தேரோடாத தேரடி வீதி
ஏருழாத எம் பாட்டன்
காரோட்டும் பட்டினத்தில்
கசக்காத என் தமிழுக்கு வணக்கம்..
—————————————————-
ஏகலைவனாவாகவே இங்கு நான்
என் பாடத்தைக் கற்றாலும்
சுண்டுவிரலைக்கூட கேட்டிடாத என்
ஆசான்கள் அணிவகுக்கும் ராஜபாட்டையில்
எனக்குமொரு இடத்தைத் தந்த –
சந்தவசந்ததிற்கு என் பணிவான வணக்கம்..
—————————————————-
நக்கீரனைப்போல
நெற்றிக்கண்ணிற்கும் வளையாது
சொக்குபொடிக்கும் வழுவாது
சொல்லும்பாட்டில் குற்றமெனில் செல்லக் கோபமுமின்றி
அன்னையைப்போல அன்புகூர்ந்து அழைத்துப்பேசும்
ஐயா கவியோகியின் தலைமைக்கு –
எனது சிரந்தாழ்ந்த வணக்கம்..
—————————————————-
அன்னைவயலில் நெல்லறுக்கும் பாட்டாய்
இணையவெளியில் சொல்தொடுக்கு மிசையாய்
தட்டான் தேடியோடும் பிள்ளையின் கவிதையாய்
அம்மாக்கள் அடிக்கு அஞ்சாமல் ஓடி –
இலக்கண சிறகு விரியும் முன்
எழுத்தின் விரல்களைப் பிடித்துக்கொண்டு
எட்டித்தொட வானை நோக்கும் கண்களோடு –
உங்கள்முன் பணிவோடு நிற்கிறேன்..
அன்புசார் பெரியோர்..
அவையோர்..
இளையோர்..
நட்புள்ளங்கள் அனைவருக்குமென் மதிப்பான வணக்கம்..
—————————————————-
கவிதையின் தலைப்பு: எங்கே போகிறேன் நான்.. ?
அதொரு கடலழிக்கும் காடு
காடெங்கும் தேவதைகள்
கடல்மறிக்கும் தேவர்கள்
தேவர்களின் காலடியில்
தேவதை பெற்றுப்போட்ட மிருகம் நான்;
வானெங்கும் நட்சத்திரம்
காடெங்கும் கர்ஜிக்கும் மிருகம்
வான்முட்டும் கட்டிடத்தின் கீழேயும் மேலேயும்
எங்கோ ஒருசிலராய் வாழும் கருப்பு வெள்ளை
மனிதர்கள்..
மனிதர்கள்
பெரிய மனிதர்கள்
இரண்டு கொம்பில்லை
பறக்க இறக்கையில்லை
மூக்கைப் பிடித்துநின்றால் சீவன் போகும்
ஆனாலும் மனிதத்தை
தொலைத்துவிட்டு தானென்று அகந்தையில்
ஆடும்
அழியும்
அட்டகாச மனிதர்கள்..
மிருகங்கள் கூடப் பாவம்
இயல்பை
ஏற்று நடக்கிறது
மனிதன்தான் இயல்பிற்கும் எதிராய் மாறும்
பெருத்த மிருகமாய்
சின்ன இதயமாய்
சிலிர்ப்போடு வாழ்கிறான்..
என்றாலும்
இதயத்திற்கும் இங்கே பஞ்சமில்லை
துடித்தால் துடிக்கும்
அழுதால் அழும்
கொஞ்சினால் கொஞ்சும்
கொஞ்சினால் மட்டுமே கொஞ்சும்
சரியென்றும் தவறென்றும் நிறைய இதயங்கள்
நஞ்சு கலந்து
நஞ்சு நிறைந்து
நஞ்சு அறுக்க
அறுபட்டு அறுபட்டு
ஐம்புலன் கட்டி
மிருகங்களுக்கு முன்னே தன்னை
பார் நான் மனிதன் எனும்
பெருமையோடு மட்டும் காட்டி கடக்க
நிறைய
இதயங்களுண்டு..
இதயத்தில் ஆசையும்
அறமும்
அச்சமும்
உண்மையும் பொய்யுமாய் நிறைய மனிதர்களுண்டு..
எல்லோரையும் அன்பினால்வளைத்து
வாஞ்சையோடு அனைத்துக் கொண்டேப்
போகிறேன்..
எங்கே போகிறேன் நான்?
யார் யாரோடோ
என்னென்னவோ பேசி
ஏதேதோ கேட்டு
எதற்கென்று முழு இலக்கு புரியாமல்
புரிந்தளவை தொடமுடியாமல்
தொடும்வரை அன்புசெய் அன்புசெய்
அன்புசெய்யெனும் ஞானத்தோடு மட்டும் – நடப்பதையெல்லாம்
மறந்தும் மன்னித்தும்
மனிதத்தைத் தேடியும் மட்டுமே ஓடிக்கொண்டேயிருக்கிறேன்..
இலக்கு எனக்குக் கிடைக்கையில் – எனது
இன்னொரு தலைமுறை நாளை
அவ்வழியே கடந்து
தனது வாழ்வை கம்பீரமாய் கண்ணியமாய் வாழ்ந்துமுடிக்குமென்று
நம்பிக்கை வருகிறது..
நம்பிக்கை வருகிறது..
நம்பிக்கை வருகிறது..
—————————————————-
வித்யாசாகர்
வணக்கம்
அண்ணா
அவையடக்கமும் கவித்துவமும் கண்டு ஓதி மகிழ்ந்தது மனம்….
பகிர்வுக்கு நன்றி அண்ணா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
LikeLike
நன்றி ப்பா…
LikeLiked by 1 person