சென்று ஏறிக்கொள்ளாதளவில் அமைதியாக அமர்ந்து., தனக்குள்ளே முழுவதுமாய்ச் சென்று, தனை முற்றிலுமாக நான் யார் என்று அறியுமாறு பார்க்கவேண்டும். தான் மாறிக்கொண்டே இருப்பதையும், இந்த உலகம் மாறிக்கொண்டே இருப்பதையும் பார்த்துணர வேண்டும். அது முயன்றால் அறிவுள்ள ஒவ்வொரு உயிர்க்கும் முடியும். நமக்குள் ஏற்படும் மாற்றத்தையும் நாம் பார்க்கமுடியும். உள்ளே சென்றுப் பார்த்தால் உள்ளிருக்கும் சாமி மட்டுமல்ல வெளியிருக்கும் உலகத்தின் மொத்தத் தோற்றமும்கூட நிதர்சனமாய் தெரியும்.
10
ஆக, தனை தானே அறிவதென்பது யாது? அதெப்படி தனைத்தானே உள்ளே பார்ப்பது?
இப்படி கேள்வி வரும்வேளை; உள்ளே சென்று நம்மை நிரப்பிக் கொண்டுள்ளது யார் என்றும் யோசியுங்கள். உடம்பெல்லாம் காய்ச்சல் அடிக்கையில் வெப்பத்தை நீக்க உடம்பெல்லாம் தண்ணீர் ஊற்றுகிறோமா அல்லது நெற்றியில் மட்டும் துணி நனைத்துப் போடுகிறோமா? யோசியுங்கள். ஒரு அடி அடிக்க பொருள் உடைவதில்லை, அடிக்க அடிக்க எதுவும் உடைகிறது. யோசியுங்கள். நூறடி நடக்கவேண்டும். கடக்கவேண்டும். ஒரு ஒரு அடியாய் நடக்கையில் நூறடியை மெல்ல மெல்ல கடந்தேவிடுகிறோம். யோசியுங்கள்.
இப்போ நமை நாம் அறிய நாமென்னச் செய்யலாமென்பது ஓரளவேனும் புரிந்திருக்கும். ஆம், மெல்ல மெல்ல நகர்ந்தால், உறுதியாகத் தொடர்ந்தால், உண்மையை அறிந்துவிடலாம். விபாசனா எனும் முறையில் புத்தர் மிக அழகாக இந்த தன்னைத் தான் அறிதலைப் பற்றி எடுத்துக் கூறியுள்ளார். ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன் வந்த வேதமான ரிக் வேதம் இதைக் குறிப்பிடுவதாய் புத்தர் சொல்கிறார். அது தான் நம் உடலினுள்ளேச் செல்லும் காற்றுவழியே உள்புகுந்து வெளியிலிருக்கும் புறஉலகை கண்கொட்டாமல் பார்ப்பது.
11
விடிகாலையில் அல்லது எப்போதெல்லாம் மனதொத்துப் போகிறதோ, அமைதியாக அமர நேரமும் இடமும் கிடைக்கிறதோ அப்போதெல்லாம், கண்மூடி முதுகெலும்பை நேராக்கி அமர்ந்து, நாசி முனையிலோ அல்லது நெற்றியின் நடுவிலோ சிந்தனையைக் குவித்து, தனது எல்லா வெளிஉலகத் தொடர்பையும் இந்த உடலிலிருந்து, சிந்தனையிலிருந்து மெல்ல மெல்ல அறுத்துவிடுகையில், இயற்கையோடு இயற்கையாக நாம் முற்றும் ஒன்றிநிற்கையில்; நமை நாம் எத்தனைப் பெரிய சக்தி என்று உண்மையாய் அறியவும் உணரவும் முடிகிறது.
அதுபோல், உள்செல்லும் காற்று வழியே, அதாவது நாசி துவாரம் வழியே சென்று மனதின் மொத்த எண்ணங்களையும் நாசிமுனையில் குவித்து, எண்ணங்களின் கூட்டாக இருக்கும் மனத்தை மெல்ல அசைத்துப் பார்த்து, அசைவது உணரக் கிடைக்கையில் அதை நெற்றிக்கு மாற்றி பின் நெற்றியிலிருந்து கழுத்தில் கொண்டுவந்து பின் கழுத்திலிருந்து மார்புநடுவே வைத்து பின் முதுகெலும்பின் அடியில்’ உச்சந்தலையிலென மாறி மாறி முகம்’ காது’ கழுத்து’ உடம்பு’ என உச்சிமுதல் உள்ளங்கால் வரை வேறெங்கும் தொடர்பின்றி உள்ளேயே பார்த்துவருகையில், உலகின் மொத்தப் படைப்புமே மாற்றத்திற்கு உரியது என்பதையும், அசையாமல் அமர்ந்திருக்கும் நாம் எப்படி கணத்திற்கு கணம் மாறிவருகிறோம் என்பதையும் அறியமுடிகிறது.
அங்ஙனம் தொடர்ந்து செய்துவர, மாற்றத்திற்குட்பட்ட அனைத்தின் மீதான பற்றும் பேராசையும் மெல்ல மெல்ல குறைகிறது. நாளடைவில் எல்லாம் பொது எல்லாம் ஒன்றென்று மனதுள் அமைதி நிறைந்த எண்ணம் வருகிறது. பிறகும் எண்ணம் ஓரிடத்தில் குவியக் குவிய நமக்கான நாம் கொண்டுவந்துள்ள நம் சக்தி மெல்ல மெல்ல வெளிப்படத் துவங்குகிறது.
அங்ஙனம் நமது சக்தி வெளிப்பட்டு, எல்லாம் ஒன்றே, இயற்கையின் அணைத்துப் படைப்பும் மாற்றமெனும் ஒரு நியதிக்கே உட்பட்டது என்று புரிந்துப் போகையில், அந்தப் புரிதலில் வரும் அமைதி முழு ஞானத்தை கொடுக்கிறது. அங்ஙனம் மீண்டும் மீண்டும் அடையும் அமைதியில் மனம் லயித்துப்போய்; மனமானது எல்லையில்லாததொரு தனையறிந்துவிட்ட ஆனந்தத்தில்ஆழ்ந்துவிடுகையில்; உயிர்களின் மீதானப் புரிதலும், உயிர்கள் அனைத்தும் சமம் எனும் உண்மையும், எல்லோரும் நலமாக வளமாக வாழ வழ நாமும் நலம்பெறுவோம் வளம் பெறுவோம் எனும் மொத்த இயற்கைச் சக்தியின் நெருக்கமும் மானசீகமாக விளங்க ஆரம்பிக்கும்.
12
இப்படி ஒன்றன்பின் ஒன்றாக எல்லாமே இயற்கைச் சக்தியின் இயல்புக் கூறுகளிலிருந்து நமக்குக் கிடைப்பது மட்டுமே என்றுப் புரிந்துப்போகையில்; அதைப் புரிவதற்கான ஏற்பாடு மட்டுமே மதங்களின் வழி கற்றச் சடங்குகளும் சாஸ்திர முறைகளும் என்பதும் புரியவரும். அது தெள்ளத் தெளிவாகியப் பின்னர் மனது அங்கே போட்டியிடுவதை விட்டுவிட்டு அவசியமற்ற மூடநம்பிக்கைகளிலிருந்து விலகிக்கொள்ள தானே முற்படுவதை அறியவருவோம்.
ஆக இப்படி மெல்ல மெல்ல அவசியமற்ற எல்லா கட்டுகளும் விலகி, சமமாக இருத்தல், நடுநிலையோடு வாழ்தல் எனும் நிலை உள்புகுந்து, எல்லோரும் சமம், எல்லோரும் ஒன்று, நன்மை நடத்தல் எனில் அது எல்லோருக்கும் நடத்தல் வேண்டும், ஒன்று நன்மைக்கென புரிதலெனில் அது எல்லோருக்கும் புரிதல் வேண்டும், மகிழ்ச்சி என்பது அனைத்து உயிர்க்கும் பொதுவானது எனும்’ உலக உயிர்களின் பாகுபாடற்ற நன்மை குறித்து சிந்தித்து வாழும் நற்தன்மையானது தானே எல்லோருக்கும் ஏற்பட்டுவிடும்.
அனைத்தும் அனைவருக்கும் பொது எனும் புனிதத்தன்மை மேலோங்கி, பிறரை அச்சுறுத்தல், பிறருக்கு துன்பம் இழைத்தல், பிறரை ஏற்ற இறக்கத்தோடுப் பார்த்தல் போன்றதான தீண்டாமை குற்றங்கள் நீங்கி எல்லாம் இறைமயம் என்று தூய அன்போடு எல்லோரையும் அணைத்துக்கொள்ளும் நன்னிலை பரவலாக எல்லோருக்குள்ளும் உருவாகும்.
மனிதனுக்கு உண்மையில் அந்த நிலைதான் வேண்டும். தன் கையிலிருப்பது பிறருக்கும் உரியதென்பதை மனிதன் ஏற்கவேண்டும். எனக்கு நாளைக்கு வேண்டுமே என்று எடுத்து வைத்துக் கொள்வதைக் கூட போகட்டும் மனிதன் மெல்லத்தான் மாறுவான் என்று விட்டுவிடலாம். ஆனால் அடுத்த வருடத்திற்கு வேண்டும், அடுத்த தலைமுறைக்கு வேண்டும், அதுவரை எனக்கருகில் எவன் செத்தால் எனக்கென்ன எனும் சுயநலகுணமெல்லாம் புழு பூச்சிக்குக் கூட இருக்காது. இருக்கக் கூடாது. இருக்காது.
13
நம் பக்கத்தில் பட்டினியோடு ஓருயிர் அமர்ந்திருக்க நாம் முழு வயிறு நிறைய உண்போமானால்; நாம் மனித தன்மையை இழந்து நிற்கிறோம் என்றே அர்த்தம்.
எனவே, தனைப் பற்றி அக்கறை கொள்ளும் அதே அளவில் பிறர் பற்றிய வருத்தத்தையும் ஏந்தி நடத்தல் வேண்டும். பிறருக்கும் சேர்த்து சிந்தித்து வாழும் வாழ்க்கயை அனைவரும் பழக்கிக்கொண்டால் நமக்கான பசியை யாரோ தீர்த்துவைப்பதற்கு முயல்வதையும் நம்மால் காணமுடியும். அப்படியொரு சமதர்மம் இம்மண்ணில் மலரவேண்டும். அதற்கு நாம் நடுநிலைத் தன்மையை அடையவேண்டும்.
நடுநிலைத் தன்மையை அடைய எண்ணத்தை ஒன்று கூட்டுங்கள். ஓரிடத்தில் கூட்டி, மெல்ல மெல்ல ஏற்றயிறக்கத்தைக் களைந்து யாதுமற்ற ஓருயிராய் அமைதியோடு உட்காரப் பழகுங்கள். அப்படி உட்கார உட்கார சுயநலம் தீர்ந்து, தன் மீதான, தனது என்றிருக்கும் அதாவது நான் என்றிருக்கும், எனது கடவுள்’ எனது வீடு’ எனது நாடு’ எனது பொருள் எனும் தனதான அத்தனைக் கவலையும் நீங்கி, எல்லோருக்குமாய் வாழும் நிம்மதி முழுதாய் வரும்.
இயற்கையோடு கலந்து நிற்கையில் தனைமீறிய ஒரு மெத்த பலமும் கம்பீரமும், தன்மீதான மதிப்பும் எழும், அதோடு பிறருக்கென வாழத் துவங்கியுள்ள வாழ்க்கை கர்வத்தை அழித்து நம்பிக்கையை பெருக்கி நன்னடத்தைக்கு நமை பழக்கி நன்னிலம் நோக்கி நகர்த்திச் செலுத்தும்.
14
நம் நல்லவைகளெல்லாம் நம்மோடு மட்டுமே இருந்துவிட்டுப் போவதில்லை. அதன் பொருட்டு உண்டாகும் அதீத நன்மையின் பயனானது நம்மோடு சேர்த்து, அருகில் வருவோரையும், நம்மோடு நெருங்கியிருப்போரையும் நன்றாக வைத்திருக்கும். பிறப்பின் பயணம் வெகுவேகமாக நகர்ந்து உலகின் பாகுபாடற்ற கைகளைக் கோர்த்துக்கொண்டு இயற்கையின் மேன்மைதனில் உயர்வாக நமை கொண்டுசேர்க்கும். இயற்கையோடு ஒன்றி ஒன்றி இறப்பு என்பதில்லாதுபோக, நிலைப்பில் ஆழ்ந்துப்போவோம். நாம் போனப் பாதையில் நம் சமூகம் வரும். நம் கால்தடம் நாளையத் தலைமுறைக்கு நல்வழியைக் காட்டும். அனைத்து உயிர்க்கும் அது அமைதியை எல்லையில்லா பரப்பிரம்ம ஆனந்தத்தை தரும்.
15
எல்லோரும் எல்லாமும் பெற்று நன்மையோடு வாழ எண்ணத்தை சீர்செய்துக் கொள்ளுங்கள். சிந்தனையை நேராக்கிக் கொள்ளுங்கள். மனதை ஒருமுகப்படுத்தி உள்சென்றுப் பார்த்து பார்த்து பழகுங்கள். உள்ளிருக்கும் தெய்வம் புரிகையில், கல்லிற்கான செலவும், கோவிலிற்கென மேற்கொள்ளும் உயிர்களின் மீதானப் புறக்கணிப்பும் வெகுவாகக் குறையும்.
சாமியின் மீதான நம்பிக்கையை ஏற்படுத்தும் பக்தியும், கோவில்களும், சிலைகளும், வழிபாடுகளும், மகிழ்ச்சியை கொண்டாட்டத்தைத் தரும் பண்டிகைகளும் உயிர்களைக் கொல்லாதளவிற்கே வேண்டுமென்பது நன்றாகப் புரியவரும்.
ஆக, இங்கே நமது நோக்கம் எதையோ மறுப்பதோ மாற்றுவதோ பெரியோர் சிந்தனையை நம்மிலிருந்து அகற்றுவதோ அல்ல; பெரியோர் கூறிய பல சம்பிரதாய வழிமுறைகளின் சாராம்சமும்’ மனிதம் மிக மனிதர் வாழவேண்டும் என்பதை; அழுத்தமாக நேர்த்தியாக உணர்ந்ததை உணர்ந்தவாறு எடுத்துச்சொல்ல முயற்சித்திருப்பது மட்டுமே. எனவே, ஊர்தோறும் கோவில் கட்டி, கோவில்களின் வழி பண்பை மேலோங்கச் செய்து, பல வழிமுறைகளின் வழியே புதியக் கலாச்சாரத்தை ஏற்படுத்தி நமை மெல்ல மெல்ல ஒரு ஒழுக்கப் புள்ளிக்கு நகர்த்த பிரயத்தனப்பட்ட முன்னோரின் சமயம் தவறென்று அர்த்தம் ஆகாது. அதேநேரம் அதை காலப்போக்கில் தவறாக்கிவிட்ட நாம் முயன்று மீண்டும் தவறுகளை சரிசெய்து உயர்வாக வாழ்வதும் அறிவார்த்தமானது.
16
உள்ளிருக்கும் சாமிக்கு அர்ச்சனை வேண்டாமென்றெல்லாம் சொல்ல நாம் முன்வரவில்லை; மாறாக வெளியில் ஒரு வாழைப்பழத்திற்காக ஒரு ஜீவனை நிற்கவைத்திருத்தல் பிழை என்றுப் புரியவரும் தன்மை நமக்குள் ஏற்படவேண்டும். அது ஏற்படாது உள்ளே பாலூற்றியோ தேனூற்றியோ சாமிக்கு இனித்துவிடாது. பகுத்தறிவது ஆன்மிகத்திற்கு எதிரல்ல, பகுத்தறிந்து ஒரு உயிர்க்கும் வலிக்காது நடத்தலே ஆன்மிகம் கற்பிக்கும் பாடமாகும். யாரும் யாருக்கும் இங்கே எதிரியில்லை. ஏதும் எதைவிடவும் பெரிதில்லை. எல்லாம் நாம் படைத்தவை. எல்லாமே நமது வழித்தோன்றலின் வழிவந்த ஏற்பாடு, எல்லாம் நமக்கும் நமது சந்ததிக்குமான நன்மையை ஏற்படுத்துமென்றுக் கருதி ஏற்படுத்திய வெவ்வேறு பாதைகள் மட்டுமே. அதை அவ்வப்போதைய தன்மைக்கேற்பப் புரிதலில் சிக்கல் ஏற்பட்டதால் வந்த விளைவே பல பாகுபாடுகளையும் சுய அடையாளங்களுக்குள் விழுதலையும் முன்னிறுத்திவிட்டது காலம்.
17
கட்டைவிரலிலிருந்து நான்கவது விரலில் மோதிரம் இடுவதிலிருந்து கழுத்தில் அணியும் மாலை, காதில் மட்டும் கம்மல், தெருவில் போடும் கோலம், வாசலில் தெளிக்கும் சாணம், பூஜைக்குப் பின் தெளிக்கும் மஞ்சள், சாமிக்கு ஏற்றும் கற்பூரம், கதைகளோடு ஏற்படுத்திய விழாக்கள், வருடந்தோறும் வந்துப்போகும் பண்டிகை என எல்லாவற்றிற்கும் சரியான முறையான அர்த்தமுண்டு. ஆனால் அந்த அர்த்தத்தின் பின் மனிதரின் நம்பிக்கை மட்டுமே வலுக்குமெனில் அங்கே வருத்தமில்லை. நாளுக்கு நாள் அது நன்மையின் பயனாக மட்டுமே மாறுமெனில் அங்கே எதிர்ப்புமில்லை. மாறாக சுயநலம் வலுத்து எனது உனது என்றாகி கோபத்தில் வாளெடுத்து மனிதத்தை வீழ்த்திவிட்டு ரத்தம் சாமிக்குச் சமர்ப்பணம் என்றால் அது மறுக்கத் தக்கதில்லையா? உடனே செய்தது யார்? நான், நீ, அவன், அவள், அவர்கள் என்றெல்லாம் மீண்டும் புறப்பட்டு விடாதீர்கள். இது நாம் வாழும் சமூகம். இது நாம் பிறந்து சாகப்போகும் நமக்கான மண். இங்கே நடக்கும் நன்மைக்கும் தீமைக்கும் நாம் தான், நாம் அனைவரும் தான் பொறுப்பு.
18
ஏதும் கட்டளையிட்ட உடனே மாறிவிடுமெனில் அங்கே நாளடைவில் சுதந்திரம் என்பதும் செல்லாக்காசாகி விடும். உணர்வு யாரினுடையது என்றாலும் அது மதிக்கப்படல் வேண்டும். எனவே யாருக்கும் கசக்காமல், யாருக்கும் வலிக்காமல், தனக்காக தனது விழிப்புணர்விற்காக எதையும் நன்மைசார்ந்து சிந்தியுங்கள். எது தன்னையும் விழிப்படையச் செய்யும் பிறருக்கும் பிற உயிர்க்கும் நன்மையை ஏற்படுத்தும் என்றுப் புரிகிறதோ அந்நிலையில் நின்று மொத்த உலகிற்குமாய் அனைத்து உயிர்களுக்கும் நன்மை நடக்கும்விதமாய் ஒவ்வொன்றையும் சிந்தித்துப் பாருங்கள். பிறகு எல்லாமே மெல்லப் பயிற்சியினால் வசப்பட்டுப்போகும் என்பது புரிந்துபோகும்.
19
ஒரு மனவளக் கலை வகுப்பு நடக்கிறது. அதில் ஒரு பங்காக யாதுமில்லா ஓரிடத்தில் நின்றுக்கொண்டு ஒரு கற்பனைக்குள் புகச் சொல்கிறார் ஆசிரியர். அதாவது, கையில் மண்ணில்லை, நீர் இல்லை, பாண்டம் ஏதும் இல்லை. ஆனால் எல்லாம் இருப்பது போல் கற்பனை செய்து ஒரு குயவனைப் போல தனை எண்ணிக்கொண்டு களிமண் பிசைந்து ஒரு அழகிய பொம்மையை உருவாக்கவேண்டும். பின் அதன் கை கால் தலை முகம் உதடு கண் என அனைத்து அங்கத்தையும் அழகாக மெழுகி, ஒரு சிற்பியைப் போல அதை யதார்த்தம் மாறாமல் செதுக்க வேண்டும். பின் ஒரு ஓவியனைப்போல தனை எண்ணிக்கொண்டு அதற்கு வண்ணமூட்டி உடைகள் மாட்டியவாறு அலங்கரித்து, பின் தூரச் சென்று பார்க்கவேண்டும். பார்த்ததும் ஒரு மனிதரின் யதார்த்தம் வந்ததும் தன்னை ஒரு பிரம்மாவாக எண்ணிக்கொண்டு அந்தச் சிலைக்கு காதில் காற்றூதி உயிர் தரவேண்டும். உயிர்பெற்ற அந்தச் சிலையோடு நின்று அதன் காதறுகில் உண்மையை நன்மையை தர்மத்தைப் போதிக்கவேண்டும். போதித்துவிட்டாயா இப்போது நீ யார்?
மண்ணை கல்லாக்கி, கல்லை சிலையாக்கி, சிலைக்கு வண்ணமூட்டி, வடிவத்தில் மெருகேற்றி உயிரூட்டி நன்மையை தர்மத்தை போதிக்கும் நீ யார்? கண்களை மூடிக் கொள். கண்களை மூடி நீ வடித்த அந்த சிலையைப் பார், அதற்கு உயிரூட்டியதை, உயிர்பெர்றதை, உயிர் பெற்றதும் அந்த ஜீவன் பேசியதையும் எல்லாம் ஒவ்வொன்றாய் நினைத்துப் பார். மெல்ல அந்த ஜீவனின் கண்களைப் பார், கண்களில் இருந்து நகர்ந்து ஒரு கருவிழியைப் பார், கருவிழியை உற்றுப் பார்த்தவாறே நகர்ந்து கவனத்தை மொத்தமும் நெற்றிக்குள் நடுவில் வை. அங்கேயே பார்த்தவாறு அமைதியாக அமர்ந்திரு. முற்றும் மற, அமைதியாக அங்கேயே நினைவோடு உணர்வோடு எல்லாவற்றையும் ஓரிடத்தில் உணர்ந்தவாறு அமர்ந்திரு. சற்றுநேரம் ஆழ்ந்துவிட்டு பின் மெல்லப் படு, கண்களை மூடியவாறே எல்லாம் மற, உலகின் அசைவுகளை அங்கம்பக்கத்து சுற்றத்தை எல்லாம் உணருமாறு உள்ளே அமைதி கொள். அமைதியுள் அமைதியுள் அமைதியுள் போ. என்ன உணர்வு உனக்கு ஏற்படுகிறதோ அந்த ஆனர்வோடு இரு. அமைதியாகவே இரு. என்றவர் சொல்லச் சொல்ல பாதி பேர் அமைதியுள் ஆழ்ந்து புற இயக்கம் அனைத்தையும் மறந்து முழு மன ஒருமுகப்பட்டு யாதுமற்றவராய் எல்லாவற்றிற்குள்ளும் கலந்தவராய் ஆகிப் போகிறார்.
பின் எழுந்திருப்பது, யோகாசனம் செய்வது, மூச்சுப்பயிற்சியை தொடர்வது, மீண்டும் தியானிப்பது; என்று அந்தரங்கம் முழுதும் ஒரே ஒருமித்த எண்ணங்களின் அலைவரிசையில் பயணித்துக் கொண்டிருக்கிறது. ஆக இதில்; லயிப்பது’ ஆழ்வது’ தனை மறப்பது’ ஒன்றை மட்டுமே நினைப்பது’ பின் மனதால் ஒருமுகப் படுவது என்பது எல்லாமே வெறும் பயிற்சி தான். இது போன்றப் பயிற்சிகளையும், அகம் சார்ந்தப் போதனைகளையும்தான் இதுபோன்ற வேறு பல தத்துவங்களை உள்ளடக்கி, வேறுபல வழிமுறைகளோடு நம் முன்னோர் பலர் நமக்கு எடுத்துக்காட்டிச் சென்றுள்ளனர். அதை நாம் உண்மையின் வழிநின்றுப் பார்த்து, தர்ம சிந்தனையோடு ஏற்று, நன்மையை எடுத்துக்கொண்டு தீமையை விடுவோமானால், காலமாற்றத்திற்குப் பின் நம்முள் ஏற்றத்தாழ்வோ பிரிவினையோ இன்றி ஒற்றுமை உணர்வோடு ஆனந்தத்தில் களித்திருப்போம்.
20
இறுதியாக; இறைவன் என்பவன் இங்கில்லை, அங்குமில்லை, அவன் எங்குமானவன்’ யாதுமானவன்’ எல்லாமாய் விளங்கும் இயற்க்கைக்கு ஒத்தான மகத்தான நம்பிக்கையினுள் வலுக்கும் சக்தியது என்பதே. இதலாம் புரியப் புரிய நிறைய மாற்றங்கள் நிகழும். நான் எனது என்பது அகலும்.
நான் எனை இந்த பிரிவிற்கு உரியவன் என்று நம்பிக்கொள்கையில்; மேலிருந்து விழும் ஒருவனை வேறொருப் பிரிவைச் சார்ந்தவனாகவே பார்க்கக் கடவேன். அதே எல்லாம் ஒன்று, உயிர்கள் ஒன்றோடொன்று சேர்ந்தது, கடவுள் என்பது வேறு வேறானதில்லை, நாம் எந்தப் பிரிவிற்கும் உட்பட்டவர்கள் இல்லை, மாறாக இயற்கையின் வழியே’ காற்றின் ஊடாக’ எண்ண அலைகளின் ஒற்றாக நாம் இணைந்தே இருக்கிறோம், நாமெல்லோரும் ஒற்றைப் படைப்பு என்றுப் புரிந்துவிட்டால்; மேலிருந்து விழுபவன் நான் என்றுத் தோன்றாவிட்டாலும் வேறெவனோ இல்லை என்றாவது எண்ணத் தோன்றும்.
இத்தகைய ஒரு கூட்டிற்குள் அடங்கி எல்லோருக்குமாய் நாம் வாழும் பொதுமனம் என்பது வேண்டும். அது வர வர மாற்றங்களும் இலகுவாய் வரும். மாற்றங்களால் நன்மை பல நிகழும்.
மாற்றங்கள் நன்மையை இப்பூமியில் வலுக்கச் செய்யும். நன்மை வலுக்குமிந்த பூமியில் தர்மம் சப்பலாங்காலிட்டு கம்பீரமாக அமர்ந்துகொள்ளும். பிறகேது தீமையும் பசியும் பிணியும்.. நன்மையே எங்கும் நிலைத்து நன்னிலமெங்கும் சுபீட்சம் சுபீட்சமே நிறையும்..
நிறையவேண்டும்..
வித்யாசாகர்