1
சிரிப்பழிவதைக் காட்டிலும்
ஒரு கொடூர வலியில்லை..,
கூடஇருந்து சிரிப்பவர்
நடப்பவர்
உடன் நகமும் சதையுமாய் வாழ்ந்தவர்
இறப்பதைக்காட்டிலும்
தன் மரணமொன்றும்
தனக்குப் பெரிதாக
வலித்துவிடப் போவதில்லை..,
போனவரை
போனவராக
விட்டுவிட இயலாததொரு
நினைவு எரிக்கும்
நடைபிண வாழ்க்கையே நம் வாழ்க்கை..,
குலுக்கி குலுக்கி
உண்டியல் ஆட்டிக் காண்பிக்கும்
சிறுபிள்ளையினைப்போல
இயற்கை நமை குலுக்கி குலுக்கி யாரையோ
ஒருவரை நம்மிடமிருந்து – நம்
வலியறியாமலே கொண்டுபோய்விடுகிறது.,
இப்படி
ஒவ்வொருவரையாய்
உடனிருப்போரை
இழந்து இழந்து
மெல்ல
மெல்ல
எரிந்து எரிந்து
தீரும் மெழுகாக நின்றுக் கரைவதைக் காட்டிலும்
ஒரு காற்றாடித்தாற்போல்
சட்டென நின்றுவிடலாம்; அது மேல்!!
———————————————————————————
2
சாவு
மாலை
ஊதுவத்தி
விளக்கு
உடஞ்ச தேங்கா
மேளம்
கதறல்
கூத்து
எரிக்கிறது
புதைக்கிறது
என்னத்தைதான் செய்து தொலைத்தாலும்
கண்முன் நிற்கிறதே அந்த முகம் (?)
அந்த முகத்தின் நினைவு (?)
அதை எது கொண்டு எரிப்பது ?
இப்படிக் கண்ணீர்க்கொண்டு அழிப்பதைக் காட்டிலும்
செந்நெருப்பு மூட்டி போ;
மூளட்டும் பச்சை தேகமெங்கும் தீ
விட்டுப்போகட்டுமந்த பிரிவில் வலிக்கும் உயிர்!!
———————————————————————————
3
நெருப்பு உள்ளிருக்கும்
தீக்குச்சிகளைப்போலவே மனதுள்
உரசிக்கொள்கிறது நினைவுகள்..
சமயம் பார்த்து
தானே எரியும் தீக்குச்சிகளையோ
யாரோ கொளுத்திவிடும் யதார்த்தத்தின்
அனல் பட்டு வலிக்கும்
ஏக்கத்தின் வடுக்களையோ கூட
தொட்டுப் பார்த்து தொட்டுப்பார்த்து
அழத்தான் செய்கிறது மனசும்..
உண்மையில் மனதழும் கண்ணீருக்கெல்லாம்
வேரே இருப்பதில்லை,
யாரோ தூவிய விதையின் கிளையாக
ஆயிரமாயிரம் மரங்கள்
அதுவாக உள்ளே முளைத்துக்கொண்டு
அதுவாக ஆடுகிறது
அதுவாக வலிக்கிறது,
காற்றில் படாமல் வழியும்
கண்ணீருக்கு ரத்தம் சமமென்று
சாகும்வரை தெரியாமல்
வாழ்வை மிதித்து மிதித்து தள்ளியவாறு
மயானக் காடுதேடி அலைவதே
மனிதருக்கிடப்பட்ட சாபம் போல்..
யாரோ அடிக்கிறார்கள்
யாரோ அணைக்கிறார்கள்
எங்கோ நிற்கிறோம்
எப்படியோ மறைகிறோம்
சட்டென அணைகிறது விளக்கு
சாம்பலாகிப் போகிறது உடல்,
சுயம் அழிந்துப்போகிறது
ஒன்றுமில்லா –
அந்த இடத்திலும் நினைவுகள் மரங்களாகின்றன
மரங்கள் காடாகிறது,
காடெங்கும் தீக்குச்சி
தீக்குச்சி எங்கும் நெருப்பு
உள்ளே வலிக்கும் நெருப்பு
நினைவு தகிக்கும் நெருப்பு,
எல்லோரையும் எல்லாமுமாக இருந்து
கண்ணீரால் சுடும் நெருப்பின் ரணம்
ரணம்
ரணமெங்கும் பரவி நின்றுக்கொண்டு
செத்தும் சுடுமிந்த மரணம்..
மரணம்..
மரணம்..
என்னதான்
செய்வதிந்த மரணத்தை?
இதோ நானெடுத்து விழுங்கிவிடுகிறேன் – இனி
எனது கண்முன் யாரின் மரணமும் நிகழாது..
———————————————————
வித்யாசாகர்
வணக்கம்
அண்ணா
ஒவ்வொரு மனிதனின் வாழ்கையும் இப்படித்தான் ஆகிறது இயற்கையின் நீதி… நெஞ்சை உருக்கும் வரிகள் பகிர்வுக்கு நன்றி.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
LikeLike
நன்றிப்பா..
LikeLike