தண்ணீர்க் கேட்டுதவித்த
வாய்க்கு
வாக்கரிசியைப் போட்டது மழை..,
உயிர்ப்பிச்சை வேண்டிநின்றப்
பிள்ளைகளுக்கு
மரணதண்டனை தீர்ப்பு வழங்கியது மழை..,
மழைவந்தால் –
மகசூல் கூடுமென்று நம்பிய ஏழைகளை
முறுக்கிய கைக்கொண்டு
வெள்ளத்தால் அடித்து துவைத்து மழை..,
மிருகங்கள் தானே என்று தெரிந்தும்
மிருகங்களைக் கொள்ளும்
மிருகமானது மழை..,
மாடு போச்சோ
வீடு போச்சோ என்றெல்லாம் கவலையில்லை
அக்கா போனாளோ
அம்மா போனாளோ
வெள்ளம் யாரையெல்லாம் கொண்டுபோனதோயென்று
அடிவயிறு கலங்க நெருப்பிட்டு
தன் கோபக் கணக்கை –
தீர முடித்துக்கொண்டது மழை..,
முதல் நாள் மின்சாரமில்லை
அடுத்த நாள் பாலில்லை
அடுத்து வீடில்லை
அதற்கடுத்த நாள் –
நிறையப் பேரிடம் உயிரேயில்லை..
சமைக்க நெருப்போ
சுமக்க துணிவோ
எரிக்கும் பட்டினியை அணைக்க
குடிநீரோ யில்லை;
எந்திரங்கள் நின்றுபோன வீட்டிற்குள்
இயற்கையோடு சேர்ந்த வாழ்க்கை
மறந்துபோயிருந்தது,
மிச்சமிருந்ததும் மனிதர்களோடு சேர்ந்து
மழைக்குள் மூழ்கியது;
இப்போதும் மழை
எல்லாவற்றையும் எடுத்துபோகவில்லை
கொஞ்சத்தை உதறிவிட்டுப் போயிருக்கிறது,
எச்சரிக்கையை விடுத்திருக்கிறது;
உடனே சரிபார்துக்கொள்ளுங்கள் மனிதர்களே
இல்லையேல் மழை மீண்டும் வரலாம்
அந்த மழை மீண்டும் வரலாம்..