துருப்பிடித்த சாதி – அது
திருத்திடாத நீதி,
துண்டுத் துண்டாகி – இன்று
உயிர்களை குடிக்கிறது சாதி..
தலைமுறையில் பாதி – அது
கொன்று கொன்று விழுவதேது நீதி ?
காதல்சருகுகளை பிஞ்சுகளைக் கொன்று
கடும் விசமாய் பரவுகிறது சாதி..
கருப்பு வெள்ளையில்லா
ஒரே சிவப்பு ரத்தம், அது சிந்திச் சிந்தி
நனைகிறது பூமி, செத்துமடிபவர் கீழேனில்
சாகடிப்பவரை மேலென்னுமா சாதி ?
ச்சீ.. கேட்கவே வெட்கம்
செங்கல் வேகலாம், சாதியில் மனிதர் வேகலாமா?
செந்நீர் வகைக்குப் பிரியலாம்
மனிதர் மேல் கீழாய் பிரியலாமா ?
சுத்தும் பூமிக்கு; யார் மேல் ? யார் கீழ்?
புயலோ பூகம்பமோ வந்தால்
சாவதற்கு’ பெரியார் யார்? சிறியார் யார்?
பிணம். அத்தனையும் ஒரே பிணம்.,
சுடுகாட்டில் எரிப்பதற்கும் நடுக்காட்டில் புதைப்பதற்கும்
பழக்கங்கள் வேறாகலாம், புதைக்கும் எரிக்கும்
மனிதர்களுக்கு அதே இரண்டு கால்கள் கைகளெனில்
வகைக்குப் பிரித்த சாதியெங்கே உயர்ந்தும் தாழ்ந்தும்போனது ?
மனிதரை மிஞ்சிய தெய்வமில்லை
எனும்போது’ யாருக்கு உரிமையிங்கே
சாதியினால் கொல்வதற்கும், சாதிப் பேர் சொல்லி
வென்றதாய் எண்ணுவதற்கும் ?
மலமள்ளியவன் படித்த மருத்துவத்தில்
ஒரு உயிர் பிழைத்தால், மருத்துவன் சாமி;
படித்தவன் புத்தி பரத்தையின்பின் போனால்
அது அறிவிற்குக் கேடு;
அடிப்பதும்’ அணைப்பதும்’ வெல்வதும்’ தோற்பதும்’
வாழ்வதும்’ சாவதும்’ மனிதர்களே மனதால் மனிதத்தால்
திறமையால் தீர்மாணிக்கப்படட்டும்;
பிறப்பால் எவரையும் இழுக்கென்று பழித்தல் தீது..,
உருகும் மனசு’ இளகும் நெஞ்சு’
சாதிநெருப்பள்ளி வைக்கும் தலை – நாம்
வயிறுதள்ளிப் பெற்றதும் வாயைக்கட்டி வளர்த்ததுமெனில்
சாதிக்கினியிடும் நெருப்பெங்கே சடுதியிலிடுவீர்..
சடுதியிலிடுவீர்..
———————————————————-
வித்யாசாகர்
தேசப் பிரிவினை, மதப் பிரிவினை, மொழிப் பிரிவினை இவைகளிடம்.. ஏற்றத்தாழ்வுகள் கிடையாது..! அவரவர் பிரிவின் மீது அவரவருக்கு பெருமையும், பற்றுதலும் இருக்கின்றன..! இவர்கள் இடையே.. தனிப்பட்ட சூழலிலே.. இணக்கமும் உறவும் நட்பும் ஏற்படலாம்..! ஆனால் சாதிபிரிவினை.. என்பது இவை எல்லாவற்றுக்கும் நேர்மாறானது..! கொடுமையானது..! தான் பிறந்த சாதியை விட உயர்ந்த சாதியார்.. முன்னே தன்னைத் தாழ்வாகவும்.. தன்னைவிட தாழ்ந்த சாதியார் முன்னே.. உயர்வாகவும் கருதிக்கொள்கிற அறியாமை மற்ற எந்த பிரிவினைக்கும் இலாத ஒன்று..! மூச்சுக்கூட விட முடியாமல் தன்மீது அழுத்தப்பட்டிருக்கும்.. உயர்சாதி அதிகாரத்தை… தான் அஞ்சி வணங்கிய தெய்வங்களின் பெயராலேயே. ஏற்றுக்கொள்ளவைக்கும்.. கீழ்மைத்தனத்தை புரிந்துகொள்ளாதவரை.. சாதியத்திற்கு அழிவில்லை..! ஏனெனில் மனிதரின் ஆழ்மனத்தின் ஆதி நம்பிக்கையில் வேராய் இறுகியுள்ள இறை அச்சத்தின் படிமானங்களில் பின்னப்பட்டுள்ள.. மனித நாகரீகத்திற்கு எதிரான சதிவலை..!
அதை கட்டறுத்து வெளிவரும் பக்குவமும் துணிச்சலும் பகுத்தறிந்த படித்தவர்களுக்கே.. இல்லை எனும்போது… பாவம்.. பாமர்கள்.. ஏழைகள்.. எதிர்காலம் இருட்டாய் போனவர்கள்.. என்ன செய்வார்கள்…? ம்..ம்… வெட்டிக்கொள்கிறார்கள்.. குத்திக் கொல்கிறார்கள்…! வேறென்ன…!
LikeLike