23, கொடுப்பது என்பது பெறுவது என்றும் அர்த்தம்..

being-the-light-art-of-giving-advice

நேசத்தின் கரங்களை ஒடித்துக்கொண்டு, நிமிடங்களையும் நொடிகளையும்கூட அவசரத்திற்கு விற்றுவிட்டு, மெல்ல மரணத்தை பரிசாக அடையவே ‘எங்கும்’ நகரத்தைஉருவாக்கி, வெட்டிய மரங்களோடும் விற்ற விளைநிலங்களோடும் உயிர்காற்றில் ஒரு பாதியைக் கொடுத்துவிட்டு, வீட்டுக்கு மேலே விவசாயமென்றும்’ வெளிநாட்டிலிருந்து இறக்குமதியென்றும்’ பழங்களையும் காய்கறிகளையும் விதைத்து’ வாங்கி’ மருந்திட்ட வாசனைக்கெல்லாம் மனதைப் பழகிக்கொண்டு, இருட்டை வெப்ப விளக்குககளிட்டுப் பகலாக்கி, பகலை குளிரூட்டி எந்திரத்தால் மிதமாக்கி, சூரியனுக்கும் சந்திரனுக்கும் அறிவியலால் சூடுபோட்டு, வானத்திலும் பூமியிலும் அடையாத ஓட்டையிட்டு, வெப்ப மூச்சுக்கு இடையே பல கதிர்களைப் பாய்ச்சி, மின் மென் அலைகளின் வழியே மனங்கள் பேசி, மாறும் உலகின் வடிவத்திற்கெல்லாம் மாறி மாறி ஆன்மீக ஞானத்தைக் கூட அரைவிலைக்கோ கால் விலைக்கோ மோசத்திற்கோ விற்றுவிட்டு, பகுத்தறிந்துப் போதித்த வாழ்விற்கான நீதிகளையெல்லாம் பட்டும்படமாலும் கற்று, கெட்டக் கதைக்குச் சாட்சியாக நமக்குள்ளேயே நாம் சண்டையிட்டு, சம்பாதிக்கும் பணத்தில் பாதியை மருத்துவம் தேடி கொடுத்து, மீதியை மருத்துவம் பெற்றுக் கெடுத்து, சோற்றுக்கு முன்னும் பின்னும் மாத்திரைகளோடு வாழும், அதும் பணமிருந்தால் மட்டுமே வாழயியன்றப் புண்ணியப் பிறவிகள் நாமெல்லாமென்பதில் பெருமிதமெப்படிக் கொள்ளமுடியும்.. ?

வலது வெண்ட்ரிக்கிளுக்கும் இடது ஆரிக்கிளுக்கும் இரத்தத்தைச் செலுத்திவிட்டு, மூளையை வருமானத்திற்கு மட்டும் பயன்படுத்திக்கொண்டு, மனசாட்சியை கதைகளிலும் கண்டப் படங்களிலும் பார்த்துவிட்டு, பக்கத்திலிருக்கும் பாட்டியை தாத்தாக்களையெல்லாம் பாரமாக எண்ணிச் சுமக்கும்’ மரத்தை மறந்த விழுதுகளாக நம்மில் நிறையப்பேர் வாழ்கிறோமே சரியா.. ?

தெருவில் ஒருவன் பசியோடு நின்று பிச்சை எடுக்கிறானென்றால் அவனின் கண்முன்னே ஏசி காரில் போகும் நாம் தவறு என்று நமக்கு புத்தியில் உரைப்பதில்லையே ஏன் ?

மாடிமீது நின்று மழையை ரசிக்கத் துடிக்கிற மனதிற்கு கூரைவீட்டின் ஒழுகளைப் பற்றி கவலைப்பட நினைவற்றுப் போனது நம் ஒருபக்கம் சாய்ந்துள்ள வாழ்வின் அநீதிக்கானக் குற்றமில்லையா ?

என் வயிறு என் வீடு என் வாழ்க்கை என் சாதி என் மதம் என் நாடு என் மக்கள் என் வலி என் சந்தோஷம் என் ஆசை என் கோபம் என் என் என் என்று எண்ணி எண்ணி, நமை அத்தனைப் பேரிலிருந்தும் நாம் அப்பட்டமாய்ப் பிரிந்து, தான் எனும்’ சுயம் எனும்’ ஒற்றைச் சொல்லிற்காகவே ‘பொது’ எனும் எல்லோரிற்குமானச் சிந்தனையை தொலைத்துவிட்டோமே அது சரியா ?

நான் உழைக்கிறேன், நான் சம்பாதிக்கிறேன் என்றால் ஆச்சா ? அவன் ஏன் உழைக்கவில்லை, அவனுக்குப் படிக்க எதனால் முடியாது, என்னால் முடிவது அவனுக்கு முடியாமல் போகிறதே ஏன், அவனுக்கு எது தடை, அவனைப் பற்றி ஏன் நாம் கொஞ்சம் சிந்திக்கவில்லை ?

நான் வாழ்கிறேன் என்றால் அவனும் வாழ வேண்டாமா? எனக்குப் பசித்தால் அவனுக்கும் பசிக்குமே ஆனால் அவன் சாப்பிடவில்லை நான் மட்டும் தின்கிறேனே ஏன் ஏன் ஏனிந்த சுயநலம்? எங்கே போனது என் மனுநீதி ? எங்கே செத்தது எனது மார்தட்டும் மனிதம் ?

கொஞ்சம் கொஞ்சமேன எல்லோரும் நாம் நம் அருகில் உள்ளவர்களைப் பார்த்தால், தனக்காகச் சிந்திக்கும் போதே பிறருக்காகவும் சிந்தித்தால்; நாளை தெருவில் நின்று ஒருவன் பிச்சை எடுக்கவோ, மாடிக்கு கீழே ஒருவன் ஒட்டைக் குடிசையில் நனைந்து நம்மையெல்லாம் பெருமூச்சில் மானசீகமாய் எரிக்கவோ வாய்ப்பிருக்குமா?

நாம் செய்வதில்லை. நம் வீட்டில் உள்ள மனிதர்களைக் கூட நாம் நம் பேச்சுக்கு இணங்காத பொருமலை உள்வைத்துக்கொண்டு தான் பார்க்கிறோம். நான் சொல்லவேண்டும், நான் செய்யவேண்டும், நான் பேசுவது தான் சரி, எனக்கு வலித்தால் தான் வலி, எனக்குப் பசித்தால் தான் பசி, ச்சீ.. அசிங்கமாயில்லை ?

பக்கத்துல ஒருத்தன் வலியால துடிக்கையில, ‘நாம நல்லாயிருந்தா துடிப்பவனைத் தாங்கிக் கொள்வது தான்’ உயிரின் சிந்திக்கத்தக்க இயல்பு. அவனுக்கு கிடைக்கலை, அவனுக்கு முடியலை, அவன் பட்டினியா சுத்துறான் ஆனா உனக்கு கிடைச்சிருக்கு முடிஞ்சிருக்கு சாப்பிட சோறிருக்குன்னா’ கொஞ்சம் அவனையும் கூப்பிட்டு கொடுத்துப் பாறேன்; அப்படி கொடுக்கணும் செய்யனும்னு ஒவ்வொருத்தரும் தன்னைத் தான் முதலில் பிறர் பற்றி நினைங்களேன். அந்த நினைப்பது என்பதன் அர்த்தம் உங்களைப் பற்றியும் இன்னொருத்தன் வேறெங்கிருந்தோ நினைக்கிறான் என்பதும் ஆகலை? அப்படியொரு சங்கிலிக்கு உட்பட்ட உறவுதான் நமக்குள், நம் மொத்த உயிர்களுக்குள் இருக்கும் உறவும் என்பதை மானசீகமாய் உணருங்கள்.

ஒருத்தனுக்கு கொடுக்கணும்றதுனால சோறுபோட்டு போட்டு உழைக்காதவனை இன்னும் தெண்டச்சோறு ஆக்கி வீட்டில் சோம்பேறியாய் முடக்கி வைக்கனும்றது இல்லை; கொடுக்கனும்றது வெறும் சோறோ பணமோ இல்லை; மனசு. எண்ணம். பிறருக்கு செய்யணும், பிறருக்கு உதவணும், அவனும் வளரனும்ற எண்ணம். அவனும் நல்லாருக்கனும்ற எண்ணம்.

எனக்குக் கிடைக்குதுன்னா அது அவனுக்கும் கிடைக்கணும். அவனால முடியுமென்றால் அது நம்மாலும் முடியும் தானே.. ? யோசிக்காதீங்க முடியும். ஒருத்தரால ஒன்னு முடியுதுன்னா அது இன்னொருத்தராலும் முடியும். அதுக்காக அவன் குண்டா உயரமா பலசாலியா இருக்கான் நூறு கிலோ தூக்குவான், நான் ஒல்லியா குள்ளமா இருக்கேன் என்னால எப்படி நூறு கிலோன்னு விதண்டாவாதமா யோசிக்கிறது இல்லை. ஒரு சின்னதிலிருந்து தான் ஒரு பெரியது உருவாகிறது என்பதை கவனிக்க மறந்துவிடாதீர்கள். ஒரு புள்ளியிலிருந்து தான் எல்லாமே உருவமெடுக்கிறது. ஆயிரமாயிரம் மைல்களைக் கூட ஒவ்வொரு சின்னச் சின்ன அடியினால் தான் கடக்கமுடிகிறது. எதற்கும் முதலில் முயற்சி வேண்டும். முயற்சி செய்து பார்த்தால் மட்டுமே மட்டுமே தெரியவரும் முடியாது என்றும் ஒன்று இல்லவேயில்லை என்று.

அதேநேரம் வெறும் அந்த முடியும்ற கர்வத்தினால் மட்டுமே எல்லாம் முடிந்துவிடுவதுமில்லை. முடியும் என்றதை முடிப்பதற்கு பின்னே உழைப்பு நம்பிக்கை உறுதி என எல்லாம் தேவையாய் இருக்கிறது. அப்படி எல்லாம் ஒத்துப் போகையில் முயன்று முயன்று ஒருநாள் நம்மால் வானத்தைக் கூட எட்டி தோட்டுவிட முடியும். அப்படி அறிவாலும் கடின உழைப்பாலும் தொட்டவர்கள் தான் இன்று வரலாற்றில் நிற்கிறார்கள்.

ஆக, முடியும் என்பதற்கு முதலில் எண்ணம், பிறகு நம்பிக்கை பிறகு முயற்சி உழைப்பு உறுதி எல்லாம் வேண்டும். எல்லாம் நம்மிடம் உண்டு ஆனாலும் ஒருவர் பசியில் சாவதும் ஒருவர் பணத்தில் சாவதும் ஒரே பார்வையில் நிகழ்கிறது எனில்; ஒரே இடத்தில், ஒரே மண்ணில், மனசாட்சிக்கு ஒப்பாது மிக அருகருகில் நடக்கிறது எனில் அதை மாற்றிக்கொள்ள ஏன் நம்மால் முடியாது?

நல்லா இதற்குமுன் நடந்த பல நடப்புகளைவைத்து யோசித்துப் பார்த்தீங்கன்னா புரியவரும், அல்லது இனியேனும் அறிவுக்கு எட்டியவாறு ஏதேனும் செய்து அனுபவித்து பார்த்தால் தெரியவரும்; பொதுநலம்றது ஒரு சுகம். விட்டுக்கொடுப்பதென்பது ஒரு நிம்மதி. நல்லாருக்கட்டுமே என்று எண்ணுவது ஒரு அலாதி. கொடுப்பது என்பதன் அர்த்தமே வேறொன்றைப் பெறுகிறோம் என்பது தான். எனில் நல்லதைக் கொடுத்தால் தானே நம்மாலும் நல்லதைப் பெற முடியும் ?

எனது அண்ணன்தம்பியை பட்டினியாகப் போட்டுவிட்டு மூன்றாம் வீட்டுக் காரனைப் பற்றி என்னால் யோசிக்க இயலாதுதான், ஆனால் அந்த மூன்றாம் வீட்டுக் காரனின் பசிக்ககத்தான் நாம் நம் வீட்டிலிருக்கும் அண்ணன்தம்பியின் பட்டினியைப் பற்றிச் சிந்திக்கவேண்டும்.

மொத்தத்தில்; எண்ணம் என்பது உறவோடு நிற்பதல்ல, உயிரோடு நின்றுச் சிந்திப்பது. நான் செத்தாலும் எனது காலடியில் மிதிபட்டு ஒரு எறும்பு செத்தாலும் ஒண்ணுதான். ஒண்ணுதான் இரண்டும் உயிர்தான். உயிர் என்பது ‘ஒரு’ நிலைதான். புரிதலும் வாழ்வின் அறிதலும் தான் வேறு வேறே தவிர உயிர் என்பது ஒன்றுதான். தண்ணிக்குள்ளிருந்து வரும் நீர்க்குமிழி காற்றில் கலக்கும்வரைதான் நம் வாழ்க்கை. உள்ளிருந்து வருகையில் காற்றின் அளவைப் பொருத்து அந்த நீர்க்குமிழி சின்னதாகவும் பெரியதாகவும் இருக்கலாம், அதே மேல்மட்டத்திற்கு வந்து காற்றில் கலந்துவிட்டால்; காற்றிற்குள் எது சிறியது? எது பெரியது?

அந்த நீர்க்குமிழியின் வடிவம் தான் உடல் பிறப்பு பெருசு சின்னது இது அது எல்லாம். உள்ளிருக்கும் காற்றும் வெளியிலிருக்கும் அண்டச் சராச்சரத்தின் காற்றும் வேறு வேறல்ல. எல்லாம் ஒன்றுதான். மேலே வந்து நீர்க்குமிழி வெடித்து காற்று காற்றோடு கலந்துவிட்டபின் பிறகேது, உடல் பொருள் ஆவி எல்லாம்? அதன் பின் ஏதுமில்லை; எல்லாம் ஒரு சக்தி என்பதைத் தவிர. ஆக, அந்தக் காற்றைப் போல உயிரும் பொது. உயிரும் ஒன்று, ஒன்றே ஒன்று எனில் –

அந்த ஒற்றை உயிர் மீதான அக்கறை, கரிசனம் எல்லோருக்கும் வேண்டும். ஒவ்வொருத்தருக்கும் வேண்டும். என்னிடமிருந்து என்னிடமிருந்து என நம் அனைவருக்கும் நம் அனைவர்ப்பற்றிய எல்லோரின் நலன் பற்றியச் சிந்தனை ஒருமித்து எழல் வேண்டும்.

பிறகு யோசியுங்கள் யார் மிஞ்சுவார் தெருவில் தனியே நின்று ஒரு வயிற்றுச் சோற்றிற்கு பிச்சை எடுக்க ? அல்லது பிறர் பொருளை திருடி தனதாக்கிக் கொள்ள ? நல்லவரையும் கெட்டவரையும் நாம்தான் உருவாக்குகிறோம் என்பதை மறந்து நடக்கத்துவங்கிய இடத்திலிருந்து தான் மிதிக்கவும் துவங்கியிருப்போம்.

காரணம் –

கொடுப்பவர் இல்லாதபோது எடுப்பது இயல்பாகி விடுகிறது. எடுப்பவருக்குமுன் கொடுப்பதை நாம் பழகிக் கொள்வோம். திரும்பத் திரும்ப நாம் ஒன்றைப் புரிந்துக்கொள்ள வேண்டும். கொடுப்பது என்பதில் கோடானக் கோடி பணம் கொடுத்தால்கூட அது அந்தக் கொடுப்பதில் அடங்கிவிடாது. மாறாக, கொடுக்கவேண்டும் என்று நினைப்பதில் கிடைக்கவேண்டிய அத்தனையும் தானே அடங்கிப்போகும் என்பதை உணருங்கள். எனவே அந்த பிறருக்கு கொடுக்கவேண்டும், பிறருக்குச் செய்யவேண்டும், ‘பிறர் பற்றி வருந்துவதும் எனது வருத்தத்தில் ஒன்றென்னும்’ எண்ணத்தை வளர்த்துக்கொள்ளுங்கள்; அது கோடியை தாண்டியும் வானம் முட்ட யாராருக்கு என்னென்ன வேண்டும் அதை அத்தனையையும் நம் அத்தனைப் பேருக்கும் கொடுக்கும்.

ஒற்றுமை புரிவதன் சுகமென்ன தெரியுமா ? அந்த வெளியேயிருக்கும்’ அண்டப் பெருவெளியிலிருக்கும் எல்லாமுமானக் காற்று அந்தந்த நீற்குமிழிக்குள் இருக்கையிலேயே தாமெல்லாம் ஒன்றுதான் என்று அறிந்துக் கொண்டால், உன் பசி என் பசி, உன் வலி என் வலி என்பதெல்லாமும் கூட வேறுவேறாகிப் போகாதில்லையா..? ஆக எல்லாம் ஒன்றென்று அறிகையில் எங்கே பகை.. பயமெல்லாம்..

எனக்கு காலில் இடித்துக்கொண்டு வலிக்கிறது எனில் அவனுக்கு காலில் இடித்தாலும் வலிக்குமே என்றுருகும்’ மனசு’ போதுமானது. அது நம் எல்லோருக்கும் இருந்துவிட்டால், ‘நம் பசிக்கு மணியடிக்கையில் பிறர் தட்டுக்குச் சோற்றையும்’ தானே அது தேடிக்கொள்ளும்..

தேடி சோறு நிதம் தின்று உயிர்கள் அத்தனையும் ஒன்றென அறியும்வரை சுகமோடிருக்க வாழ்த்து..

வித்யாசாகர்

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in வாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s