22, படித்தால் பெரியாளாகி விடுவாய்..

1) படித்தால் பெரியாளாகி விடுவாய்..
————————————————————-

ஒரு நூலகம் கட்டுதல் என்பது காடமைப்பதற்கு சமம். காடு தோறும் வளர்ந்த மரங்களைப்போல் நூலகம் நிறைந்தப் புத்தகங்கள் ஒவ்வொன்றும் ஆயிரமாயிரம் சிந்தனையின் விதைகளைத் தாங்கிக் கொண்டுள்ளதை படிக்கப் படிக்கவே உணரமுடியும். படித்தலில் கிடைக்கும் அறிவு சாதுர்யம் மிக்கது. படித்தலில் வரும் தெளிவு வாழ்வை மிளிரவைக்கத் தக்கது. படிப்பவரால் தான் மனதுள் ஊக்கத்தை விதைத்துக் கொள்ளமுடிகிறது. நிறையப் புரிந்து ஆழ்ந்து சிந்தித்து சட்டென தெளிய படிப்போரால் முடிகிறது.

2

நடுத்தரத்தன்மையை மனதுள் நிலைக்கச் செய்தல் படித்தலால் கைவரப்படுவதை தொடர்ந்து படிப்போரால் அறியமுடிகிறது. விதைத்தால் விளையும் நிலம்போல படிப்பினால் உதிக்கும் ஞானம் வெளியெங்கும் நன்மையின் வெளிச்சத்தைப் பரவச்செய்யும். மகிழ்ச்சியை எதுவென்று அறியக்கூடிய அறிவுக்கூர்மையை படிப்பு மேம்படுத்தும். அதன்பொருட்டாக ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக சிந்தித்து நாம் தாள்களை புத்தகங்களை கண்டறியும்முன்னரே ஓலையில் எழுதத் துவங்கிய நமது முன்னோர்களையும் நாம் எடுத்துணர வேண்டும்.

3

படித்தலின் இன்றியமையாமையை பின்னோர் அறிய ஓலையிலேனும் எழுதிவைத்துச்சென்ற முன்னோர்களின் பிரயத்தனத்திற்குமுன் புத்தகங்களை அடுக்கிவைத்துக் கொண்டு அதைப் பிரிக்காமலே கடந்துச்சென்றுவிடும் நாம் நம் நிகழ்கால நன்மையினை தொலைப்பதோடு மட்டுமில்லாது எதிர்காலப் பிள்ளைகளுக்கான வாழ்வியலையும் மாற்றியமைக்கிறோம் என்பதையும் கவனிக்கவேண்டிய கட்டாயமுள்ளது.

4

படிப்பு என்பது வெறும் புத்தகத்தில் படிப்பதில் மட்டுமில்லை; வாழ்க்கையின் சிறப்புகளை மனிதர்களின் மூலமும், தீமையின் நன்மையின் விளைவுகளை அளவிட்டுப் பார்ப்பதிலும், நடப்புகளை அதனதன்போக்கில் அதனதனை கவனித்து வருவதன்மூலமும், இயற்கையை அகக்கண் திறந்துப் பார்ப்பதிலும், உள்ளே உற்றுநோக்கி நோக்கி வெளியை இயக்கப் பழகுவதிலுமென, ‘படிப்பென்பது அசைவதிலும் அசையாததிலுமாய் ஏகமாக இருந்தாலும், அந்த மொத்த படிப்பினைக்கான முதலுரத்தை இடுவது புத்தகங்களே.

5

புத்தர் வாசித்த ரிக் வேதத்திலிருந்து தான், காற்றுவழி உள்ளே பயணித்து கல்லுக்குள்ளும் இருக்கப்பெரும் கடவுளின் சக்தியை அறியமுடிந்தது. ஆய்ந்து ஆய்ந்து அறிவதற்கான முதல் புள்ளி புத்தகங்களிலிருந்து நமக்கு எளிதாக கிடைத்துவிடுகிறது. உலகம் முழுதும் சுற்றிவந்து எல்லா ஊரிலும் மண்ணெடுத்து அதை மொத்தமாக கலந்து அதிலிருந்து ஒரு பிடி மண்ணெடுத்து அந்த ஒரு பிடிக்குள் இந்த ஒய்யார உலகத்தைப் பார்க்கக் கிடைப்பதற்குச் சமம்தான் சங்கிளிவழியாக வந்த உலகளாவிய மொத்த அறிவும் ஏதோ ஒரு புத்தகத்தினுள் அடங்கிப் போதலும்.

6

அத்தகைய புத்தங்களை அடுக்கிவைத்திருக்கும் ஒவ்வொரு அகமும் அறிவு விளக்கேற்றும் கோவிலின்றி வேறில்லை. நூலகத்திலிருந்து உருவான நிறைய மேதைகள் நம் நாட்டிலுண்டு, வெளிநாடுகளிலும் உண்டு. இவ்வுலகம் ஒரு புள்ளியில் அடங்கத்தக்கது எனும் நம்பிக்கை நமக்கெல்லாம் எவ்வளவு வலிமையானதாக உள்ளதோ, அதேயளவு இந்த ஒரு பிறப்பின் அறிவினுள்ளோ அல்லது ஒரு பிறவியின் காட்சிக்குள்ளோ அடங்கிப்போவதும் கூட இல்லை இந்த உலகு. அத்தனையத்தனை அற்புதங்களை இயற்கை காணுமிடமெல்லாம் அடக்கி வைத்திருக்கிறது.

7

அண்ணாந்துப் பார்க்கும் வானத்திலும், அளந்திட இயலாது வியந்துநோக்கும் கடலிடமும் வேறென்ன சூழ்ச்சுமத்தின் ஈர்ப்பிருந்துவிடும் நமக்கெல்லாம்? கடலைப் பார்க்கையில் ஏதோ ஒரு தாய்ப்பாசம் போல மதிப்பும், அதேநேரம் எத்தனை எத்தனை மர்மங்களை அடக்கிக்கொண்டுள்ள பயமும் நமக்கு வராமலில்லையே? வானத்தை பார்த்துக்கொண்டே இருக்கிறோம் எல்லையை அறியவில்லையே? பூமியை சுற்றிச் சுற்றி வருகிறோம் மொத்தத்தையும் காணவில்லையே? அதெல்லாம் ஏன் அத்தனைக் கோடான கோடி மர்மங்களும், வியப்புகளும், நடப்புகளுமென எல்லாம் சூழ்ந்துள்ள இப்பிரபஞ்சத்தின் ஒரு சிறிய புள்ளிதான் நாம். நாம் அதத்தனையையும் ஒரு கையில் அடக்கிக் கொள்ளும் முடுச்சிகளின் மூலத்தை அறிவதெனில் நம் கையினுள்ள பல புத்தகங்களை படித்துணருவதால் அது முடியும்.

8

வெற்றிகளின் மூலத்தை, தோல்வியில் தாங்கும் பக்குவத்தை, தோல்வியை வென்றெடுக்கும் தந்திரத்தை, வெற்றி தோல்வியின் சரிசமத்தை இப்படி அனைத்தையும் கொஞ்ச கொஞ்சமாக வாழ்வின் நகர்விற்கேற்ப படித்தறிய நம்மால் இயலுமெனில் அதற்கு பேருதவியாய் அமைவதே நூலகங்கள்.

9

நூலகங்களைப் பயன்படுத்தப் பழகுங்கள். தெருவின் ஓரத்தில் ஒரு மாங்காய் மரம் வளர்ந்து நான்கு மாங்கணி கைக்கெட்டும் தூரத்தில் தொங்கினால் பறித்துன்னவும், எட்டாத உயரத்தில் இருந்தால் கல்லெறியவும் அறிவிருக்கும் நமக்கு; கால்நடக்கும் தூரத்திலுள்ள அறிவுக் கோயில்களான நூலகங்களை அவ்வப்பொழுது அணுகி பயன்படுத்திக் கொள்ளும் எண்ணம் ஏன் பொதுவாய் எல்லோருக்கும் இருந்திருக்கவில்லை?

10

சினிமாவிற்குப் போகவும், பூங்காவிற்கு சென்று விளையாடவும், மாலைநேரத்தில் சிற்றுண்டிக் கடைகளுக்குச் சென்று செலவிடவும் முடிகிற நாம் நம் பிள்ளைகளுக்கு இலவசமாக திறந்துவைதுள்ள நூலகத்திற்குச் செல்வதையும் இன்றியமையாததாக எண்ணி பழக்கவேண்டும். படிப்பதை புத்தகத்தின் வழியேவும் நம் பிள்ளைகளுக்கு நாம் சிறுவயதிலிருந்தே பழக்கித் தரவேண்டும். புத்தகம் என்பது அலமாரியில் வைத்துக்கொள்ள பிறரால் தரப்படும் பரிசுப்பொருளாக மட்டும் பிள்ளைகள் அறிந்துவைத்துக் கொள்ளாதிருக்க’ அவைகளை படித்துணரும் பழக்கத்தையூட்டி, இலக்கிய அறிவை பெருக்கி, கலையின் கலாசாரத்தின் சாரம்சங்களை முன்னெடுத்து, நாளைய தலைமுறையின் இன்றைய முன்னுதாரண பிறப்புகளாகவே நாம் வாழயிருக்கிறோம் என்பதை அறிவுணர சொல்லித்தரவேண்டும்.

11

எதையும் கற்று அலசி ஆய்ந்து உலகின் நன்மைக்கென ஆலோசித்து சிறந்ததை ஏற்று வருத்தத்தையும் இன்னலையும் தீர்க்கத் தக ஆற்றலை, ‘படிப்பதன்மூலமும் வளர்த்துக்கொள்ளமுடிவதை’ ஒவ்வொரு வளர்ச்சியின் இடையிலும் புகட்டி பிள்ளைகளை நாம் நடைமுறை அறிவோடு வளர்க்கவேண்டும்.

12

நேற்றைய வரலாற்றைக் கண்டு இன்றைய காலத்து வாழ்க்கையை நிமிர்த்திக்கொள்ள புத்தகங்கள் உதவும் என்பதை அறியத்தரும் முதல்புள்ளி நமது வளர்ப்பிலும் வார்த்தையிலுமேயுள்ளது.

ஒவ்வொரு நூலகத்திற்குள்ளும் ஆயிரமாயிரம் மனிதர்களின் கதையும் வாழ்வும் ஏக்கமும் இழப்பின் சுவடுகளும் கொட்டிக்கிடக்கிறதென்பதை நம் பிள்ளைகளுக்கு எடுத்துச் சொல்லி பழக்கிவிட்டால், அடுத்தநாள் நூலகம் தேடி அவர்களாகவே போவார்கள்.

13

நல்லதை அதன் விளைவோடு அறிந்து, தீயதை அதன் விளைவோடு எச்சரிக்கையுறும் அளவிலுணர்ந்து தனை செதுக்கி செதுக்கி சுதந்திரப் பிறவியாக இம்மண்ணில் நம் குழந்தைகள் வளம்வர படிப்பினை உதவும் என்பதை எடுத்துச் சொல்வது பெற்றோராகிய நமது கடமையாகவே முன்னிற்கிறது.

14

அரிசி விளையும் ஒவ்வொரு விளைநிலத்தின் ஈரத்திலும் ஒரு விவசாயியின் வியர்வையினுடைய ஈரம் மட்டுமில்லை, கண்ணீரும் சுட சுட இருக்கிறது. இனிக்கும் பழங்களுக்குள்ளே அந்தத் தோட்ட முதலாளியின் சிரிப்பும் வேலைக்காரனின் அழுகையும் ஏக்கமும் நிறைந்துகிடக்கிறது. விண்ணளந்து நிற்கும் அத்தனை கட்டிடங்கள் அழகழிய வீடுகள் என ஒவ்வொரு கல்லுக்குள்ளும் ஒரு கதை வதை வாழ்க்கை கொட்டி அடைக்கப் பட்டிருக்கிறது.

அதுபோல் கோடானகோடி கேள்வியும் பதிலுமாய் அடுக்கப்பட்டிருக்கும் புத்தகங்களுக்குப் பின்னேயும் ஒரு படைப்பாளியின் கண்ணீரும் கவலையும் அழுகையும் ஏக்கமும் வலியும் உறுத்தலும் நிராசையாய் உரைந்துப்போயுள்ளது. அவைகளையெல்லாம் துடைப்பதற்கு நாம் படிக்கவேண்டும். இதோ உன் அழுகை எனது சிரிப்பிற்கான பாதையைக் காட்டியுள்ளது பாரென்று அவர்களுக்குக் காட்டவேண்டும். நீ செலவிட்ட நேரத்தில் நான் எனது அறிவுக்கண்ணை திறந்துக்கொள்வேன் கவலையுராதே என்று நம்பிக்கையூட்டவேண்டும்.

15

புத்தகங்களை அடுக்கியுள்ள நூலகத்திற்கு ஆயுதபூசையன்று பொட்டு வைப்பதோடு நில்லாமல் அவைகளின் கனம் உணராமலிருக்கும் அறிவு நோக்கி ஒரு செல்லக் குட்டு வைத்துக்கொள்வோம். குட்டு வலித்த இடத்திலிருந்து இனி நூலகத்திற்கான கதவுகள் வெகுவாய் திறக்கட்டும். புத்தகங்களின் ரசிக்கத்தக்க உள்பக்க நறுமணத்தைப் போல நம் வாழ்க்கையும் செம்மையுற்று நல்லெண்ணத்தின் மணம் இனி உலகெங்கும் பரவலாய் வீசட்டும்.

புத்தகதிற்குப் பின்னேயும் நூலகங்களின் பின்புறமும் நின்றழும் படைப்பாளிகளின் கண்ணீரை நம் படிக்கும் பழக்கத்தைக் கூட்டிக் கூட்டி மெல்ல துடைப்போம். அவர்களின் சிரிப்பினால் இச்சமூகம் தெளிந்த சமூகமாய் அறிவு மிளிரும் மனிதர்களோடு கூடியதாய் அமையட்டும்.

புத்தகங்கள் வாழ்க.. அச்சிடுவோர் வாழ்க.. எழுதுவோர் வாழ்க.. எழுதியதை எடுத்தடுக்கி காத்து நூலகமமைத்துத் தருவோர் வாழ்க.. படிப்போரும் படிக்க பள்ளிக்கூடம் அமைத்தோரும் வாழ்க.. எல்லோரும் படித்து, ‘விடுதலையை பெறும் அறிவோடும்’ தரும் அறிவோடும் இருந்து’ ஒவ்வொரு உயிரும் சிறந்தோங்கி’ நன்னிலந்தோறும் நலமே நலமே விழையப் பெறுக..

வித்யாசாகர்

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in வாழ்வியல் கட்டுரைகள்! and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s