மூங்கிலுக்குள்
காற்று புகுந்து
பாட்டு வந்ததைப் போல
எங்களுக்கும் காதல் வந்ததன்று..
கறுப்புக் கண்ணாடிக்குள்
பாடிய
இரண்டு
வெள்ளை இதயங்களின்
இனிப்புப் பாட்டு அது..
சிரிப்புச் சப்தத்தில்
பற்களைப் பார்ப்பதற்கு பதில்
சொற்களுள் சந்தித்துக்கொண்ட
கவிதை நாட்கள்
அவை..
எங்களுக்கு
இருவருக்குமே பார்வை தெரியாது
காலடி சப்தம் புரியும்,
காட்சி கிடையாது –
மௌனத்தில் ஆயிரம் பாடல் எழும்,
வானம் தெரியாது –
ஆனால் எங்களுக்குள்ளும்
நட்சத்திரம் மின்னும்..
சத்தம் போடுவோம்
வண்ணம் கண்டதில்லை,
கை காட்டி ஆட்டி பேசுவோம்
அதிலும் வண்ணம் கண்டதில்லை,
அருகருகில் அமர்ந்திருப்போம்
வண்ணத்தை தொலைக்காமலே – மீண்டும்
மீண்டும் தேடிக்கொண்டிருப்போம்..
முகம் பார்த்ததில்லை
வாசம் தெரியும்,
இதயம் தொட்டதில்லை
உயிரில் அதிரும்,
விலகியிருந்தால் கூட – எங்களின் பார்வையுள்
இடைவெளியே இருந்ததில்லை,
நாங்கள் ஒருசேர பயணிப்போம்
தனியாகவே நடப்போம்,
எங்கெங்கோ பார்ப்போம்
எங்களை மட்டுமே காண்போம்,
யார் யாரென்றெல்லாம் பேசிக்கொண்டதில்லை
எங்களை நாங்கள் –
நாங்களாக மட்டுமே அறிந்திருந்தோம்..
வானவில்..
பூங்கா வாசம்..
மழையின் ஈரம்..
கண்களின் கூர்மை..
முத்தத்தின் ஆழம்..
யாருமில்லா தனியறை..
எல்லாமே எங்களுக்கு – இரண்டு
கோர்த்த கைகளுக்குள் மட்டுமாய்
அகப்பட்டு போனது..
எங்களுக்கு ரயில் வண்டியும்
பேருந்தும்
மகிழுந்தும்
பயணமெல்லாமும் கூட
வெட்டவெளிக்கு சமம்தான்,
தனியிடம் எங்களுக்கு
எங்களின் மனசாட்சியாக மட்டுமே
இருந்திருக்கிறது..
எங்களுக்கு
கூடு சேரும் ஆசையில்லை,
இதயம் சேர்ந்திருந்ததால்
பிரிவுமில்லை,
இருக்கிறாள் என்ற நாள் வரை
இருக்கிறோம் என்றே
வாழ்ந்திருந்தேன்..
இன்று அவளில்லை
அவளில்லாத இடத்தில் நானுமில்லை
எங்கோ இருட்டான ஓரிடத்தில்
அமர்ந்திருக்கிறேன்,
நடந்துச் செல்கிறேன்
ஒரு சுமையாக என்னை
சுமந்துக் கொண்டிருக்கிறேன்..
படுக்கை
பசி
எதுவுமே
தனிமையைவிட பெரிதாக
வலித்திடவில்லை
எனக்கு..
அவளில்லாத இடத்தில்
என்னாலும்
இருந்திடவேண்டாத வலியில்
மனசு
துடி துடியென
துடிக்கிறது…
அவள்
இல்லை என்ற
இடமெங்கும் தேடி
நான்
என்னையும்
அழித்து வருகிறேன்..
அன்றளர்ந்த
நடையினூடே – வெறும்
பாட்டாய் கரைகிறேன்,
பாடல் நிற்குமிடத்தில் –
கண்ணீராய்
கண்ணீராய்
கலைகிறேன்..
இதோ –
காற்று நுழையாத மூங்கில்
புல்லாங்குழலை தொலைத்ததுபோல்
அவளை தொலைத்துவிட்டு
என்னை மட்டும்
வைத்திருக்கிறேன்,
பார்வையில்லாதவனை விட
அவளில்லாதவனே – எனக்கு
அதிகம் வலிக்கிறது..
——————————————-
வித்யாசாகர்