1
வீடு பெருக்குகையில்
விளையாட்டுப் பொருட்களை யெல்லாம்
புலம்பிக்கொண்டே எடுத்து
அடுக்கினாள் அம்மா
விளையாட்டுப் பொருட்களை யெல்லாம்
புலம்பிக் கொண்டே
கலைத்துப்போட்டது குழந்தை..
——————————————————————–
2
விளையாட்டுப்
பொருட்களைப்போலவே
மனதிற்குள் அடுக்கிவைத்துக் கொள்கிறார்கள்
குழந்தைகள் நம்மை
இது அப்பா
இது அம்மாவென்று!
——————————————————————–
3
பள்ளிக்கூடம் முடிந்து
மணி அடித்ததும்
ய்யே…. என்றுக் கத்தினார்கள்
வீட்டிற்குப் போகும் குழந்தைகள்,
மறுநாள் வீட்டிலிருந்து
பள்ளிக்கூடம் வருகையில்
சோகமாய் நடந்து வந்தனர் பிள்ளைகள்,
ய்யே…. யெனக் கத்தியது பள்ளிக்கூடம்..
——————————————————————–
4
அவர்கள்
நினைத்துக் கொள்கிறார்கள்
அவன் தான் செல்லப்பிள்ளை
இவன்தான் செல்லப்பிள்ளை என்று,
அவர்களுக்கெப்படித் தெரியும்
இரண்டுப்பேருமே
பெற்றவர்களுக்கு
உயிரைவிட பெரியப் பிள்ளைகளென்று..
——————————————————————–
5
தந்தையும் மகனுமானாலென்ன
தந்தையும் மகளுமானாலென்ன
வயிறும் வாயும்
வேறு வேறுதானே என்கிறார்கள்
ஆம்; அதெல்லாம் வேறு வேறு தான்
ஆனாலெங்களுக்கு
உயிர் மட்டும் ஒன்றேயொன்று, அது
அவர்களுக்கான ஒன்று!
——————————————————————–
6
படிச்சியா
படிச்சியான்னு அடிக்கிறது
அந்தகாலம்,
படிக்கலைன்னா விடு
பார்த்துக்கலாம், அது
இந்தக் காலம்
எந்த காலமானலென்ன,
தந்தையர் எப்போதும்
அந்தந்த மகனிற்கான
அப்போதைய தந்தையாகவே இருக்கிறார்கள்..
——————————————————————–
7
உனக்குத் தெரியுமா
நீ புத்தகப்பை யை
சுமந்துச் செல்கையில்
உன் பின்னால் நின்று உனைப் பார்க்கும்
அம்மாவிற்கும்
அப்பாவிற்கும்
அந்தப் பையின்
கனம்கூட நெஞ்சில் கனக்குமென்று ?!!
——————————————————————–
8
தூங்கும்போது நான்
எனது –
குழந்தைகளின் முகத்தையேப் பார்க்கிறேன்
எனைப்போலவேதானே வாழ்க்கை
இவர்களுக்கும்
வலிக்குமென்று துடிக்கிறேன்..
கொஞ்சம் சிரிப்பாகவும்
கொஞ்சம் பயமாகவும் தெரியுமவர்களின்
முகத்தோடு
கத்தி நீட்டாமல் மிரட்டுமந்த
எதிர்காலத்தை
சற்று சபிக்கிறேன்..
கசக்கி பிசைந்து உருட்டி
நல்லதாக மாற்றியக் கனவுகளாக
மனக்கண்ணுள் வீசி
அவர்கள்மீது எரிகிறேன்..
போ; போய்
வெற்றியின் கனவுகளாக
அங்கே விரி..
கட்டளையின் நிம்மதியில்
உறங்கச் சம்மதிக்கிறது என் மனசும்..
——————————————————————–
9
என் பிள்ளை சிரிச்சா ஓரழகு
பேசினா ஓரழகு
நடந்தா ஓரழகு
ரெட்டை பின்னல் போட்டாலழகு
ஒற்றை வகிடு எடுத்தாலழகு
புட்டு என்றாலவனுக்கு
பாலினிக்கப் பிடிக்கும்,
உப்புமான்னா உயிரு
ஓவியமா; தங்கமா வரைவான்
பாட்டா; அருமையா பாடுவான்
மதிப்பெண்?
அதலாம் அவன்தான்
முதலிடம் வருவான்
இப்படி
எத்தனை எத்தனை
ஆசைவார்த்தையுள் வளரும்
இதே அறிவு –
வளர்ந்தப்பின் நாளை தனிவீடு தேடுமென்று
எந்தத் தாய்க்கும் தந்தைக்கும்
நம்ப கூட துணிவிருப்பதில்லை..
——————————————————————–
10
அப்பா இன்னைக்கு எங்க மேம்
என் கைல ஸ்டார் போட்டிருக்காங்க,
அப்பா நான் இன்னைக்கு
முதல் பரிசு வாங்கி இருக்கேன்,
அப்பா நான் மாநிலத்துலையே
முதல் மதிப்பெண் எடுத்துட்டேன்,
அப்பா எனக்கு பெரிய நிறுவனத்துல
வேலை கிடைச்சிடுச்சி.,
இப்படி சொல்லிச் சொல்லி
பூரிக்கவைத்த
அதே மகன்தான் –
இன்று
வயதாகி அமர்ந்திருக்குமிந்த
வாசலோரக் கிழவனை தாண்டிப் போய்
மனைவியிடம் சொல்கிறான்
உள்ளே வா சொல்றேன்..
——————————————————————–
வித்யாசாகர்
வணக்கம்
அண்ணா
அருமையான வரிகள் இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
LikeLiked by 1 person
நன்றிப்பா..
LikeLiked by 1 person
பிங்குபாக்: Mudukulathur » இது நிறம்மாறும் பூ..