உனக்கும்
எனக்கும்
இரண்டு அலைகளுக்கு இடைப்பட்ட
தூரமே உண்டு
கடலின் ஆழம் தூரம்
ஜாதி
மண்ணாங்கட்டி பற்றியெல்லாம்
நமக்கு கவலையே இல்லை
சாதி என்ன
மண்ணாங்கட்டியா என்பர்
சிலர்;
உடம்பு கீறி
உனக்கும் எனக்கும் வரும் ரத்தம்
வேறு வேறல்ல
என்றுப் புரியாத மனிதர்க்கு
வலிக்கும் நம்முன்
பிரிக்குமந்த சாதி
மண்ணாங்கட்டிக்கும் கீழ் தான்
நமக்கெதற்கு அதலாம்
நமக்கு சாதி தெரியாது
காதல் தான் தெரியும்,
முதலில் சேர்ந்த இரண்டு
ஆதிமனிதரைப்போல் நேசத்தின் உச்சியில்
நெஞ்சேறி அமர்ந்திருக்கும்
நமக்கெல்லாம்
நெற்றிப் பொட்டில் சுட்டாலும்
காதல் தீராது
நேரே போகும்
இருவரில்
ஒருவர் மேல்
மற்றொருவர் கீழென்றுச் சொல்லும்
சாதி பெருசு எனில்
சொல்பவரை
தீ மென்று போடட்டும் – நீ போ
நீ போனால்
நான் வருவேன்
நான் போனால்
நீ வருவாய்..
முன்னும்பின்னுமாய்
இருவரும்
சேர்ந்தேயிருப்போம்..
தோட்டத்து மலர்களைப்போல
மனதால்
பூத்துக் கிடப்போம்..
நமக்கு போகும் தெருவெல்லாம்
நிலா காயும்
சூரியன் குளிரும்
காதல் ஒரு
பெருங் காற்றோடு தான்
இதயத்தில் வீசுகிறதென்று நாம்
பேசி பேசி
சேர்த்துவைப்போம்
மரம் பூ இலைகளைப்
போல
உடலுரசி உரசி
மனதின் ஆழத்தில்
உன்னையும்
என்னையும் புதைப்போம்..
மண் தோண்டி உள்மூடிய
மரத்தின் வேரினைப்போல
உனக்குள் நானும்
எனக்குள் நீயும்
போகுமிடமோ திசையோ
அறியாது
உயிரூன்றி இருப்பதை
வெளியில் பறக்கும் பட்டாம்பூச்சியோ
சிட்டுக்குருவியோ
அறிந்திருக்காது
உனக்கும் எனக்கும்
மட்டுமே தெரியும்
நீ பிரிந்தாலும்
நான் பிரிந்தாலும்
நாமிருவருமே இறந்துபோவோமென்று!!
————————————————————————–
வித்யாசாகர்
//உனக்கும் எனக்கும் மட்டுமே தெரியும்
நீ பிரிந்தாலும் நான்பிரிந்தலும்
நாமிருவருமே
இறந்து போவோமென்று//
காதலின் உச்சகட்டம்
இறப்புத்தானோ?
அழகு மிக அழகு..
வாழ்த்துக்கள்!!
LikeLike
நன்றி சகோதரி.. காதலில் அத்தனையும் அழகுதான்.. அது அறியத் துணியாத வயதும், ஆராயமுடியாத தருணமுமாயிற்றே!
மரணம் ஒரு சமரசமில்லையா. வீட்டிற்கும் எதிர்ப்பில்லை, காதலுக்கும் மறுப்பில்லை, நாம் சமைத்த உலகு அப்படித்தான் இயங்குகிறது.
இங்கே சமரசம்கூட இனிமையாகிறது..
LikeLike
வாழ்க
LikeLike