1
நம் தெருமுனை
தேனீர் கடையோரம்
அமர்ந்திருப்போம்,
என் கடையில் தேனீர்
அருந்தாமல் இவனுக்கு பொழுதே
விடியாதென்பார் கடைக்காரர்,
உனக்குத்தானே தெரியும்
உன்னை காணாதெனக்கு
விடியாது பொழுதென்று..
————————————————————-
2
அரை குடம்
தண்ணி பிடிக்கவா
அடிக்கடி வந்தாய் என்பாள்
குழாயடியில் அந்தக்கா
தூக்க முடியலக்கா என்பாய்
அக்காவிடம்
ஆமாமாம்
இதயம் ரொம்ப கனமென்பாள்
அந்தக்கா
எனைப் பார்த்துக்கொண்டே..
————————————————————-
3
தலையிலிருந்து பூ
விழும்
எடுத்துத் தொடுக்க குனிகையில்
எனைப் பார்த்துவிடுவாய்
எடுக்காமலே போவாய்
நமக்கும் காதல் வரும்
திருமணம் நடக்கும்
திரைப்படம் பார்க்கப்போவோம்
படத்தில் நாயகி வருவாள்
ஒற்றை ரோசா கீழே விழும்
அவன் ஓடிவந்து எடுப்பான்
நாயகியைப் பார்ப்பான்
அங்கே பாடல் வரலாம்
வராமலும் போகலாம்
நமக்கு இரவு வரும்
நீ வந்து படுக்கும் முன்
அந்த உன் தலையிலிருந்து கீழே விழுந்த
மலரெடுத்து மேசையில் வைத்துவிட்டு
வேறுபுறம் திரும்பி படுத்துக்கொள்வேன்
நீ அந்த வாடிய மலரையெடுத்துப்
பார்ப்பாய்
என்னையும் பார்ப்பாய்
அந்த வாடிய மலர்
இன்னும் கொஞ்ச நாளுக்கு அப்படி மணக்கும்..
————————————————————-
4
தெருவில் விற்கும்
சுண்டல் தின்னாதே என்று
அம்மா தினந்தினம் திட்டுவாள்,
தெருவில் போகும்
உன்னை காணவென்று
அம்மாவிற்குச் சொல்வதெப்படி ?
அம்மா பேசட்டுமென
அடுத்தநாளும் – அதே கடையில்
சுண்டல் வாங்கி அமர்ந்திருப்பேன்
நீ தூர இருந்து வர வர
சுண்டலில் வரும் ஆவிபோல
ஊரெல்லாம் நம் சேதி பரவும்
ஊராருக்கென்ன வேலை, அவர்கள்
உன்னையும் என்னையும்
பார்த்து பார்த்து
வீட்டிற்கு வீடு பத்தவைப்பார்கள்,
எப்படியோ எரியட்டும் நம்
காதல் ஜோதியென – நான்
தினம் தினம் சுண்டல் வாங்க வருகிவேன்
நாளாக நாளாக நீ
முழு பாவாடையிலிருந்து
அரை புடவைக்கு மாறிவிட்டாய்
எனக்கும்
சுண்டல் பிடிக்காமல்
பஜ்ஜியும்
பஜ்ஜி போய்
பகோடாவும்
பக்கோடாவிற்கு பிறகு போண்டாவும் மாறிவிட்டது
ஆனால் –
நீ மட்டும் மனதிற்குள்
மாறாதிருக்கிறாய்,
காதலெப்போதும் உள்ளே கனன்றே கிடக்கிறது..
————————————————————-
5
நீ தலையை
நேராகவும்
பக்கமாகவும் வாரி வருவாய்
கண்ணில்
கூடியும் குறைத்தும்
மையிடுவாய்
ரோஜா கூட
தலையில் ஒன்றாகும்
இரண்டாகும்
ஆனால் உன் –
புன்னகை மட்டும் உதட்டில்
அப்படியே இருக்கும்
அந்தப் புன்னகைக்குத் தான்
இந்த இதயம் பரிசு
அந்தப் புன்னகைக்குத் தான்
இந்த கவிதையும் பரிசு
————————————————————-
வித்யாசாகர்