உணவு செய்தோம்
ஆடை நெய்தோம்
வீடு கட்டினோம்
வாகனம் தயாரித்தோம்
வசதிகளை பெருக்கினோம்
விண்ணையும் மண்ணையும்
ஒரு புள்ளி பொத்தானில் இணைத்தோம்
எல்லாவற்றிலும்
மாறுபடுகையில் மாற்றம் உணரப்படுகிறது
மாறுபட்ட மனிதர்கள் தோன்றிய
மண்ணில்
மதமும் அவரவர் வணங்கும் சிந்தனைக்கேற்ப
மாறி இருப்பதன் யதார்த்தத்தில்
எப்படி
சுயத்தை திணிக்கிறோம்?
இது நீ
இது நான்
அவ்வளவு புரிந்திருந்திருந்தால்
ரத்தத்தில் நம்
பூமி நனைந்திருக்காது..
வெட்டிய தலைக்கு
வெற்றி நிகழ்ந்திருக்காது
வெட்டும் கைகளில்
கண்ணீர் சொட்டப் பார்
நீயும் நானும் வேறு வேறா?
உனது நோக்கமும்
எனது நோக்கமும் வேறு வேறா ?
நீ எதை நோக்கிப் புறப்பட்டாயோ
அதை அடையத் தானே நானும் பயணிக்கிறேன் (?)
பிறகு ஏன்
உனக்கும் எனக்கும் மதவாதம்?
நீ வேறு சட்டை போட்டிருக்கிறாய்
நான் வேறு போட்டிருக்கிறேன்
நமக்கு
ஆடை அணிவித்தவர்கள் நாமாக இருக்கலாம்,
ஆடை செய்தவர்கள் நாமல்லவே (?)
ஒவ்வாமை உண்டெனில்
சீர் செய்தல் நியாயமா
உடம்பை அறுத்தல் நியாயமா?
சிந்தியுங்கள்
சிந்தியுங்கள் தோழர்களே
மதம் வேண்டுமோ வேண்டாமோ
அது அவரவர் மனது ஏற்றதன் புரிதல்படி
இருந்துபோகட்டும் –
ஆனால் உயிர் வேண்டும்
வாழ்தல் எல்லோருக்குமே வரம்
இறப்பு எல்லோருக்குமே பொது
போனால் –
திரும்ப கிடைக்காத உயிர்
வாழும் அத்தனைப்பேருக்குமே பெரிது..
பர்மாவில் இல்லை
எங்கே யார் யாரைக் கொன்றாலும்
கொலையை மிஞ்சியதொரு
பாதகமில்லை,
மீட்க முடியாததை
தொலைப்பதற்கு யாருக்கிங்கே உரிமையுண்டு?
போடுங்கள்
அத்தனைப்பேருமே
ஆயுதங்களைப் போட்டுவிடுங்கள்,
கடவுள் என்பது ஒரு தெளிவு நிறையும் புள்ளி
நிறைவு புரியுமிடம்
சமநிலை கலையாத பொது
சரிசமம்
நடுநிலை
நடுநிலை என்பதே ‘வேண்டிய அறிவின் முக்தி
பிறஉயிர் காத்தலே பொதுநிலை
இறைநிலை
இறைநிலைக்கு
பொது நிலைக்கு உயிர் கொடுக்கலாமா?
உயிர் எவ்வளவு பெரிது தெரியுமா?
தெரியவேண்டுமெனில்
செய்யவேண்டாம் சிந்தித்துப் பாருங்கள்
உங்கள் கைகளால் உங்களின் தாயை
வெட்ட முடியுமா ?
உங்கள் கைகளால்
உங்களுடையப் பிள்ளையை சுட்டுக் கொல்ல கைவருமா?
வராதில்லையா ?
வராதெனில் அதுதான் ஒரு உயிரின் விலை
அதை எடுக்க
எதற்கும்
யாருக்குமே உரிமையில்லை
கடவுள் மதம் எல்லாமே
கற்றறிந்த அறிவு படி -நாம்
கற்றுக் கொண்டது தான்., ஆனால்
உயிர் கற்றது அல்ல மாற்றிக்கொள்ள
பெற்றது
பெற்றதை பேணிக்காப்பதே
பொதுக்கடன்
அழிப்பதல்ல..,
கண்டிப்பாக யாரையும்
அழிப்பதல்ல..
————————————————–
வித்யாசாகர்