24, குறைச் சொல்லாமலிருந்து; பெருக வாழலாம் வாங்க.. (வாழ்வியல் கட்டுரை)

darkshadow

ரு அழகிய மாளிகை. அறைகளெங்கும் அலங்காரம். அழகுகொஞ்சும் அதிகாரந் திகட்டாத எழில்கூடம். பொற்காசு குவிந்த மாட மாளிகை. கூடை கோபுரம். கோபுர கலசமெங்கும் மின்னும் தங்கம். காணுமிடமெல்லாம் கண்களைப் பறிக்கும் பவளமும், முத்தும், வைரங்கள் பதிந்த தங்கநகைகளும் எண்ணிலடங்காது குவிக்கப்பட்டிருக்கிறது.

அந்த மாளிகைக்குள் ஒரு ஐந்தாறு பேர் நுழைகிறார்கள். முதலாவதாக உள்ளேநுழைந்த குழந்தையொன்று தங்கக் கட்டிகளெல்லாம் அடுக்கியுள்ள ஒரு அறையினுள் நுழைந்து அந்த தங்கம் மின்னும் அறையினை மிகச் சாதரணமாக கடந்துவிடுகிறது. அதற்கு அந்தத் தங்கக் கட்டிகளொன்றும் அத்தனைப் பெரிதாக ஈர்த்துவிடவில்லை. சற்று தூரம் விலகிச் சென்றதும் அங்கே ஒரு பழையபொம்மை விழுந்துகிடப்பது கண்களில் பட்டுவிட அய்…….யென்று கூச்சலிட்டவாறு ஓடிப் போய் அந்தப் பொம்மையை எடுக்கிறது, அதனருகில் இருக்கும் இன்னொரு கதவைத் திறக்கிறது அந்த அறையெங்கும் அழகழகிய வேலைப்பாடுகள் அடங்கிய பல பொம்மைகள் அடுக்கி வைக்கப் பட்டிருக்கின்றன. அந்த குழந்தைக்கு எதை எடுப்பது எதை விடுப்பதென்றே புரியவில்லை ஆனால் தங்கக் கட்டிகளை அலட்சியமாகக் கடந்துபோனது..

அடுத்து ஒரு தொழிலதிபர் ஒருவர் அவ்வழியே வருகிறார். அந்த குழந்தை தனது கை நிறைய பொம்மைகளை வாரிக்கொண்டு வருவதைப் பார்த்துவிட்டு அந்த அறைக்குள் போகிறார். அத்தனை அழகழகான பொம்மைகள் அவருக்கு துளிகூட ரசனையையோ பெரிய ஆச்சர்யத்தையோ ஏற்படுத்தவேயில்லை. வேறென்ன உண்டென அறையின் மறு கதவை திறக்கிறார். அங்கே காணுமிடமெல்லாம் தங்கம். அதிலும் அவருக்கு அழகாக வடிக்கப்பட்ட சிலைகளோ பல நாகரிகத்தோடு ஒத்துச் செய்யப்பட தங்கநகைகளோகூட அத்தனை பெரிதாக தெரியவில்லை. அந்தத் தங்கக் கட்டிகள் அவருக்கு பெரும்பொக்கிசமாகப் பட்டது. எடுத்து மாறி மாறி முத்தமிட்டவர், எடுக்க முடிந்தவரை எடுத்துக்கொண்டதாக எண்ணி மனதிற்குள் நான்கைந்து பெரிய பெரிய தங்கக்கட்டிகளை சுமந்தவாறே வெளியேச் செல்கிறார்.

அவரை கடந்து அவ்வழியே ஒரு சிற்பி வருகிறார். அவருக்கு தங்கக் கட்டிகள் பார்க்கையில் ஆரவாரம் தாளவில்லை, ஆனால் ச்ச என்னப் புண்ணியம் இதில் ஒரு அழகில்லையே, கட்டியாய் தங்கமிருந்து என்ன பயன் ? அங்கே கலையில்லையே(?) என்று வருந்தினார். அருகே பார்க்கிறார் அத்தனை அழகழகான பொம்மைகள் சிலைகள் வித விதமாக அடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அத்தனையும் அச்சில் வார்க்கப்பட்டவை. செதுக்கப் பட்டவையல்ல. ச்ச இதலாம் ஒரு கலையா, செதுக்க செதுக்க எண்ணத்தில் ஊறுவதை அவரவர் கற்பனைக்கு ஏற்றவாறு அழகழகான வடிவத்தில் வடிப்பதில் ஒரு உயிர் இருக்கில்லையா? அதை விட்டுவிட்டு இதை ஏன் இப்படி ஒருபக்கம் வெறும் பொம்மையாகவும் மறுபக்கம் வெறும் கட்டித் தங்கத்தையும் வைத்திருக்கிறார்களே என்று பொருமிக் கொண்டே வெளியேப் போகிறார்.

அடுத்து அந்த வழியே வந்த ஒருவர் ஏதோ ஒரு திறவாத அறைக்குள் நுழைய, கண்ணிமைக்கும் நேரத்திற்குள் உடம்பிலிருந்த அத்தனை உடையும் காணாமல் போய்விடுகிறது. ஒரு நொடியில் பதறிப்போகிறார். யாரோ இழுத்தாற்போல் இருந்ததே, பொட்டு துணியைக் கூட உடம்பில் காணோமே என்று அதிர்ந்துப் போகிறார். மேலும் கீழும் பார்க்கிறார் சின்ன துணியும் உடம்பிலில்லை. இங்குமங்கும் ஓடி தேடுகிறார், சற்று அச்சத்திற்கு அந்த ரகசிய இடம் மூடக்கூட ஒரு பொருளில்லை அங்கே. எங்கு திரும்பினாலும் கண்ணாடி வேறு. எதைக் கண்டாலும் தனது நிர்வாண உடம்புதான் தெரிந்தது. வெட்கி தலை தெறித்து ஓடுகிறார் இங்குமங்கும். சற்று நிதானித்து வேறொரு கதவை திறக்கிறார். திறந்து பெரிய அந்தத் தங்கவளாகத்துள் நுழைகிறார். எங்கு கண்டாலும் தங்கம். எதைத் தொட்டாலும் தங்கம். ஆனால் தனது மானத்தை மறைக்க ஒரு சின்ன துணியோ அதுபோன்ற ஏதேனும் பொருளோ அங்கில்லை. அப்போது அங்கே ஒரு குரல் கேட்கிறது, அதோ அந்த அறைக்குள் போ ஒரு ஆடை இருக்கிறது, அதை எடுத்து நீ உடுத்திக் கொள்ளலாம், அது உனக்கு மிக சரியாக இருக்கும் போ’ ஆனால் ஒரு நிபந்தனை ‘உன்னால் மீண்டும் இந்தத் தங்கக் கட்டிகள் அடுக்கியுள்ள அறைக்கு திரும்ப வர முடியாது என்கிறது அந்த குரல். அந்த மனிதருக்கு கண்கள் ஒன்றுதான் கலங்கவில்லை, பதட்டத்தில் அறையை விட்டொழியெனச் சொல்லியவாறு ஓடி அந்த ஆடை இருக்கும் அறைக்குள் நுழைகிறார்.

அடுத்து வருபவர் தீராதா தலை வலிக் காரார். அவருக்குக் கொஞ்சம் சன்டுபாம் தைலமோ அல்லது அமிர்தாஞ்சனோ வேண்டும், யாரோ சொல்லி உள்ளே நுழைந்தால் காணுமிடமெல்லாம் தங்கம். ஆனால் சோகம் தலையிலிருந்து கையை எடுத்தாலே தலை உடைந்துவிடும் வலி. ஓடிப்போய் ஓடிப்போய் ஒவ்வொன்றாய் பார்க்கிறார். எல்லாம் தங்கமாக இருந்தது ஆனால் அங்கே கொஞ்சம் கூட சன்டுபாம் தைலமில்லை. அவர் தேடிவந்த அமிர்தாஞ்சனில்லை. எல்லாம் தங்கம்தான், ஆசைதான், ஆனால் தலை வலிக்கிறதே, உடைக்கிறதே, உயிர் போகிறதே, இவ்வளவு தங்கமிருந்து என்னப் புண்ணியம், ஒன்றை கையில் தூக்கினால்கூட தலை வின் வின்னென்கிறது. விட்டு விட்டு வேறெங்கேனும் தைலம் கிடைக்குமா அதை முதலில் தேடுவோமென்றெண்ணி ஓடுகிறார்.

அவரை கடந்து ஒரு துறவி அந்தத் தங்க மாளிகையின் வழியே நுழைகிறார். உள்ளே வந்தால் கண்கள் மலர்கிறது. சுவாசம் தாளம் மாறாது உள்சென்று வெளியே போகிறது. ஆகா ஆனந்தம் பேரானந்தம் காணுமிடமெல்லாம் அமைதி, காணுமிடமெல்லாம் அழகு. எங்கும் அசுர நிசப்தம். இங்கே அமைதியாக அமர்ந்தாலென்ன என்றெண்ணி’ அமைதியாக கண்களை மூடி’ அந்த வளாகத்தின் நடுவே அமர்ந்துக்கொள்கிறார். அமைதியின் ஆரவாரம் அவருக்குள் ஆழமாகச் சென்று அகிலத்தின் தர்மவாய்களை அச்சு பிசகாமல் திறக்கிறது.. உடுத்தும் ஆடையைக் கூட பாரமாக எண்ணும் துறவிக்கு அந்தத் தங்கக்கட்டிகள் ‘இருக்கும் பொருளாக’ கூடத் தெரியவில்லை, எங்கும் சூழ்ந்த அமைதியை மட்டுமே யவர் பெரிதாகக் கண்டார்.

வாழ்க்கை இது தாங்க. அவரவர் வாழ்க்கை அவரவருக்கு. தனை தீண்டாத ஏதும் தனக்கு பெரிதாகப் பட்டுவிடப் போவதில்லை. தன் அறிவிற்கு எட்டியவாறு, தனது ரசனைக்கு இணங்கியே எல்லோரின் ஆசைகளும் கனவும் கற்பனையும் விரிகிறது. எனவே அவரவருக்கு அவரவர் சரி. எனக்கு நானும் உங்களுக்கு நீங்களும் சரி. பிறகு இடையே வந்து இவரை அவரோ அல்லது அவரை இவரோ குறைச் சொல்லி நடப்பதென்ன உலகில்?

——————-XXX——————-XXX———————–

வெறும் கோபமும் கர்வமும் மோகமும் பெருத்து நம்மால் எத்தனை வருடத்தைக் கூட்டிவாழ்ந்திட இயலும்? வாயில் மென்றுவிழுங்கும் அமிர்தம்கூட தொண்டை கடந்தால் கசந்து விழுங்கியதொரு காயிற்கு சமம்தான். மனது பூரிக்கும் அழகு என்றாலும் கூட அனுபவித்த நான்கைந்து நாளிற்குப் பின் அதுகூட பழசுதான். உலகில் எதுவுமே நிரந்தரமானது இல்லை. உலகிலுள்ள யாருமே ஒரே மனநிலையில் ஒருமித்த கருத்தில் இல்லை. கருத்தோடு தன்னைக் கட்டி இறுக்கிவைத்துக் கொள்ளமுடிகிறது’ என்றாலும், அதற்குள்லிருந்தும் ஒரு கேள்வி முரணாக எழுவதை தனக்குமட்டும் தெரியும் மனசாட்சி அறிகிறது. அத்தகைய தனது உணர்வை ஆராய்ந்து தன் பிறப்பின் வழியே உலகின் தொடர்புகளை அறிந்தவருக்கு உலகம் குற்றமாகத் தெரிவதில்லை. உண்மையில் இந்த உலகம் குற்றமெனில் அதில் நாமும் அடக்கம். இந்த அகிலம் அழகு எனில் அதற்குள்ளும் நாமும் அடக்கம். எப்படி பார்க்கப் போகிறோம் நாம் நம்மை? அழகாகவா அல்லது குற்றப்படுத்தியா என்பதை நாம்தான் தீர்மாணிக்க வேண்டியுள்ளது.

——————-XXX——————-XXX———————–

அதற்காக; யாரையும் விட்டுவிடு, யாரேனும் எக்கேடுகெட்டும் போகட்டுமென்று விட்டொழிதல் அர்த்தமல்ல. தவறை எடுத்து கூறி உண்மையை விளம்பி ஒருவரை திருத்துவது வேறு, குறைச் சொல்லி அல்லது குறையாக பிறரை எண்ணி தானும் குறைந்துபோவது வேறு.

ஒருவரை இகழ்ந்து பேசுகையில் மனம் தன்னைத்தானே எண்ணி உள்ளுக்குள் வெட்கிப் போகிறது. அறிவிற்குள் ஒரு குற்றவுணர்வு கறையாக படிந்துக்கொள்கிறது. அதே ஒருவரை பாராட்டுகையில் மனசு விசாலமடைகிறது. கொடுக்க கொடுக்க சுரக்கும் கிணற்றைபோல பிறருக்கு நல்லதை நினைக்க நினைக்க நமக்கும் நல்லதொன்றே நடக்கத்தக்க சூழலாக நமைச் சுற்றிய அனைத்துமே மாறிக்கொள்கிறது. எனவே குறை சொல்லாதீர்கள். யாரையும் குற்றப் படுத்தாதீர்கள்.

——————-XXX——————-XXX———————–

எனக்கு அருகிலிருப்பவன் தவறுசெய்தால் நான் வாழுமிந்த சமுதாயம் சரியில்லை என்று அர்த்தம். பிறகு அந்தக் குற்றத்தில் எனக்கும் பங்குண்டுதானே? பிறகு எனக்கு அருகிலிருப்பவன் குறைகளோடு வீழ்ந்தால்’ நான் நிறைவோடு வாழ்ந்துமகிழ்தலும் தீதே இல்லையா? பிறருக்கு தீங்கு எனில் அஞ்சு. வருந்து. அவர் பாவம் என்று கருணை கொள். பிறர் தீங்கிலிருந்து விடுபட எந்தப் பொருளாயினும் சரி இருப்பதை முடிந்தவரை எடுத்து கொடு. இயற்க்கை உனது விரிந்த மனதை மூடாதக் கண்கொண்டு பார்த்துக்கொண்டே இருக்கும். உனை குறையாத நன்மைக்கிணங்க வளர்த்துக் கொண்டேயிருக்கும். நல்லது செய்தவர் வீழ்ந்ததாய் வரலாறில்லை. தர்மம் தோற்றதாக இலக்கியமோ நமது கலாச்சாரங்களோ எடுத்துச் சொல்லவில்லை. அது நமை துன்பத்திலிருந்து காக்கிறது. சேமித்துவைக்கப்பட்ட அறையின் பொருளைப் போல நாம் செய்த நன்மைகள் நமக்கு இரட்டிப்பாகக் கிடைக்கிறது. நமது ஒவ்வொரு செயலும் விதையில் முளைக்கும் செடியாக முளைத்துக்கொண்டே இருக்கிறது. பிறகு நீங்களே முடிவு செய்யுங்கள், எதை நாம் விதைப்பது, நன்மையையா ? அல்லது தீமையையா ?

——————-XXX——————-XXX———————–

நன்மையையே எங்கும் விதைப்போம். எல்லோருக்கும் நன்மையே விளைந்து நன்னிலம் பெரிதாய் மகிழ்வாய் பெருகட்டும். நல்லது செய்து நல்லதை எண்ணி நானிலம் சிறக்க நம்மோடுள்ளவர்கள் சிறக்க மேன்மையோடு வாழவே நாம் ஒவ்வொருவரும் முற்படுவோம். குறைச் சொல்லி’ குற்றம் கூறி’ புறம் பேசி அழுக்காகும் நாக்கினையும்’ எண்ணத்தையும்’ கண்ணியத்தாலும், உண்மையாலும், கருணைவலுக்கும் அறிவினாலும் சுத்தம் செய்வோம்.

——————-XXX——————-XXX———————–

கருணையூரிய மனசாட்சியின் அதிர்விலிருந்து வெளிப்படும் அறிவு பலப்பட பட அருகிலிருக்கும் அத்தனையும் பலப்படும். பிறகங்கே இல்லையென்றுச் சொல்லவே ஒன்றுமிருக்காது. கொடுக்க மட்டுமே நிறைய இருக்கும். அங்ஙனம் ஒருவருக்கு ஒருவர் கொடுத்து மகிழ்கையில், பெற்று பெற்று எல்லோரும் பொதுவாக மகிழ்கையில், பெற்றவருக்கும் ஒரு கட்டத்தில் கொடுக்கவே எண்ணம் வரும். பிறகென்ன, பெற்றவரும் கொடுப்பார். உற்றவரும் கொடுப்பார். ஒருவருக்கு ஒருவர் கொடுத்து கீழ் மேல் நீங்கி, அனைவரும் சமமாக இல்லார்க்கு இயன்றதை செய்து செய்தே பழகிக்கொண்டால் பின்னிந்த நிலத்தில் எடுக்கவோ குறைக்கவோ மோசம் செய்யவோ யாருக்கிங்கே எண்ணம் வரும்? இருப்பதில் ஏகாந்தம் குறையாது மகிழ்ச்சிப் புன்னகை பரப்பி இந்த பேரண்டம் நன்னடத்தையால் நிறையத் துவங்காதா? நிறையத் துவங்கட்டும். கருணை எங்கும் பெருகட்டும். நன்மையினால் இந்நிலம் சுற்றி சுற்றி எங்கும் நிம்மதியே நிறையட்டும்!! எல்லோரும் வாழ்க!! எல்லாம் மகிழ்க!!

வித்யாசாகர்

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in வாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s