“தாத்தா”
இந்தச் சின்ன வார்த்தையிலிருந்து
முளைத்தது தான்
எங்களின் மூன்று தலைமுறையும்..
ஊரெல்லாம் சுற்ற
எங்களுக்குக் கிடைத்த முதல் சிறகு
எங்களின்
தாத்தாவின் தோள்களும்
நடந்தோடும் கால்களும் தான்..
அம்மா அடித்தாலும்
அப்பா அடித்தாலும்
ஓடி ஒளியவும்
கண்ணீர் துடைக்கவும்
தாத்தாவின் வெள்ளைவேட்டியே எங்களுக்கு
முதல் முந்தானையாக இருந்தது..
விலை மலிந்து கிடைக்கும்
பழைய பழமும்
நிலக்கடலையும்
முருக்கும்
உடைந்த ஓட்டடையும்
அவர் வாங்கிவந்ததைவிட
சுமந்துவந்ததே நெஞ்சில் மிட்டாயாய்
இனித்துகிடக்கும்..
வானில் ஒருகோடி நட்சத்திரமென்று
கடலில் குமரியே கவிழ்ந்ததென்று
நடந்துப்பார் உலகம் மிக சிறியதென்று
கண்களைமூடி –
எதையோ காற்றிலிருந்து பறித்ததுபோல்
சொன்னாலும்
அதைப்பற்றியெல்லாம் எங்களை
அன்றே யோசிக்கவைத்த ஆசான்
எங்களுக்கெங்க தாத்தாதான்..
எம்ஜிஆரை தெரியும்
சிவாஜி என் சிநேகிதன்
முதலமைச்சரெல்லாம் என்னிடம்
தொலைபேசியில் பேசுவாங்கடா என்று
நாளுக்கு நான்குமுறை வாய்கூசாது
புருடா விட்டாலும் –
எங்களுக்கு முதல் ஹீரோன்னா அது
எங்கப்பாவை நின்றுமிரட்டும்
எங்க தாத்தா மட்டும்தான்..
ரயில்வண்டி ஓட்டி தெருக்கடைக்கு போக
பனங்காயில் கொம்பு சொருகி –
ஊரெல்லாம் உருட்ட
குளத்தில் மீன்பிடிப்பதை –
தோளில் உட்கார்ந்துப் பார்க்க
வாயிலேயே வண்டிசெய்த விஞ்ஞானி
எங்க தாத்தாவாகத் தானிருக்கும்..
சட்டையை இழுத்துவிட்டு ஓடிவிடுவதும்
தலையில் கொட்டிவிட்டு –
கீழே அமர்ந்துக்கொள்வதும்
கால்கழுவ அவர் குளத்தில் இறங்குகையில்
வெளியிலிருந்து நாங்கள் கல்லெறிவதும்
எல்லா எங்களின் சேட்டைகளுக்கும்
தெத்துப்பல் பட்டையாய் தெரியஅவர் சிரிப்பதும்,
வீட்டின் கட்டுப்பாட்டுச் சங்கிலி அவிழ்த்து
ரோட்டில் கைவீசி நடக்க எங்களுக்கு
சுதந்திரத்தை வாங்கித் தந்ததும்
எங்க தாத்தா மட்டும்தான்..
வெள்ளையாய் உடுத்தி
செருப்பில்லாக் கால்களை எங்களுக்காகவே
தேய்த்து
ஊரெங்கும்
எங்களின் கனவுகளை
அவருடையப் பார்வையில் சுமந்து நடந்தவர்
எங்க தாத்தா..
அவரின் வெள்ளிமுடிதான்
எங்களுக்கு தங்க இருப்பு போல,
அவரின்
தோலில் விழுந்த சுருக்கங்கள்தான்
எங்களுக்கு
வரையாது கிடைத்த ஓவியம் போல,
அவருடைய
தொங்கும் கை சதையில்
ஆம்ஸ் அழுத்திப் பார்த்துதான்
நாங்கள் கராத்தே கற்கவே
முதல்சீட்டு வாங்கினோம்,
கதர் நெய்த வயதிலிருந்தே
அவர் கண்ணாடி போடாதவர்,
மாத்திரை போடாமலே
கடைசிவரை மிடுக்கோடு நடந்தவர்,
தொன்னூற்றி ஐந்து வருடகாலத்தை
மிக கம்பீரமாய்
வாழ்ந்துத் தீர்த்தவர்;
எங்கள் வீட்டின் தேசியக்கொடியாய்
நாங்கள் அதிகம் பறக்கவிட்டதுகூட
எங்களுடைய
தாத்தாவின்
கொடியில் காயும்
கோமணத்தைத் தான்..
இன்று அது
வெறுமனே
காற்றில் பறந்து பறந்து ஒரு ஓரத்தில்
ஆடிக்கொண்டிருக்கிறது,
எங்க தாத்தா –
எடுக்க மறந்து விட்டுச்சென்ற
அவருடைய தோள்துண்டைப் போலவே
எங்களையும் விட்டுச்
சென்றுவிட்டார்.,
போன கையோடு திரும்ப
வருவேன்னுச் சொன்னவர்
வராமலேப்
போய்விட்டார்.,
சேதிகேட்டு
காற்றில் விளக்கனைந்ததைப்போல
வீடு –
இருட்டாகிவிட்டது.,
இடிவிழுந்த
மரத்தைப்போலவே
மனம்
பிரிவில்
கருகி போகிறது.,
பொசுக்கென ஜோடிப்பறவையை
சுட்டதைப்போல
எல்லோரும் தனித்தனியே
நின்று அழுகிறார்கள்.,
அப்பா போயிட்டாரே என்று
என் அப்பா அழுகிறார்,
அப்பா போயிட்டாரே என்று
என் அம்மாவும் அழுகிறாள்,
அப்பா போயிட்டியேன்னு இங்கே
நிறையப் பேர் அழுகிறார்கள்,
தாத்தா நீ போயிட்டியேன்னு என்னால்
நினைக்கவே முடியவில்லை
அழையழையாய் மட்டும்
வருகிறது..
அழையழையாய் மட்டும்
வருகிறது..
——————————————-
வித்யாசாகர்
வணக்கம்
அண்ணா
தாத்தாவின் அன்பை சொல்லி காட்டிய விதம் வெகு சிறப்பு.
தாத்தாவுக்கு ஆழ்ந்த இரங்களை தெரிவித்து கொள்கிறேன். அவரின் ஆத்தமா சாத்தியடைய இறைவனை பிராத்திப்போம்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
LikeLiked by 1 person
நன்றிப்பா..
LikeLike