கோவில் உடைப்பு
மசூதி எரிப்பு
பாதிரியார் மரணம்
புத்தப் பிச்சுகள் போராட்டம்
சாமி சிலை திருட்டு
அட்சைய திருதியை
ஆடிவெள்ளி அதிசய சலுகை
சாமி ஊர்வலம் நெருக்கத்தில் பலர் மரணம்
சிலுவைக்குப் பின்னே சிலுமிசம்
கோவிலில் கற்பழிப்பு
என நீளும் செய்திகள்; நாளும் கண்ணீர்..
எதற்கு இதலாம்..?
மனிதரைக் கொன்று
மனிதத்தை அழித்து
பிறகங்கே
மார்தட்ட மதமெதற்கு?
சற்று திரும்பிப் பாருங்கள்
இதலாம்
கடந்து கல்லிற்கு முன் ஏற்றிய
கற்பூரத்தையும்
குற்றத்தின் கணக்கில்
எழுதிக் கொண்டிருப்பார் – அங்கே
கடவுள் இருந்திருந்தால்..
உண்மையில்
கடவுள்.. பேய்..
இரண்டையுமே இல்லையென்று
அறியுங்கள்;
இல்லையென்று அறிவதற்கே
இருக்கென்று நம்புகிறோம்..
இருக்கென்று முடுக்கிய வேதம்
இறுதியில் சொல்வதும் அதைத்தான்
‘இதுமட்டுமில்லை என்பதை’
எல்லாம் ஒன்றென்பதை,
நீயும் நானும் ஒன்றென்பதை,
வேறில்லை வாழ்க்கை என்பதை
வேறில்லாததை அறிகையி லறியும்
எல்லாம் ஒன்றாகயிருப்பதை..
அந்த ஒன்றாக இருப்பதை அறியவே
ஒன்றியிருக்கும் மனசு வேண்டும்
ஒன்றும் மனது ஓடாதிருக்கவே
பயமறுந்த தெளிவு வேண்டும்
வேண்டுவதை வேண்டிப் பெறுவதையே
மதங்கள் கற்றுத்தர முன்வந்தன
முன்வந்ததன் பின்சென்றவரில் சிலர்தான்
முற்றிலும் பிசகானார்
முதலுக்குக் காரணம் முதலை அறிவதாகவே
இருந்தது
கடைசியில் –
எல்லாம் கடந்து நிற்கிறோம்
இன்னும் பயந்து நிற்கிறோம்
கொடுமை; பேயிக்கு மட்டுமல்ல
சாமிக்கும் பயம்
சாமிக்கு முன் பேசும்
ஆசாமிக்கும் பயம்,
அவன் சொல்வதைக் கேட்டு
கேட்டவருக்கெல்லாம்
பயம்..
இருட்டை
உருவகப் படுதிக்கொண்டவன்
பேயென்று பயந்தான்,
வெளிச்சத்தை அறிவோடு காணாதவன்
சாமிக்கு பயந்தான்,
பயம் தான்
மூடதனத்தின் மூலதனம்
பயம் தான்
அறிவை முடக்கும்உணர்ச்சி
பேய் படம்
எடுத்தவர்களையும்
சாமி படம் எடுத்தவர்களையும்
ஆராய்ந்துப்பார்த்தால்
அந்தச் சாமிக்குமுன்
பாதிக்கும்மேல்
பலர் தண்டனைக்குரியவர்களே..
சாமி என்பது
நமது
வணங்களில் இருக்கும் நம்பிக்கை
நம்பிக்கை மட்டுமே..
நம்பி நம்பி நாம்
வெளிக்கொண்டுவரும்
நமக்குள்ளிருக்கும் சக்தியது சாமி..
நம்புவதற்கு நல்லதைத் தேடி
நல்லதென நம்பி
நன்மைக்கென
நாமேப் போட்டுக்கொண்ட பாதைதான்
ஆன்மிகம்,
அளவோடு வகுத்துக்கொண்ட
அறிவு அது,
அது கடந்து
அது கடந்து
என நீளும் இயற்கையின்
எல்லையில்லா ஆனந்தம்
திறன்
வெளி
ஒரு சுகம்
எனதில்லை
நானில்லை என்று சரணடைவதில் ஒரு சுகம்,
வெளியை
உள்ளிருந்துக் கண்டு
வெளியே இருக்கும் வெளியை
உள்ளிருந்தே அசைக்கும் பயிற்சிக்கு
துணையாக்கிக் கொண்ட பாடம்தான்
ஆன்மிகம்
கல்லை நம்பிக்
கும்பிட்டாலும்
கல் சாமியாகும்;
சாமியாக இருக்கும் அனைத்தின்முன்னும்
அது ஒரு
சாட்சியாகும் படிப்பினை, அவ்வளவுதான் சாமி..
அதற்கென
அடித்துக் கொள்வதை விட்டுவிட்டு
அனைத்தையும்
படித்துக்கொண்டுப் போனால்
அறிவு
அது நாம் அனைத்துமாய் இருக்கும்
ஒரே மூலத்தின் சாட்சி என்றுக்
காட்டும்
முடுச்சிகள் அவிழ்ந்து
மனம் கூடி
மேல் பரப்பப்பட்ட நம்பிக்கைகளை அகற்றிவிட்டு
நிர்வாணம் பூண்ட எண்ணத்துள்
நீயும் நானும் ஒன்றெனப் புரியும்..
ஒன்றென
எல்லாம் அறியவே
எல்லாம் ஒன்றென்றுப் புரியவே
எதன் மீதும் கோபமின்றி
எதுவாகப் பிறந்தோமோ
அதுவாகப் போனால் –
அறம் தேடித் போனால்
போகலாம்
மாறிப்போகலாம்
நமக்கான உலகமும் இனிவரும் செய்திகளும்..
———————————————————————————-
வித்யாசாகர்