பசிக்கு உணவு செய்த
மானத்திற்கு ஆடை நெய்த
வாழ்விற்கு நீதி போதித்த மானுடம்
இன்றும் பேசிவரும் சாகா தமிழுக்கு வணக்கம்..
——————————————————————————
காற்றடித்துக் கலைந்துப் போன கோலம்போல
வாக்களித்து நொடிந்துப் போகும்மனிதர்போல
தீர்ப்பெழுதி நீதி குலைக்கும்
மேலோர்; சிலர்போல
எங்கள் வாழ்வெல்லாம் அதர்மப் புண்பிடித்து வலித்தாலும்
அதற்கெல்லாம்
தமிழால்
உணர்வால்
மொழியால் மருந்திட்டு
சீர்திருத்தம் பேசும் கவிதைப் பட்டறையான
எங்களின் சந்தவசந்தத்திற்கு எனது சிரந்தாழ்ந்த வணக்கம்..
——————————————————————————
தமிழழகைப் பேசி
தமிழழகைப் பாடி
தமிழாக வாழ்ந்து
தமிழுக்கென்றே இணையத்தில் இடம் கண்டக் கவிஞர்
சந்தவசந்தம் எனும் அமுதசுரபித் தாய்க்கு
முதலான மூத்தப் பிள்ளை
முற்றும் அழகானத் தமிழாசான்
எங்களின் கவியரங்கத் தலைமை திரு. இலந்தை சு. ராமசாமி ஐயா
அவர்களுக்கும் எனது பணிவான வணக்கம்..
——————————————————————————
தலைப்பு – இன்றும் வேண்டும் அது..
ஒரு இரண்டுநாள் எனதுப் பள்ளிக்கூடத்து
மரத்தடியில் அமர்ந்திருக்கவேண்டும்; கத்திப் பூ
வைத்து விளையாட வேண்டும், கருவறைக்குள்
பத்துமாதம் படுத்திருக்கவேண்டும்..
இதுதான் சாமி என்று நம்பிய பொழுதும்
மனதும் நிம்மதியும் வேண்டும், தனியேக்
கட்டிய கோவிலில் இன்றில்லாத என் தங்கையோடும்
அன்றிருந்தச் சாமியோடும் பேசிச் சிரித்திருக்கவேண்டும்..
அப்பா சொல் மறுக்காத, அம்மா முத்தம்
விடுபடாத அந்தத் தூங்கும்முன் இரவுவேண்டும்,
தம்பிகளோடுக் கேட்ட கதைகளும், வாழ்வின் கதவு
திறந்தே யிருப்பதாயும் நம்பிப்படுத்திருக்கவேண்டும்..
கனவுகளை விதைத்த, எங்களின் காலடி சுமந்துச்சிரித்த
பழையவீடு வேண்டும், அந்தக் கிணற்றடியில்
குளித்துவிட்டு – பாசாங்கு இல்லாத நிர்வாணத்தை
அம்மாவின் அன்பினால் துவட்டிக்கொள்ளவேண்டும்..
தலையில் கோடு பதிய புத்தகப்பை மாட்டிநடந்த தெருவும்
தெருவோரம் கேட்கும் “அந்திமழை பொழிகிறது” பாடலும்
பாடலோடும் படத்தோடும் ஒன்றிப்போய் – இந்த உலகை
ஒரு சுண்டுவிரலில் தூக்கிவிடமுடியுமென்று நம்பியத் துணிவும்
தன்னம்பிக்கையும், எதற்கும் அசரா அப் பொழுதுகளும்வேண்டும்..
அதே தெருவில் அவள் நடக்க, நானும் நடக்க
தொட்டுத் தொட்டுப் பேசி, உரசி உரசி மனசு கூடி
புத்தகப்பையைப்போலவே நாங்கள் நினைவுள் கனத்திருக்க,
பார்த்துப்பார்த்து வெறும் எழுதாக் கவிதையாகவே நாட்கள்’ அதுவாகத்
தீர்ந்திருக்க, மனதுள் மீண்டும் வலிக்காது அந்த காதல்வேண்டும்..
மூன்று ரூபாய்க்கு அரிசி, மூன்றோ நான்கோ பேர்
மட்டும் லஞ்சப்பேரோழி, எவனோ ஒருத்தன்சதிகாரன்
ஏதோ ஒரு கட்சி சரியில்லை, யாரோ சிலர் மட்டும்
திருடர்களாய் இருந்த அந்தப் பச்சைவயல் நாட்கள் வேண்டும்,
அங்கிருந்து அறிவோடு
அந்தச் சிலரைமட்டும் திருத்திடவேண்டும்..
——————————————————————————
வித்யாசாகர்