நண்பர்கள்தான்
நெற்றியில் அடிக்கவில்லை
ஆனால் அடிக்கிறார்கள்;
உறவுகள் தான்
அன்பில் குறையொன்றுமில்லை
ஆயினும் கொல்கிறார்கள்;
பிள்ளைகள்தான்
விட்டுப் பிரிவதெல்லாமில்லை
ஆயினும் இடைவெளி கொள்கிறார்கள்;
உடன் பிறந்தவர்கள் தான்
ஒரே ரத்தம் தான்
ஆயினும் எல்லாம் வேறு வேறு;
அப்பா அம்மா தான்
பெற்றவர்கள்தான்
முழுதாய் புரிவதேயில்லை;
வீடு பொருள் அத்தனையும்
அப்படித்தான்
இருப்பதாகவே தெரிகிறது; ஆனால்
அத்தனயுமே இல்லை,
எல்லோருக்கும்
எல்லாமாக சுயம் இருக்கிறது
எனக்கும் தான்; எனக்குமிருக்கிறது சுயம்
இதோ அந்த சுயத்தைக் கொல்கிறேன்
கொஞ்சம் கொஞ்சமாய்க் கொல்கிறேன்
கொன்று என் சுயம் மண்ணில் சாய்கையில்
யாரும் எனக்காக அழுதுவிடாதீர்கள்..
வித்யாசாகர்
அருமை!. வளரும் குழந்தைகளுக்கு தகப்பனாகவும், வயதான பெற்றோருடையவனாகவும் இதை உணர்ந்துகொள்ள முடிந்தது. ஆனால் கடைசி நான்கு வரிகள் புரியவில்லை. “சுயத்தைக் கொல்கிறேன்” என்பதன் உள் அர்த்தம் முடிந்தால் விளக்க வேண்டுகிறேன்.
LikeLiked by 1 person
பிறரை நோகமுடியாது தனைத்தானே நொந்துக்கொள்வதில் சுயம் எனும்; அந்த தான் எனும் நான்; நான் எனும் எனது உடலிலிருந்து உள்ளத்திலிருந்து உயிர்வரை ஒவ்வொன்றாய் உதிராமலா போகும்..? ஆக நோகுபவரை நோகாமல் தான் நொந்துக்கொள்வதைத்தான் கொன்றுக்கொல்வது என்றேன். அதிலும் கோபத்தில் சற்று சிறுபிள்ளைபோல் அழுத்தமாகக் கூறியுள்ளேன். வேறொன்றுமில்லை, பிழையாக எண்ணாதீர்கள்..
நன்றி.. வணக்கம்..
LikeLike
நன்றி. கோபம் தணிந்த பிறகு நீங்கள் எழுதியிருந்தால் கடைசி நான்கு வரிகள் எப்படி இருந்திருக்கும் என்று அறிய ஆவல். விருப்பமிருந்தால் நேரம் இருக்கும்போது எழுதவும்.
LikeLiked by 1 person
ம்ம்.. கண்டிப்பாக எழுதுகிறேன்.. நன்றி.. வாழ்க..
LikeLike
வணக்கம் … எல்லோருக்கும் சிலவேளைகளில் மனம் நசிந்த நிலையில் தோன்றும் சலிப்பில் எழும் வரிகள்… உங்களால் அதை அழகாக எழுதிவிடவும் முடிகிறதே… ! எப்போதும்போல் எழுத்துக்கும் எண்ணத்திற்கும் இடைவெளி குறைந்தவர்களால் மட்டுமே ஏதுவானது..! அதுதானே.. உங்களின் பலம்…அதன் மீதே நிற்கிறீர்கள்… நாங்கள் அண்ணாந்து பார்த்துகொண்டிருக்கிறோம் … ஏதும் இயலாதவர்களாக ..! வாழ்த்துக்கள்…!
LikeLiked by 1 person
நீங்களெல்லாம் உடனிருப்பது தானைய்யா பலமே. வாழ்க்கை வெவ்வேறு இடத்தில வேறு பலவாக இருந்தாலும் அதனைத்திற்குமான உயிர் அன்பொன்றே எனில் அங்கே யாவரும் சமமாகிபோகிற கூடு நம் அன்பின் கூடு.
அங்கே சருகது ஒன்று காற்றில் அடித்துச் செல்ல வேறிரண்டைக் கொண்டுவந்து கூட்டைமூடும் அன்பு மனதுண்டு நம்மிடத்தே; அதையெண்ணி இச்சிறுபிள்ளை கோபம் எல்லோரிடத்திருந்தும் தணியும்… தணியட்டும்..
LikeLike
அன்பின் வித்யாசாகர் சார்….
மிகவும் வித்தியாசமான கவிதை திடீரென்று வேறெங்கோ பயணம் செய்துவிட்டது போல் தோன்றியது… ஆனால் கவிதை உங்களது கருத்து, உங்களது படைப்பு. உங்களது ஆக்கம் அது.
சில பிரதிபலிப்புகள்:
இடைவெளிகள் தவறானவை அல்ல…;பிள்ளைகளோ, வேறெந்த உறவுமோ கூட அவரவர் தனித் தன்மையின் தடத்திலே நில்வுதலே அழகு…அதுவே உண்மையும் கூட…
ஒரு பக்கத்திலிருந்து புகார் எழுப்பும் கவிதைகள் சில நேரம் வாசிக்கையில் மயக்கமும், போதையும் ஊற்றிக் கொடுத்தாலும், இந்தப் பக்கத்திலிருந்து வேறு வேறு தரப்புக்கு வார்க்கப்படும் அன்பு கூட நிபந்தனையோடு போயிருக்கலாம் அல்லவா..அல்லது மறுக்கப்பட்டும் இருக்கக் கூடும் அல்லவா…
அன்பு எதிர்பார்ப்பு அற்றதாகவும், நிபந்தனை அற்றதாகவும், பலன் கருதாததாகவும் பாய்கையில் இன்னும் கூடுதல் அன்பு உலகத்தைக் கட்டி ஆளும் அல்லவா…
எஸ் வி வி
—————————————————–
தாங்கள் முற்றிலும் சரி, கோபமோ உணர்ச்சிவயப் படலோ எதுவாயினும் அடக்கி பிறர் மனம் வருந்தாது வாழ முற்படுவோரே பண்பட்டோர் எனலாம். கோபத்தைக் கொட்டிவிடுவது சுலபம். அடக்கி ஆள்வதே ஞானம். அதிலும், அன்பினும் கூடிய பெருமருந்து வேறில்லை இவ்வுலகை சீர்செய்ய. உறவாயினும் சரி வெற்றியாயினும் சரி எதன் நோக்கமும் அன்பிற்குக் கட்டுண்டுப் போதல் அன்றி வேறில்லை நாட்டம். அதுபோல் அவ்வன்பு எதிர்ப்பார்ப்பின்றி கொடுப்பதாகவே இருந்துக் கொள்ளுதல் ஒரு கொடைகுணம், மீண்டும் மீண்டும் கொடுத்தலும் மன்னித்தலும் தெய்வீகதனம். எல்லாம் சரி; ஆயினும் யதார்த்த இதயமானது வலி கொண்டதும் அழுமில்லையா? அழுதபின் சரிசெய்துக் கொள்வது, தெளிவது எல்லாம் வேறு; ஆயினும் அழுகையில் வலிக்குமில்லையா அந்த வலியினுடைய ஒரு பதிவுதான் இது. எதனொன்றிற்கும் இரு பக்கமுண்டு. இயற்கை மேல் கீழ் இருள் வெளிச்சம் நல்லது கெட்டது போன்றதொரு இயற்கையின் லயத்தை நேர்கொண்டுப் பார்க்கையில் நல்லதை எடுத்துக்கொள்வது ஒரு சிறந்தப் பண்பு என்றாலும், சிலநேரத்து வலி’ அதிலும் மனிதர்களால் மனிதர்களுக்கு நேரும் வலி நெஞ்சில் நெருஞ்சி முள் தைத்ததாய் இல்லையா?
அதிலும், எனக்கு யாரால் எது நேரிடினும், அவரை எளிதில் மன்னித்துவிட இயலும், ஆனால் என்னை நான் மன்னிப்பதேயில்லை. இறைவா எதுவாயினும் தண்டிப்பதாயின் என்னை தண்டித்துக் கொள் என் எழுத்திலோ வேலையிலோ உடனிருப்போருக்கோ குறையைத் தந்து மட்டும் எனைத் தண்டிதுவிடாதே என்றே வேண்டுவது வழக்கம். எனவே எந்த வருத்தமோ உடல் வலியோ குறையோ வரினும்கூட அதையே ஒரு தண்டனை என்று எண்ணிக்கொண்டு வலியை சகித்துக்கொள்வதுண்டு. அப்படி சகிக்க சகிக்க வலிக்க வலிக்க என்னைத் தவிர நான் யாரையுமே நோவதில்லை, மாறாய் ஏதோ கடன் தீர்ந்த இன்பமென எண்ணிக் கொள்கிறேன். கொள்வோரின் வலிக்கு நீதி வேண்டி பொதுவாய் அதையும் பதிந்துச் செல்கிறேன். காலத்தை உகந்த இடத்தில் அதுவாக அதைப் பதிவதே படைப்பாளியின் பொறுப்பு.
இக்கவிதைக்கு மேலும் பல விளக்கங்களை தரவேண்டிய அன்புச் சூழல் நிலவியதால் அதையுமிங்கே தங்களின் புரிதலுக்கு இணைக்கிறேன். தங்களின் அன்பிற்கும் மதிப்பிற்கும் நன்றியும் மிகுந்த அன்பும் ஐயா.. வணக்கம். வாழ்க..
—————————————————–
இதலாம் எனக்கானதுன்னு இல்லைப்பா நமக்கானது. வாழ்க்கை அதொரு காட்சியில் இப்படியும் தெரிகிறது. பார்த்துக்கொண்டே கடக்கிறேன். கடக்கையில் இதையும் பதிகிறேன் அவ்வளவே..
தம்பிகளுக்கு அற்பூறிய முத்தம்..
—————————————————–
இதன் வருத்தம் நம் அனைவருக்கும் பொது சகோதரி. உள்ளே வலிப்பதை பொதுவில் பதிகிறோம் என்றாலும் இது எனக்கான கவிதை மட்டுமல்ல; பொதுவாக விரக்தியில் ஆழ்ந்துப்போன அனைவருக்கும் அர்த்தம் கொள்வதாகும். இதில் கவிதையின் பாடுபொருள் நானாகக் கூட எனைச் சார்ந்தவர்களுக்கு இருக்கலாமில்லையா? யாருமே இங்கு முழு சரியில்லை அன்பு சகோதரி. எல்லோருமே கொஞ்சமோ நிறையவோ திருத்திக்கொள்ள வேண்டியவர்கள் என்பதைத்தான் இவ்வரிகள் எனக்கும் சேர்த்துச் சொல்கிறது. எனவே வருத்தமெல்லாம் கொள்ளாதீர்கள். இந்த உலகில் யாருமே எனக்கு எதிராயில்லை, எதிரே இருந்தாலும் நண்பர்களே இருப்பார்கள், இருக்கிறார்கள் என்பதுதான் எப்பொழுதேனும் வலிக்கும்.. நிறைய அன்பு.. நிம்மதியாய் இருங்கள் அன்புச் சகோதரி..
—————————————————–
வித்யாசாகர்
LikeLike