அது உண்மையிலேயே ஒரு
இனிய காலம் தான்..
நீயும் நானும்
மேடுபள்ளங்களில் நடப்போம்
மனதுள் உயர்ந்து தாழ்ந்து நடந்ததேயில்லை..
பேசி பேசி சிரிப்போம்
பொய்யிற்கோ பகட்டிற்கோ
துளிகூட சிரித்ததேயில்லை..
கட்டிப்பிடித்துக்கொண்டு
வாஞ்சையோடு அணைத்துக் கொள்வோம்
முத்தத்திற்கு அவசியமேற்பட்டதில்லை..
முழு நிலவோ, ஒரு சூரியனோ கூட
நமது ஒருநாள் பிரிவைத் தாண்டி
போனதேயில்லை..
நெற்றியில் ஒற்றைப் பொட்டிருப்பதுபோல்
உனக்கு நானும், எனக்கு நீயும்
மிக அழகாகத் தெரிந்தோம்..
மழை பெய்கையிலும்
முறுக்கிவிட்டுக்கொள்ளும் மீசையைப்போல்
நமதன்பு எதிலுமே தாழாதிருந்தது..
பிழை ஒன்றுதான்
நாம் வளர்ந்தேயிருக்கக் கூடாது
அல்லது வளர்ந்ததும்
கொள்கை கருத்து சாக்கடை என்றெல்லாம்
பிரிந்திருக்கக் கூடாது..
போகட்டும் –
உயிர் ஒன்றுதானிருக்கிறது
மீண்டும் சந்திக்கையில் அன்றைப்போலவே
கட்டி அணைத்துக்கொள்வோம்
நட்பில் நாசமாய்ப் போகட்டுமந்த
கொள்கை கருத்து சாக்கடையெல்லாம்..
————————————————————-
வித்யாசாகர்