உனக்காக
உள்ளே கரையும் மிட்டாய் நினைவுகள்
அத்தனை இனிப்பு..
உன் கண்களில் ஒளிரும்
புன்னகைப் பேரலையால் – என்
உயிரெல்லாம் வெளிச்சம்..
நெஞ்சைச் சுடும் உன்
செந்தீ பார்வை
பட்ட இடமெல்லாம் காதல்..
உன் கரும்புப் பேச்சை
மென்றுத் தின்ற காதோரம் பல
கனவுகளின் சப்தம்..
உன் தெளிந்தப் பேச்சில்
துளிர்க்கும் ஆசையை ஒடித்து ஒடித்துநான்
மெல்ல எனக்குள் மரணம்!!
—————————————————————
2
உயிரை ஒருப்பார்வைக்கே வாங்கிக்கொண்டாய்
உலகையுன் சிரிப்பிற்குள் பூட்டிக்கொண்டாய்
உன்னிடம் பேசிக்குவித்த வார்த்தைகளுள்
வெறும் கனவுகளோடு எனை மிச்சமாக்கினாய்..,
எரும்பூரித் தேய்த்த இடம்போல
மனசெல்லாம் நீ வலியாய் பதிந்துப்போனாய்
நினைவுகளுள் கனத்து கனத்து – நீயில்லாத
இடத்திலெனை தொலையவைத்தாய்..,
கல்சுமக்கும் நீரைப்போல – உனைத்
தாங்கித் தாங்கியே எனைக் கண்ணீரிள் மூழ்கடித்தாய்
நான் தீர தீர நீ உள்ளேச் செல்கிறாய்
என்னுள் இன்னும் ஆழ ஆழப் பதிகிறாய்..
அழுவதும் சிரிப்பதும்
இப்போதெல்லாம் அதுவாக நடக்கிறது
உண்பதும் உறங்குவதும் – நீயின்றி உன்
நினைவோடு நோகிறது
வருவாய் என்றுச் சொன்ன வார்த்தையிலிருந்தே
வாழ்க்கை – புதிதாய் முளைக்கிறது
இந்தப் பிரிவு மட்டும்
பிரிவு மட்டும் நெஞ்சை அப்படிப் பிளக்கிறது..
இதோ.., நீ விட்டுப்போன நினைவுகளில்தான்
இப்போதும் அமர்ந்திருக்கிறேன்;
இன்னும் கொஞ்சத்திற்காய்
கண்ணீரால் உயிர்த்திருக்கிறேன்
வா; நான் என்பதும் நீ என்பதும் மறையும் முன் வா..
—————————————————————
3
அதோ அவள் மாடிவீட்டின்
மேல்தளத்தில் நின்றிருக்கிறாள்
நான் ஊர்தலைவர் மகனுக்குத்
திருமணமென்று வெளியூரிலிருந்து வந்திருக்கிறேன்.,
மாப்பிள்ளை ஊர்வலத்தில் பத்தோடு ஒன்று
பதினொன்றாய் –
நானும் வந்துக்கொண்டிருக்க
எனை தேடிதேடி சுழல்கிறது
அவளுடைய கண்கள்..
எனக்கும் அவளெப்படி இருக்கிறாளென்று
பார்க்கத்தான் ஆசை,
அதே நிறத்து ஆடை
தோற்றம்
அதே இடத்தில நிற்கும்
அவள்;
நிச்சையம் அவள்தானென்றுத் தெரிகிறது,
ஆனாலும் அவளை சரியாகப்
பார்க்க ஆசை,
அவளெப்படி இருக்கிறாள் என்று
கேட்க ஆசை,
நேராக ஒரேயொரு முறை அந்த விழிகளை
இறக்குமுன் பார்த்துவிட மாட்டோமா யென்று
தவம் நிகழ்வதுண்டு எனக்குள்;
ஆசைதான் ஆனால் எப்படிப் பார்ப்பது?
கூட்டம் நகர்ந்துக் கொண்டே இருக்கிறது
நானும்
உடன் வருவோர்களோடு பேசிக்கொண்டே
நகர்கிறேன்..
மனசு மட்டும்
மாடி மீதேறி அவளுக்கு
அருகில் நின்று
என் காதலியை தேடிக்கொண்டிருக்கிறது,
என்றாலும் எப்படி நேராகப் பார்ப்பேன்
அவளை?
எல்லோரின் முன்புமாக அவளை நானெப்படிப் பார்ப்பது ?
இன்று அவள் யாரோ
நான் யாரோ
எங்களுக்குள் நாங்கள் வாழ்வதற்கான
கதையைத்தான் ஒரு இருபதாண்டுக்கு முன்
சாதிக் குப்பையினுள் போட்டு புதைத்துவிட்டோமே;
காதலின் புதைக்குழிகளாகத்தான்
இன்று
குடும்பத்துள் நிறைய இதயங்கள் சிரித்துக்கொண்டு
விளக்காய் எரிவதை
வலிப்பவருக்குத் தானே புரியும்;
காதலென்பது அன்பென்று
புரியாத இச்சமூகத்தில்தான்
நானின்று தெருவோரக் கூட்டத்திலும்
அவள் தனியே மாடியிலுமாய் நிற்கிறோம்..,
அவள் பார்க்கும் தேடும்
கண்களைக் காணதவன்போல
இரண்டு மனங்களை மிதித்தேறி – இதோ
தூரத்தில் செல்கிறேன்..
நண்பர் பேசப்பேச சிரித்துக்கொண்டே போகிறேன்
என்றாலும்
கண்களில் நீர் கூடி கூடி வழிகிறது
என்னாச்சு என்னாச்சு என்கிறார்கள்
ஒன்றுமில்லை தூசி என்கிறேன்,
அவளும் தூசி என்றுச் சொல்லி கண்களைத்
துடைத்துக்கொண்டிருப்பாள்; ஒருமுறையேனும்
கேவி அழுதிருப்பாள்;
பிரிவு
எப்பேர்பட்ட வலியென்று
பிரியாதவரை தெரியாது,
பிரிந்ததும்தான் தெரியும்
அது வலிமட்டுமல்ல நினைவுதோறும் உயிரறுக்குமென்று,
எங்களுக்கும் அறுத்தது
ஆனால் – ஏன் பிரிந்தோம்
எப்படிப் பிரிந்தோம்
எதற்காக திருமணம் செய்துக்கொள்ளவில்லை
இப்படி நிறையக் கேள்விகள்
பொதுவாக எழலாம்,
பதில்களை வேண்டுமெனில்
உங்களுக்குள்ளும் தேடிப்பாருங்கள்
எனக்குத் தெரியும் –
நம்மில் நிறையப்பேர் இப்படி
தெருவிலும்
வீட்டிலும்தான் இதயக் கதவடைந்து
வெறும் நினைவுகளின் கூடாகத் திரிகிறோம்..,
வேண்டுமெனில்
கண்களைமூடி மனதிற்குள்
இரண்டுச்சொட்டுக் கண்ணீரை விட்டுக்கொள்ளுங்கள்
அந்தக் கண்ணீரில் கழுவப்பட்டு
இந்தச் சமூகம்
தனது சாதிவெறியை கழுவிக்கொள்ளட்டும்.,
அதற்குப்பின் –
காதலைப் பற்றி
பிரிவைப்பற்றி
நாங்களிப்படி திரும்பிக்கூட பார்க்காமல்
கண்ணீரோடு போவதுபற்றியெல்லாம் சிந்திப்போம்..
—————————————————————
வித்யாசாகர்
வணக்கம்
அண்ணா.
நன்றாக உள்ளது.. படித்துமகிழ்ந்தேன் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
LikeLiked by 1 person
நன்றிப்பா..
LikeLike