1
விடு விடு
மதமாவது
சாதியாவது
மண்ணாவது;
போவது உயிரெனில்
யாராயினும் தடு;
உயிர்த்திருத்தல் வலிது..
————————————————————————
2
ஐயோ சுனாமி
நிலநடுக்கம்
புயல்
மழை
வெள்ளம்
மரணம் மரணம்
கத்தாதே, ஏதேனும் செய்!!
————————————————————————
3
ஒருவேளை பட்டினி
மரணத்தைவிட
வெகு சிறிது
சிலரின்
மரணத்தை
ஒரு வேளை சோறோ
கையளவு நீரோதான்
தீர்மாணிக்கிறது,
வாருங்கள்
நமது
ஒருவேளைப் பட்டினியையேனும்
உலக ஏழைகளின் –
மரணத்திற்கு எதிராக சேகரிப்போம்..
————————————————————————
4
பரக்
பரக்
பரக்கென
ஒரு கையை கழுவ
பத்து கிளீ னிக்ஸ் இழுப்போரே
நிறைய மரங்களை வெட்டினால் தான்
அது காகிதமாகி பின்னர்
அதிலிருந்து ஒரு கட்டு
கிளீனிக்ஸ் கிடைக்கிறது.,
கொஞ்சம் குறைத்துக்கொள்ளுங்கள்
மிஞ்சும் மரங்களால் – நாளையொரு
நிலநடுக்கமோ
மழையின்மையொ இல்லாதுபோகலாம்..
————————————————————————
5
சோற்றை
பரிமாறிக் கொள்ளுங்கள்
பட்டினியை
மனிதத்தால் நிரப்பி
கண்ணீரை
பெருந்தன்மையால் துடைத்துபோடுங்கள்..
பசியில்
ஓருயிர் இறப்பதென்பது
உயிரோடிருப்பவருக்கு
இழுக்கு!!
————————————————————————
6
சோற்றை இரைக்காதீர்
சோறு உயிருக்கு வேர்
தண்ணீரை சேமியுங்கள்
நீர் உயிருக்கு நேர்
காற்றை வீசச் செய்யுங்கள்
காற்று உயிரின் மூலம்
அதற்காக
அனைத்தையும்
ஓருயிரிற்காகமட்டுமே பதுக்கிக்கொள்ளாதீர்கள்;
காற்றோ
தண்ணீரோ
சோறோ
பிறரின் உயிரைவிட பெரிதில்லை
உயிர் எல்லாவற்றிலும் வலிது!!
————————————————————————
7
நீதிக்கு போராடினால்
ஏழையை பணக்காரன் அடிக்கிறான்
தர்மம் பற்றி பேசினால்
ஆள்பவன் அடிமையே என்கிறான்
நாட்டிற்கு போராடினால்
வந்தவன் வாழ்பவனை கொல்கிறான்
வயிற்றுக்கு போராடினால்
மரத்திற்குபதில் –
மனிதரின் உயிரையே எடுக்கிறான்
போதும் போதும்..
இதிலெல்லாம்
நாம் அழிகிறோம்
நான் அழிவதேயில்லை..
நான் அழிகையில்
இதலாம் அடங்கி
நாம் வாழக்கூடும்..
————————————————————————
8
மண்ணிற்கு தெரியாது
இது மலர்
இது மரம்
இது விலங்கு
இது மனிதர்
இது இந்தியா
இது நேபாலென்று;
நமக்குத் தெரியும்
இறந்தது அத்தனையும் உயிர்..
————————————————————————
9
கொஞ்சம் மின்சாரம்
கொஞ்சம் தேநீர்
கொஞ்சம் உணவு
கொஞ்சம் ஆடை
கொஞ்சம் தங்கம்
கொஞ்சம் பணம்
கொஞ்சம் செலவு
கொஞ்சம் தேவை
கொஞ்சம் கொஞ்சமாக
கொஞ்சம் கொஞ்சமாக
தனக்கானதை முதலில் குறைத்துக்கொள்ளுங்கள்..
மெல்ல மெல்ல இதனால்
மாறும் உலகில்
மிஞ்சியதெல்லாம் பிறரின் மகிழ்ச்சியும்
தனக்குள் தான் சேமித்தத் தெய்வீகமாகவும் இருக்கலாம்..
————————————————————————
10
கவிதை, இலக்கணம் தாண்டி
காதலில்
அரசியலில்
வாழ்தலில்
சாதலில்
இணையத்தில்
எங்கெங்கோ இருக்கிறது;
எப்படி எப்படியோ
முளைக்கிறது;
கவிதையாக இல்லாமலே
எண்ணத்துள் ஏறிநின்று கர்ஜிக்கிறது;
அதனுள்
கொஞ்சம் தோண்டி
நானும்
பிறர் சிந்திக்க எடுத்துக்கொண்டேன்
ஒருவேளை கவிதையாக இல்லையெனில்
மன்னிப்பீர்களாக..
சிரிப்பு வருகிறது
அதான்
எப்போதே
எனை மன்னித்துவிட்டீர்களே..
————————————————————————
வித்யாசாகர்