பிரியப்போகிறோம் என்றெண்ணி
கடைசியாய்
கதறி அழுதாயே நினைவிருக்கா?நீ அழுது கேட்ட
தொலைபேசி கூட அன்று
அவ்வளவழுதிருக்கும்..
நான் அழாமல்
அனைத்தையும் உள்ளே
அழுத்தி வைத்திருக்கிறேன்
ஒருநாள் வெடித்துவிட்டால்
உதறிவிடு நினைவுகளை
மறந்துபோ என்றால் –
மறப்பாயா?
நீ மறக்கமாட்டாய்
நினைப்பாய்
எனக்காக அழுவாய்
அதனால்தான்
உனை நினைத்திருக்கும் தருணம் குறித்தும்
மறந்திடாத வலிகுறித்தும் சொல்ல
எனது கண்ணீரை –
காயாது வைத்திருக்கிறேன்
நானழுது
நீ பார்த்ததில்லை இல்லையா..?
உண்மையில் –
நீ பார்த்திராத பொழுதத்தனையும்
நீயில்லாத தனிமைதோறும்
நான் அழுதிருந்த பொழுதுதான்..
மனது வலிக்க வலிக்க
அழுவது தாயில்லாத பொழுதில்
சாத்தியம்போல் –
நீயில்லாதப் போதும் சாத்தியமெனக்கு..
விட்டுப் பிரிகிறேன் என்று
நீயழுதாய்
நான் – பிரிவதற்கும், நீ அழுவதற்கும்
சேர்த்து
உடைந்துபோகிறேன்..
உன்னை எப்படி மறப்பது?
மனதால் கைகோர்த்து
நடந்தவர்கள் நாம்..
உதட்டால் விலகி
உள்ளத்தால் சிரித்தவர்கள்
விட்டுவிலகியதால்
நினைவு விட்டா போகும்.. ?
நீ நடந்து எதிரே வந்தாலே
எனக்கு உடம்பெல்லாம்
தீ பிடிக்கும்
மின்சாரம் மனசெல்லாம் பாயும்
என்னை கடந்து நீ
போகும்போதெல்லாம்
உனது ஒவ்வொரு அடியையும்
நீ மனதுள்ளே மிதித்துச் சென்ற
தடங்களாகவே என்னுள்
பதிந்துவைத்திருக்கிறேன்..
என்றேனும் எனை
நேரில் சந்தித்தால்
என் கண்களைப்பார்
உள்ளே வலிய மறைந்துக்கொள்ளும்
கண்ணீரின் சூட்டிற்குள்
உனக்கு வலிக்காமல் உனை வைத்திருப்பேன்..
உனக்குள்ளேயே
உயிர்த்திருப்பேன்..
உன் பெயரைச் சொல்லிச் சொல்லி
மூச்சு உள்ளேயும்
வெளியேயும் வரும்.. போகும்..
வராத நாளில்
ஊரார் அதிசயிக்கலாம்
சட்டென உயிர்
பிரியவில்லையே எனலாம்..
நீ மட்டும் புரிந்துக்கொள் – நான்
உனக்காகத் தான் காத்திருந்தேனென்று!!
———————————————————————————-
வித்யாசாகர்
சிறந்த பாவரிகள்
சிந்திக்கவைக்கிறது
தொடருங்கள்
LikeLike
நன்றி யாழ்..
LikeLike