1
இங்கொன்றும் அங்கொன்றுமாய்
இலையுதிர்க்கும் மரத்தைப்போலவே
இங்குக் கொஞ்சம் அங்குக் கொஞ்சமென
நாளுக்குநாள் இறப்பவன் நான்..
எனது இறப்பில் எல்லோருக்கும்
பங்குண்டு..
எனது மரணம்
எப்போது நிகழ்ந்தாலும்
எனது உடலைச் சுற்றி இருப்போர்
அத்தனைப் பேரும் –
தானுமொரு கொலையாளி என்பதை
மறந்துவிடாதீர்கள்..
ஒருவேளை –
இந்தச் சமுதாயம் நாளை
தனது
தவறுகளை
விட்டொழிந்து நிற்குமெனில் – அன்று
மீண்டும் நான்
பிறந்துவருவேன்..
அப்போது
எனைப் பெற்றவர்களும்
நீங்களாகவே இருப்பீர்கள்!!
—————————————————————
2
எங்கெல்லாம்
என்னால்
போராட முடியவில்லையோ
அங்கெல்லாம் நான்
இறந்துக்கொண்டிருக்கிறேன்..
எங்கெல்லாம்
யாரையோ அடிக்கமுடியாமல்
அழுகிறேனோ
அங்கெல்லாம் அடி
எனது உயிர்மீது விழுகிறது,
கன்னத்தில் வழிந்தோடா
உள்ளத்துக் கண்ணீரில்
உயிர்மட்டுமே கரைகிறது..
வாழ்தலின் ஆசைகள் அத்தனையும்
நல்லதை எண்ணி எண்ணி
தீயதின் தடமகற்றும்
நேர்மையின் பாதை தேடி
முடமாகி முடமாகி விழுகிறது..
ஆனால் –
பிறரின் முடம்
இறப்பைப் பற்றியெல்லாம்தான்
உங்களுக்குக் கவலையில்லையே
மனிதர்களே.. (?)
நீங்கள் வாழுங்கள்
நீங்கள் உயிரோடிருக்கமட்டும்
எப்படியோ வாழ்ந்துப்போங்கள்!!
—————————————————————
3
யாருக்காகப் பெய்கிறது
மழை ?
யாருக்காகச்
சுடுகிறதிந்த வெளி ?
யாராலின்று
அசைகிறதிந்த நிலம் ?
யாரை நோக்கி விடிகிறது
என் பொழுது?
எல்லோருக்காகவும் அது
இல்லாதபட்சத்தில்;
ஏய் பொழுதே
சற்று கேள்
நாளைக்கு நீ எனக்காய் விடிந்துவிடாதே..
—————————————————————
4
தீப்பந்தம் எடுத்தோடும்
வீரர்களைப் போல
யாராரோ விட்டுச்செல்லும்
மூச்சைத் தூக்கிக் கொண்டு
இன்னும்
எவ்வளவு தூரம் ஒடுவதோ..(?)
ஓடுவதில் எனக்கு சலிப்பில்லை
அது வாழ்க்கை
இயற்கை
இயல்பை எண்ணி இதோ
ஓடிக்கொண்டே
இருக்கிறேன்
ஆனால் –
சுயநலத்தில் வாழும்
தனக்காய் மட்டுமே வாழ்ந் திறக்கும்
பொது நலச் சிந்தனையே
அற்ற
பலரின்
நினைவுகளையெல்லாம்
சுமந்துக் கொண்டு
ஓடுவதைக் காட்டிலும்
அது நின்றுவிடுவது மேல்!!
—————————————————————
5
தொண்டை கடந்ததும்
அது என்னவென்று தெரியாது
உயிர் போனதும்
நிர்வாணம் விளங்காது
எரிந்துப் போனவர்
சாமபல்கூட கரைந்துபோகும்
நினைவு கூட
காலத்துள் மறைந்துபோகும்
மொத்தத்தில்
யாதுமற்றவன் நீ மனிதா..,
எல்லாமுமாய் உனை
கற்பனைச் செய்தவைகள் தான்
யாதுமற்றதா யுனை
தொலைத்தும் விடுகிறது.,
கண்ணீருக்குப் பின்னேயும்
சிரிப்பிற்கு முடிவிலும் ஒரு
மயானம் காலத்துள்
எல்லோருக்குமாய் அகன்று விரிந்து
நீண்டு கிடக்கிறது;
அங்கே நீ
கொண்டுசெல்ல
மௌனத்தை வேண்டுமெனில்
சேமித்து வை!!
————————————————————————————–
வித்யாசாகர்