“அம்மா சிகரெட் புடிச்சா தப்பா?”
“உனக்கு ஏன் அதலாம்?”
“இல்ல கேக்குறேன்” கனகனின் ஏழு வயது மகள் கேட்டாள்.
“தப்புதான்..”
“ஏன் தப்பு?”
“புகை உள்ளப் போனா உயிர் கருகும்”
“அப்படின்னா?”
“சீக்கிரமா செத்துப் போவாங்க”
“அப்போ அப்பா ஏன் புடிக்கிறாரு ?”
“அது அவரைத்தான் கேட்கணும், கேட்டா பழக்கம்ன்னுவார், பழகியது தவறுன்னா திருத்திக்கிறதுல என்னச் சிக்கல் இவங்களுக்கு தெரியலை” அவளாகவே புலம்பினாள். குழந்தைக்கு அத்தனை புரியவில்லை..
“சரி அப்போ அப்பாவும் செத்துடுவாரா?”
“ஆ…..மாம்னு சொல்லவந்து நிறுத்தினாள் சரோஜா. சற்று சுதாரித்துக் கொண்டு “அதலாம் அப்பாவுக்கு ஒன்னும் ஆகாது நீ போ போய் விளையாடு” என்றாள்.
“அப்பா நல்லா அப்பால்லமா ?”
“ம்ம்..”
“அப்போ ஏன் அப்பா குடிச்சிட்டுவந்து என்னென்னவோ பேசுறாரு ? குடிக்கிறதும் தப்பு தானே?”
“மகா தப்பு, அவருக்கு அதலாம் புடிக்கவே புடிக்காது, இப்போதான் இப்படி மாறிட்டார். அவர் படிச்ச படிப்புக்கு எப்படியோ இருக்கலாம். நியாயம் நீதி சமூகம்னு பேசி கடையிசில இப்படி நாசமா போறாரு” அவளுக்கு கொஞ்சம் அழையே வந்தது.
“குடிச்சா என்னாகும்மா ?”
“உனக்கு ஏன் அதலாம்? யாருன்னா எதனா சொன்னாங்களா ?”
“இல்ல, குடிச்சா உயிருக்கு ஆபத்துன்னு டிவில போடுறாங்கள்ல அதுல பார்த்தேன்..”
“சரி போ போய் விளையாடு.. எனக்கு வேலை இருக்கு”
“இல்லமா குடிச்சா என்னம்மா ஆகும் ?”
“குடி வேற புகை வேறையா ?? போதை தர எல்லாமே உயிரைக் கொல்லும்”
“போதைன்னா ?”
“மயக்கம்.. தலை சுத்தும் அப்படியே”
“நீ குடிச்சிருக்கியா?”
“ச்ச கண்றாவி.. அடி வாங்க போற பார் நீ..”
“இல்லம்மா.. குடிச்சா மயக்கம் வருமா?”
“வராம…….???”
“உனக்கெப்படி தெரியும்..?”
“அதான் பார்க்கிறேனே தினமும். போதை வரதால தானே இப்படி குடிச்சிட்டு ஆடுறாரு உங்கப்பா. அதனாலதான் தன்னையும் தன் குடும்பத்தையும்கூட மறந்து கிடக்குறாரு”
“சரி.. மயக்கம் வந்தா வரகூடாதுன்னு மருந்து சாப்பிடுறோம்முல்ல மா ?””
“ம்ம்..”
“அப்புறம் நாமலே போய் காசு கொடுத்து வாங்கி குடிச்சு மயக்கம் வந்துதுன்னா அது தப்பு தானே ?” மகளை வாரிக் கட்டிக்கொண்டாள் சரோஜா. “ஆமா ரத்னா, அது ஏன் இந்த மனுசங்களுக்கு தெரியலைன்னு தெரியலை. ஆம்பளைங்கதான் இப்படி குடிச்சிட்டு அழியிறாங்கன்னு பார்த்தா இன்னைக்கு பெண்களும் குடிக்க ஆரம்பிச்சிட்டாங்க”
“பெண்களும் குடிக்க கூடாதா மா? அதனால்தான் நீ குடிக்க மாட்டியா?”
“குடிக்கிறதை யார் குடிச்சாலும் தப்பு தான், எந்த தீய பழக்கமும் இல்லாம ஒழுக்கமா வாழ்ந்தா தான் உடம்பும் மனசும் சுத்தமா இருக்கும். அறிவு நல்லத நோக்கிப் போவும்”
“சரி ஒண்ணே ஒண்ணு.., உங்களுக்கு எப்படி தெரியும் இதலாம் ? ஸ்கூல்ல படிச்சீங்களா?”
“கிழிச்சோம், காலேஜ் போய் கிழிச்சோம், நான் எம் ஏ தமிழ், உங்கப்பா உளவியல், அந்தறிவெல்லாம் எங்க போச்சின்னுதான் தெரியலை..”
சரோஜா சலித்துக் கொண்டாள், மகளிடம் பேசியவாறே கூட்டிக்கொண்டு வாசல் நோக்கி வருகையில் தான் அந்தக் கிழவி அடித் தொண்டையில் கத்தினாள். சரோஜா வாசலை நோக்கி ஓடினாள்.
*****
கனகன் விடுவதாயில்லை. மிக அழுத்தமாய் இருந்தான். உண்மையிலேயே இவன் குடிதிருக்கிறானா இல்லை குடித்ததுபோல் நடித்து இப்படியெல்லாம் செய்கிறானா என்றுகூட கூட்டத்தில் பேசிக் கொண்டனர்.
செவ்வந்தி நகர் படு ஜோர் பட்டுப் போனது. எல்லாம் தொலைக்காட்சியும் மாறி மாறி நேரலை செய்துக்கொண்டிருந்தனர். சுடுகாட்டை ஒட்டியது போன்ற சென்னையின் ஒரு ஓரப்பகுதி அது. கேட்பாரில்லாது இன்றும் குடிசையும் உடைந்த தெருவும் தண்ணீரில்லாத காய்ந்தப் பகுதியாகவும் காட்சியளித்தது செவ்வந்தி நகர். ஓட்டுக்கு ஆள் வருவதோடு சரி அதற்குப்பின் அந்த புறம் தலைவைத்து கூட யாரும் படுப்பதில்லை.
இன்று கதையே வேறு, தொகுதி எம்எல்யே கட்சி மந்திரி என ஆளுக்கு ஆள் மாறி மாறி வந்தனர். முதல்வர் வரப்போகிறாரென ஒரு கும்பல் ஊரையே துவைத்து சுத்தமாக்கி சாலையை ஒழுங்குசெய்து பரபரப்பாக்கிக் கொண்டிருந்தது.
“அது ஏன் இதுக்கெல்லாம் முதல்வர் வரணுமா? லைனை மாத்துய்யா, இல்லைனா மொத்த கரண்டை நிறுத்து. அவனைத் தொக்கி உள்ள போடு” என்றார் ஒரு ஆளுங்கட்சி மந்திரி. “ஐயோ கட்சிஊத்திக்கும் தல பரவாயில்லையா? மொத்த ஊடகமும் இங்க தான் இருக்கு, அதலாம் முதல்லையே செய்திருக்கணும், இன்னைக்கு இரவு ஐயா வரலைன்னா நாளைக்குள்ள ஊர் திண்டாடி போவும்.
முதல்வர் இந்தியாவிலேயே கிடையாது வெளிநாட்டில் இருக்கிறார் வர ஒரு வாரம் ஆகும் என்று கூட சொல்லிப் பார்த்தார்கள் கனகனிடம். பத்து நாள் ஆனாலும் நான் இங்கேயே உயிர்விடுவேன். முதல்வர் வந்தேதீரணும் என்றான் கனகன். அதற்குள் தொலைக்காட்சி நிருபர்கள் ஆங்கங்கே அவரவர் பங்கிற்கு அவனைப் பற்றி முழுதுமாக விசாரித்து அலசிக் கொண்டிருந்தனர். மெத்தப் படித்தவன் என்றும், மிக அறிவாளி, குடிக்கவில்லை என்றாலும் குழந்தையை விட மேன்மையானவன் என்றெல்லாம் என்னென்னவோ சொன்னார்கள் ஊர் மக்கள்.
சரோஜாவும் ரத்னாவும் கனகனுக்கு ஏதேனும் நேர்ந்துவிடுமோ என்று பதட்டத்தில் அழுதபடியே இருந்தனர். எதிர்க்கட்சித் தொண்டர்கள் கூடநின்று “நாங்கயிருக்கோம். கனகனுக்கு நாங்க இருக்கோம், அவனுக்கு ஒன்னும் ஆகாது, இதலாம் ஆளுங்கட்சியோட முறையில்லா ஆட்சியால நடக்குது, அரசு குடிக்கவிட்டா மக்கள் குடிக்கத்தான் செய்யும், ஆட்சி மாறினா எல்லாம் சரியாயிடும்” என்றது.
ஊடகங்களும் பொதுமக்களும் எல்லாவற்றையும் கண்கொட்டப் பார்த்துக்கொண்டிருந்தனர். வேறு வழியின்றி இறுதியாக முதல்வர் நாளைக்குக் காலையில் வருவதாக ஒப்புக்கொள்கிறார். இது ஒரு குடிகாரனின் அராஜகத்திற்கு இணங்கி போவதல்ல, படித்த ஒரு மனிதனின் உணர்விற்கு மதிப்பு கொடுக்கிறது இந்த அரசு. இந்நாட்டுப் பிரஜையின் ஒரு உயிருக்குகூட முழ உத்திரவாதம் அளிக்கிறது இந்த அரசு என்று முதல்வர் விளக்கத்தோடு உறுதி கொடுக்க. செவ்வந்தி கிராமம் ஓ..வெனக் மகிழ்ச்சியில் கத்தி துள்ளிகுதித்தது. ஊரெல்லாம் ஆரவாரம் பரவியது.
மறுநாள் முதல்வர் வராரென்று அக்கம் பக்கத்துக்கு ஊரெல்லாம் தன்னை அழகுபடுத்திக்கொள்ள ஆரம்பித்தது. அவர் வரும் வழியையெல்லாம் அழகு செய்தார்கள். இரவோடு இரவாக சாலையையெல்லாம் மாற்றினார்கள். குழாய் போட்டார்கள். கட்டவுட் வைத்தார்கள். கலர் காகிதம் பட்டாசெல்லாம் வைத்து பரமசோதியாக சொலித்தது செவ்வந்தி நகர்.
கனகன்தான் பாவம். அத்தனை முடியவில்லை அவனால். உடல் தளர்ந்திருந்தான். பரவாயில்லை கீழிறங்கு முதல்வர்தான் வருவதாக ஒப்புக்கொண்டாரே’ பிறகென்ன வாவென்று எவ்வளோ எல்லோரும் வேண்டினார்கள். அவன் மறுத்துவிட்டான். கொட்ட கொட்ட விழித்திருந்தான்.
மறுநாள் காலையில் பட்டாசு வெடித்தது, ஊரெல்லாம் சீர்செய்யப்பட்டு, காவலாளிகள் அணிவகுத்து நின்றிருந்தனர். கனகனின் படம் நல்லதும் கெட்டதுமாய் ஆங்கங்கே வரையப்பட்டிருந்தது. இரவெல்லாம் அவன் உறங்கவில்லை என்பது வேறு எல்லோருக்கும் தெரியவர, பெரிய அழ்தக்காரன்பா இவன் என்றார்கள். அவனை ஒரு கதாநாயகனைப்போல் பார்க்கத் துவங்கிவிட்டனர் பொதுமக்கள். “குடிகாரனுக்கும், கூத்தியா வைக்கிறவனுக்கும்தான்யா இது காலம்” என்று ஒருசாரார் புலம்பாமலுமில்லை. அதலாம் தாண்டி அதிகப் பேர் கனகனை ஒரு படித்த பட்டதாரியின் போராட்டமென்றே பார்க்க துவங்கினர்.
*****
சரியாக காலை பத்து மணிக்கு முதலமைச்சர் ஊருக்குள் நுழைகிறார். எல்லோரும் தமிழகம் முழுக்க கனகனை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அப்படி என்னதான் கேட்கப்போறான் இவன் என்று வியப்போடு எதிர்நோக்கி இருக்கிறார்கள். மெல்ல மெல்ல தகவல் ஒருமாதிரி சித்தரிக்கப்பட்டு வேறுபல செய்திகளின் வழிமாறி மாறி பல தென்னிந்தியச் செய்திகளில்கூட கனகனைப் பற்றிச் பேசப்பட்டது. இங்ஙனம் ஒரு போராட்டம் நடப்பதாகவும் அதற்காக முதலமைச்சரே நேரில் வருவதாகவும் சொல்லப்பட்டது.
கடைசியில் கனகன் இறங்கி முதல்வரின் காலில் விழ, முதல்வர் தூக்கி நிறுத்தி இது தவறு என்றும், முறையல்ல என்றும் கண்டிக்க; கனகன் கேட்ட கேள்விதான் எல்லோருக்கும் தூக்கிவாரி போட்டது.
“நான் குடிப்பது தவறு என்றால், எங்களைச் சுற்றி மதுக்கடைகள் எதற்கு” என்றான்? முதலாக. “மது என்றாலே பிடிக்காத குடும்பங்கள் ஏராளமுண்டு, அவர்களுக்கு கூட மெல்ல; மெல்ல ஏன் வேகமாகவே அறிமுகமாகிவிடுமளவிற்கு இத்தனை மதுக்கடைகள் இந்நாட்டில் இருக்கிறதே அது தேவையா?” என்றான். “உளவியல் படித்திருக்கிறேன். மாற்றங்களின் உயிர்நிலை எதுவென்று எனக்கு தெரியும். உண்மையைச் சொன்னால் இன்று நான் குடித்திருக்கவேயில்லை, குடித்ததாக நடித்தேன். காரணம், பொது இடத்தில் புகை பிடிப்பதை குற்றமென்றுச் சொல்லி கட்டுப்படுத்தும் அரசு பொதுயிடங்கள்தோறும் மதுக்கடைகளை மட்டும் வைதிருப்பது எப்படி சரி? என்றான்.
முதவருக்கு பதில் வரவில்லை. என்றாலும் இதலாம் இப்படிக் கேட்பது முறையல்ல, இது சட்டபப்டி நடவடிக்கை எடுக்கவேண்டிய விசயமாகும் என்றுச் சொல்ல தொண்டர்கள் பாதிப் பேர் அவனை வெட்டிவிடுவேன் குத்திவிடுவேன் என்று குதிக்க, முதல்வர் அவர்களை அமைதி படுத்திவிட்டு, கனகனுடைய கேள்விகளை மனிதத்தோடு மட்டுமே அணுகினார். விரைவில் இதற்கொரு முடிவு எடுக்கப்படும் என்றார்.
ஜனநாயக நாட்டில் அத்தனையும் சாத்தியமாக இருந்தது. பிறந்து வளர்ந்ததுமுதல் காணாத வளர்ச்சியை செவ்வந்தி நகர் இந்த ஒரு இரவில் கண்டதை கனகன் மெச்சுதலாகச் சொல்லிக்கொண்டான். தொலைக்காட்சியில் தனைப்பற்றி செய்தி வருவதைக் காட்டி பெருமையோடு தோளுயர்த்திக்கொண்டான். முதல்வர் தான் சொன்னதை சொன்னதுபோல் செய்தார். தமிழகத்திலுள்ள பாதி கடைகளை உடனடியாக அடைக்க ஆணையிட்டார். மீத கடைகளையும் மூடி மது ஒழிப்பிற்கு வேண்டிய தீவிர மாற்றங்களை ஆவணசெய்தார். “மதுக் கடைகளை மூடிய மதியழகன் கனகன்” என கனகனுக்கு தமிழகமெங்கும் பெருமைகள் வந்துச் சேர்ந்தன.
ரத்னா ஓடி வந்துக் கட்டிக் கொண்டால். சரோஜா அருகில் வந்து “எங்கே ஊதுங்கள் பார்ப்போம் என்றால். உண்மையிலேயே கனகன் அன்று குடித்திருக்கவில்லை.
*****
இப்படி கனகனின் திருவிளையாடல்கள் ஊரெங்கும் மிக பிரிசித்தம். இதலாமென்ன, இதற்கும்முன் நடந்த ஒன்றைக் கேட்டால் ஆடிப்போய் விடுவீர்கள். ஆனால் கனகனுக்கு குடிக்காவிட்டால் ஒரு முகம், குடித்தால் வேறு முகம். குடி அவனை வெறியனாக்கி தெருவில் நிறுத்திய கதைகளும் ஏராளமுண்டு.
குடித்துவிட்டு வந்து மகன் உண்ணும் உணவுத்தட்டில் சிறுநீர் கழித்த அப்பாக்களை உருவாக்கியதும், அப்பா அம்மா என்றுகூடப் பார்க்காமல் போதையில் அசிங்கசிங்கமாக பேசி அவர்களை அடிக்க கைஓங்கச் செய்ததும் இந்த குடிதான். எனக்குத் தெரிந்து; இன்றும் இப்படி வரும்காசில் குடித்து குடித்தே தன்னையும் தனது குடும்பத்தையும் அழிக்கச்செய்வோர் ஏராளமாக இருக்கத்தான் செய்கிறார்கள்.
ஆனால் கனகன் குடிகாரன் என்றாலும் கொஞ்சம் மாறுபட்டவன். இன்று கனகன் குடித்துவிட்டு வந்திருக்கிறான். தெருவையே விளாசிக்கொண்டு வருகிறான். முழுக்கால் சட்டை, காலையில் கொண்டுப்போனச் சாப்பாட்டு பை என எல்லாவற்றையும் யாருக்கு கொடுத்தான் என்ன ஆனது என்பதெல்லாம் தெரியாது, வெறும் உள்கால்சட்டை, பட்டனவிழ்ந்த சிப்பாவோடு தெருவை அளந்துகொண்டு வருகிறான். வாசலில் கனகன் வருவதைக்கண்டு, அதும் இப்படி குடித்துவிட்டு ஆடிக்கொண்டே வருவதைக் கண்டு அந்த கிழவி கத்த, அவளை அதட்டிக்கொண்டே சரோஜா ஓடி தெருவிற்கு வருகிறாள்.. அவளுக்குப்பின்னால் ரத்னாவும் அம்மா என்றுக் கத்திக்கொண்டே ஓடிவருகிறாள்.. கனகனின் தலையெழுத்தையே இனி மாற்றப்போகும் இரவொன்று அவர்களைநோக்கி விரைவாக இருண்டுமூடுகிறது..
_தொடரும்..