1
மழையில்
மனிதர்கள் இறந்தார்கள்
கணக்கிடப்பட்டது;
மிருகங்கள் கூட மழையில்
இறந்தன,
மிருகங்களைப் பற்றியெல்லாம்
எந்த மிருகத்திற்கும் கவலையில்லை!
—————————————————————–
2
வெள்ளக்காடு
தெருவில் ஓடியது
மனித வெள்ளம்
தெருவில் நீந்தியது
வெள்ளக்காடு முடிந்துபோனது
உயிர்க்காற்று நோயுள் வேகிறதே.. (?)
—————————————————————–
3
எத்தனையோ வீடுகள்
வாகனம்
வசதி
சொத்து
ஆடம்பரமெல்லாம்
மழையில் போனப்பின் தான்
மனிதரில் நிறையப்பேர்
மனிதனாகவேயானார்!!
—————————————————————–
4
நிர்வாணமாய் பிறந்து
நிர்வாணமாய் இறக்கும் மனிதன்
இடையே மூடிக்கொள்ளும்
ஆடம்பரத்தினால் தான் ஒட்டிக்கொள்கிறது
சாதியும் மதமும்
அதில் மேல்கீழும்..
அத்தனையையும்
கிழித்தது மழை..
ஆடையோடு மட்டும் விட்ட இடத்தில
எந்த அடையாளமும்
ஒரு பிடி சோற்றைவிட பெரிதாகத் தெரிந்திடவில்லை..
சோறு சாதி மதத்தைப்
பின்தள்ளிக் காட்டியது,
மழை மனிதனைச் சற்று
கழுவி மனிதனாய்க் காட்டியது!
—————————————————————–
5
வெளியே
விமானம் வந்து காப்பாற்றியது
பொட்டலம் போட்டது
மழை விட்டது
வெள்ளநீர் வற்றி
சென்னை மீண்டும் சரியானதெல்லாம்
வெள்ளத்தில் மூழ்கிபோன
பெயர்தெரியா மனிதர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லைதான்..
—————————————————————–
6
எனக்கு எனக்கு என்று
சுயநலத்தோடு ஓடுகையில்தான்
மழைகூட வெள்ளமானது,
பிறரைக் காப்பாற்ற
புறப்பட்டவுடன்தான் வெள்ளத்திற்கே
சவால்விட்டது
மழையொழுகிய சென்னை..
மனிதமென்னவோ நம்மிடம்தான்
இருக்கிறது,
கற்றுதரத் தான் மழை தேவைப்படுகிறது..
—————————————————————–
7
பெரிய பெரிய வீடுகளையும்
கட்டி கட்டியாய் தங்கத்தையும்
கட்டு கட்டாய் பணத்தையும்
மெத்தைக்குக் கீழ்வைத்து
உறங்கியவர்களுக்குக் கூட
அந்த ஒரு பொட்டலச் சோறும்
ஒரு சுத்து துணியும்தான் தேவைப்பட்டது
வெள்ளத்தின்போது உயிரோடிருக்க..
—————————————————————–
8
தூக்கம் சொக்கியது
உடல் குளிரில் நடுங்கியது
பசி உயிரை வதைத்தது
காதல் இல்லை
காமம் இல்லை
காப்பாற்று காப்பாற்று
என்றுக் கத்திய குரலில் ஒரு துளி
ஆசையில்லை.. மோகமில்லை..
மழை நின்றுவிட்ட மீத ஈரத்திலிருந்து
மெல்ல இனி அத்தனையும்
மீண்டும் முளைத்துக்கொள்ளலாம்..
—————————————————————–
9
மனிதருக்கு வாழ
ஒரு உயிர் மட்டுமே தேவைப்பட்டது
உயிரோடிருக்கத்தான்
உடை உணவு வீடு என எல்லாம் அவசியமானது..
அவசியம் கடந்து பதுக்கிய
கோடிகளுக்குத்தான் இன்னும்
எத்தனை மழை வருமோ..?!!
—————————————————————–
10
வேடிக்கைப் பார்க்கப்போனவன்
வெள்ளத்தில் மூழ்கினான்
வெள்ளத்தால் அடித்துவரப்பட்ட
ஒருவன்
உயிரோடு கரை யொதுங்கினான்
எங்குமே போகாமல்
வீட்டிற்குள் இருந்தோரையும்
மழை கூண்டோடு கொண்டுபோனது..
மழை இம்முறை
ஒவ்வொருவரின் கணக்கை
ஒவ்வொரு மாதிரி முடித்திருக்கிறது..
அடுத்தமுறை வரும் மழைக்குள்
நம் கணக்கை நாம்தான்
சரிசெய்துக்கொள்ள வேண்டும்..
—————————————————————–
11
வெள்ளத்தின் காப்பாற்றப்பட்ட
ஒரு அறையில் அமர்ந்துக்கொண்டு
உயிரோடிருப்பதைக் காட்டிலும்
எழுந்து ஓடி நனைந்து மூழ்கி
தேடிக்கொண்டே இருந்தேன் அவளை..
தொலைந்துபோன அவளின்
முகவரியிலிருந்து
ஒரு எழுத்துக்கூட எனக்கு கிடைக்கவில்லை..
—————————————————————–
12
யார் சொன்னது
ஆண் பெண் பேதம் என்றெல்லாம் ?
இருவருக்கும் பொதுவாக
ஒரு உயிர் தான் மழையில் நனைந்தது..
ஒரு உயிர் தான்..
—————————————————————–
13
என் பிள்ளைகளை
மனைவியைக் காணவில்லை
அம்மா அப்பாவைக் காணவில்லை
அண்ணன் தம்பி குடும்பம்
யாரையுமே காணவில்லை;
வெள்ளத்திலிருந்து எனைக்
காப்பாற்றியவரை
முதன்முதலாய் கொலைச் செய்யவேண்டும்..
—————————————————————–
14
ஒரு மனிதருக்கு உயிர்வாழ
உயிர் மட்டுமல்ல
உணவோ உடையோ மட்டுமுமல்ல
உறவும்
நட்பும்
காதலும் அவசியமென்று
மழை விட்டப்பின்பும்
மழை உணர்த்திக்கொண்டே யிருக்கிறது..
—————————————————————–
15
அவள் சிவப்பு தாவணி
அத்தனை அழகு
அவளின் கண்கள்
அன்புப் பூத்தப் பார்வை
அழகு கொஞ்சும் பேச்சு
அத்தனையும் அழகு..
அவள் பேசினால்
மேகம் சற்று நின்று கேட்டுவிட்டேப் போகும்
அவள் சிரித்தால்
சுடுமூஞ்சிக்கும் கூட சிரிப்பு வரும்
அவள் அழகு
எத்தனைப் பெரிதென்றால்
நான் உயிர்வாழ்தலைவிட
சற்று கூடுதல் தானென்பேன்..
அதத்தனையையும்
விழுந்து விழுந்து
தேடுகிறேன் மழைநீருள்..
அவள் எங்குமேயில்லை.. அவளை மழை தொலைத்துவிட்டது..
எங்களை உயிரோடு கொன்றுவிட்டது மழை!!
—————————————————————–
வித்யாசாகர்