52, அந்த சாதிக் குருவியும் தெருவில் நிறைய பிணங்களும்..

abstract-painting-the-beauty-of-nature-large

ரு ரோசாவும் இன்னொரு ரோசாவும்
ஆடியாடி நெருங்கி ஒன்றோடொன்று தொட்டு
விலகி மீண்டும் தொட்டுக்கொண்டது
தொடுகையில் ஏதோ முனகிக்கொண்டது
என்ன முனகலென்று –
அதனருகில் சென்றுக் கேட்க காதை வைத்தேன்
ஐயோ மனிதனென்று அலறி பயந்து
இரண்டும் ஒன்றைவிட்டு ஒன்று விலகி
இதழ்கள் சுருங்கி வாடி தலைகவிழ்ந்து
பட்டென உதிர்ந்து தரையில் துண்டாக விழுந்தது..
எனக்கு உயிர் அதிர்ந்ததொரு பயம்
ஐயோ ரோசா உதிர்ந்தேப் போனதே
செத்துமடிந்ததே ரோசாக்களிரண்டும்
அத்தனைக் கொடியவனா நான் ?
அவ்வளவு பயமா என்னிடம் ?
என்னிடமா அல்லது எம்மிடமா ?
ஆம் அந்த ரோசா இந்த மொத்த மனிதர்களைக்
கண்டுதான் பயந்திருக்கும்,
மொத்த மனிதர்களின் பிரதிநிதியாக என்னைக் கண்டிருக்குமோ (?)
அப்போ இந்த மனிதர்களென்ன
அத்தனைக் கொடியவர்களா ?
ரோசா காம்பருந்துத் துண்டாக விழுந்ததே
என்ன நினைத்து விழுந்திருக்கும்?
அழுதிருக்குமோ ?
துடித்திருக்குமோ ?
ஐயோ திருடன் என்று அதிர்ந்திருக்குமோ ?
பேராசைக் காரன் மனிதனென்று பயந்திருக்குமோ ?
கொலைகாரன் என்று..?
கற்பழிப்பேன் என்று அந்தக் காதலன் ரோசா
காதலிக்குச் சொல்ல
காதலி ரோசா பயத்தில் உதிர்ந்து
அதைக்கண்ட காதலன் ரோசாவும்
உதிர்ந்துப் போயிருக்குமோ ?
அல்லது சாதி சொல்லி இருவரையும் பிரித்துவிடுவேனென்று
அஞ்சிப் போயிருக்குமோ ?
என்ன நினைத்து உதிர்ந்ததோ ரோசா, பாவம்
உதிர்ந்தேப் போனதே இரண்டும்..
இனி ரோசாவைப் பார்க்காது விட்டு விடுவோமா ?
அல்லது மனிதர்களை விட்டு விலகியிருப்போமா ?
யோசித்துக்கொண்டே இருந்தேன்
இரண்டு சிட்டுக்குருவிகள் தூர நின்று
என்னையும் தரையிலிருந்த ரோசாக்களையும் கண்டு
கதறி கதறி அழுதது
என்ன என்று சைகையில் கேட்டேன்
அங்கே பார் மலருக்கடியில் இரு வண்டுகள்
பாவம் இறந்துக் கிடக்கிறது என்றது..
ஆமாம் வண்டைக் கொன்றது யாரென்றுப் பார்கிறேன்
தூரத்திலிருந்து இரண்டுப் பிணங்களை
ஒன்றன்பின் ஒன்றாகத் தூக்கி வருகிறார்கள்
சாவுமேளச் சத்தம் காதைப் பிய்க்கிறது..
விசில் பறக்கிறது..
முன்னும் பின்னுமாய் நான்கைந்துப் பேர் குடித்துவிட்டு
தன்னைமறந்து ஆடுகிறார்கள்..
வானவேடிக்கை சொர்ர்ரென்று பறந்து விண்ணில்
பாய்கிறது..
மரணம் மரணமென்று ஒரே சப்தம்
கொலை
தற்கொலை
இதுதான்
இதுதான்
இதுதான் கதி மனிதனுக்கு என்கிறது ஒரு குரல்
நான் பதறி ஓடி என்னாச்சு
என்னாச்சு
யார் இவர்கள் என்றேன்
அதோ அது ஒரு பெண், யாரோ
பெரிய சாதி பையனைக் காதலித்ததாள்
அதான் கொன்றுவிட்டார்கள் என்றார்’ கூட்டத்தில் ஒருவர்
பின்னே வருவது யாரென்றேன்
அதுவா., அது ஒரு ஆண்; அவனுடைய காதலியை
யாரோ கொன்றுவிட்டார்களாம்
அதான் விஷம் குடித்துவிட்டான் என்றார் இன்னொருவர்
எட்டி நான் ரோசாவைப் பார்த்தேன்
ரோசாக்கள் ரொம்ப வாடியிருந்தது
சாவுமேள சத்தம் மிக சோராகக் கேட்டது
விசில் அடித்து அடித்து எல்லோரும் ஆடினார்கள்
மூலைக்கு மூலை டமால் டுமீல் என்று
வெடிசப்தம்..

முன்னேவும் பின்னேவும் அப்பாக்கள்
அழுதார்கள்..
அம்மாக்கள் மாறி மாறி
மார்பிலடித்துக் கொண்டார்கள்

சிட்டுக்குருவிகள் எம்பி வானத்தில் பறந்து
எங்கோ கண்காணாத தூரத்துள் போய்
மறைந்துபோனது,

ரோசாக்கள் எதற்காக இறந்ததோ தெரியவில்லை
கேள்விகள் எனக்குள்ளே
பலவாக வெடிக்க..,
பதில்களை விட்டு
பல்லாண்டுகாலம் தூரத்தில் வந்துக்கொண்டிருந்தது
அந்தப் பிணங்கள்

பிணங்களுக்கு வழிவிட்டுவிட்டு
நான் ரோசாக்களிடம் பேசச் சென்றுவிட்டேன்..

ரோசாக்கள் இப்போதென்னை
தெரிந்துக்கொண்டிருக்கும்..
———————————————————————-
வித்யாசாகர்

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in ஒரு கண்ணாடி இரவில் and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to 52, அந்த சாதிக் குருவியும் தெருவில் நிறைய பிணங்களும்..

 1. முனு.சிவசங்கரன் சொல்கிறார்:

  பதில்கள்ளை விட்டு வெகுதூரம் வந்துவிட்டாலும் வேர்வரை சென்று தேடுவோம்.. ! ரோசாக்கள் எப்போதும் ரோசாக்களே….. ! அருமை.. நன்று..!

  Like

  • வித்யாசாகர் சொல்கிறார்:

   ஆம் ஐயா.. வெகுதூரத்தில் தான் வந்துவிட்டோம். சாதி என்றாலே சுடுகிறது நிறையப்பேருக்கு. சிலரைக் காண்கையில் படிக்கையில் அதிசயித்துப் போகிறேன். எப்படி இவர்களிடமிருந்து இந்த மண் இந்த மனிதம் தனக்கான விடுதலையை அடைந்துக்கொள்ளுமோ தெரியவில்லை..

   Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s