இரசிக்கமுடியும் படித்து உணருங்கள்..
வானத்தில் பறக்கும் பறவையொன்று என்னென்ன எண்ணங்களைச் சுமந்துக்கொண்டு பறக்குமோ, யார்யாரைத் தேடிச் சுற்றுமோ தெரியாது. ஆயினும் ஒவ்வொரு பறவையும் தனக்கான ஒரு விதையையேனும் இம்மண்ணில் தூவிவிட்டே போகுமென்பதில் நமக்கெல்லாம் ஒரு சந்தேகமுமில்லை. அதுபோலத்தான் ஒவ்வொரு படைப்பாளியும் தனக்கென ஆயிரம் சிந்தித்தாலும் பாடுபட்டாலும் இந்த மண்ணிற்கென ஏதோ ஒரு விதையை இம்மண்ணில் ஊன்றிவிட்டே ஓய்கிறான் என்பதிலும் மாற்றுக் கருத்திருக்காது. அவ்விதத்தில் இப்படைப்பின் ஆசிரியர் விதைதனை விட்டுவிட்டு காடுதனை விதைத்திருக்கிறார் என்றுச் சொல்லலாம், அத்தனை வலிமையான கருத்துக்களின் வனம்தான் இந்த “சிறகடிக்க ஆசை” கவிதைத் தொகுப்பும்.
“அரசுப் பள்ளியில் படிக்கும்
அனைத்துக் குழந்தைகளும்
காலணி அணிந்துப் பார்க்க ஆசை;
காசு வாங்காத
காவல்காரர் ஒருவரை
அரசு மருத்துவமனையில் பார்க்க ஆசை;
சாதி எதிர்ப்பின்றி நாளை
காதலர்கள்
கரம்பிடிக்க ஆசை” என தனது ஆசைகளை சமுகத்தின் மாற்றத்திற்காக சொல்லிக்கொண்டே போகும் கவிஞர் மா. லட்சுமி நாதன் கடைசியில் சொல்கிறார்,
“கைப்பேசியில் பேசாது ஓட்டும்
நல்ல
ஓட்டுனர்களைப் பார்க்க ஆசை;
இரும்பு துளைக்காதச் சட்டைகளை
யுதறி நம் தலைவர்கள்
மேடையேற ஆசை;
கட்டிய மனைவியை விலகாத
கணவன் – நம்மூர்
கன்னிப்பெண்களுக்கு கிடைக்க ஆசை” என்கிறார். எனைக் கேட்டால், ஒரு சமகாலத்தை எதிர்காலத்திற்கு வேண்டி தனது படைப்புக்களின் வழியே விட்டுச்செல்வது ஒரு நல்ல படைப்பாளியின் கடமை என்பேன். அவ்வழியில் ஒரு சிறந்த படைப்பாளியாக பல புதுமையான கவிதைகளின் வழியே மிகக் கம்பீரமாக வலம் வருகிறார் இந்த மா. லட்சுமி நாதன்.
“என்றோ ஒருநாள்
இரவில் வாங்கியதை
வழியெல்லாம் தேடிக்கொண்டிருக்கும்
அபலையின் குரல் சுதந்திரம்” என்கிறார். நாம் பார்க்கிறோம், நடுவீதியில் ஒரு மனிதர் தனது இறந்துவிட்ட மனைவியின் சடலத்தை வீட்டிற்குக் கொண்டுபோக வழிசெய்யாத மருத்துவமனையையும் இந்த தேசத்தையும் கண்ணீரின் வழியே சபித்தவாறு ஒரு போர்வையால் மனைவியின் உடலை சுருட்டிக்கொண்டு தனது தோளில் மரக்கட்டை சுமப்பதைப்போல சுமந்துக்கொண்டு நடந்தே தனது மாநிலத்து எல்லையை நோக்கி நடக்கிறார். இதைவிட சாபம் நம் மண்ணிற்கு பெரிதாக வேறொன்றும் இருக்கப்போவதில்லை.
“பொதி சுமக்கும் பிள்ளைகளின்
புத்தகக் கட்டுகளைக் குறைத்து
நம் வெள்ளைவேட்டி தலைவர்களுக்கு
அதைப் பாடமாய் தரவேண்டும்” என்கிறார். எண்ணி விரல்விடுங்கள் நூற்றி இருபதிற்கும் மேலான மக்கள்தொகையுள்ள நம் தேசத்தில் நூறோ இருநூறோ தலைவர்கள் மட்டும் சரியாக இருந்துவிட்டால் போதுமா? போதும் என்றாலும் நாளோ ஐந்தோ கிடைக்காத மகாதேசதில் நூறோ இருநூறோ பற்றியெல்லாம் நாம் பேசலாமா? அப்போ என்னதான் குறை? நாம். நாம் குறை. நாம் ஒவ்வொருவரும் குற்றவாளிகள். எனது மண்ணைப் பற்றி, எனது தேசத்தின் சமநீதி பற்றி பார்வையற்ற இலக்கற்ற நாம் அனைவருமே குற்றவாளிகள். இம்மண்ணில் ஒரு பெண் நள்ளிரவில் தனியே நடக்கட்டும் அன்று நாம் விடுதலைப் பெற்றோம் என்றார் மகாத்மா. இன்னும் எத்தனை மகாத்மாக்கள் நமக்கு வேண்டும், பட்டம்பகலில் பெண்ணைக் கொன்றுவிட்டு எந்த மண்ணிற்கு நம்மால் என்ன நன்மையை செய்துவிட முடியும்? இதற்கெல்லாம் தீர்வு என்ன? நாம் மாறவேண்டும். நன்னடத்தை ஒழுக்கம் நோக்கி நடத்தல் வேண்டும். தவறு கண்டு குற்றம் புரிய அஞ்சவேண்டும். அறத்தின் வழியே நடத்தல் வேண்டும். அவ்வழியே வந்த ஒரு தலைவன் வேண்டும். அப்படிப்பட்ட ஒரு தலைவனுக்கு வேண்டி பாடப்புத்தகங்களை அரசியல் தலைவர்களுக்கு கொடுங்கள் என்கிறார் கவிஞர்.
“கீழ்சாதி
மேல்சாதி
என் சாமி உன் சாமி
இதோ, மின்சார சுடுகாட்டில் பார்
எல்லாமே ஒற்றைச் சாம்பல்” என்கிறார். எத்தனை அழகு. அறிவுள்ள தமிழருக்கு இந்த ஒரு சொல் ஒரு சின்ன பொறி போதும். நானும் கூட எழுதி இருந்தேன்
“வா..
அன்புதீயிட்டு எரி,
சாதி திமிர்
சாம்பலாய்ப் போகட்டுமென்று எழுதியிருந்தேன். அம்மணமாய்த் திரியும் ஆடுமாடுகளுக்கு கூட சாதிச்சட்டையை மாட்டிவிடும் கோமாளித்தனம் எப்படி எம் தமிழருக்கு வந்தது என்றுத் தெரியவில்லை. இது இந்த பிரிவு என்பதில் எங்கும் குற்றமில்லை தான், இது மேல் இது கீழ் என்பது குற்றமில்லையா? மனிதரை மனிதரா தரம் பிரித்துக் கொள்வது? சாலைக்கு மத்தியில் வாகன நெரிசலுக்கு இடையே அடிப்பட்டு ஒரு நாய் இறந்து கிடக்கிறது, அதை இன்னொரு நாய் சென்று தனது இரண்டுக் கைகளால் அணைத்து ஒரு ஓரமாக கொண்டுவந்துவிட படாத பாடு படுகிறது, அது ஒரு சமீபத்தில் கண்ட காட்சி. அதே ஒரு பெண் சரமாரியாக வெட்டப்பட்டு சரிந்துகிடக்கிறாள். அவளின் தாய் தந்தை மனதெல்லாம் ரணமாகி நினைவினாலும் ஊர் பேசும் பேச்சினாலும் செத்துக்கொண்டிருக்கிறார்கள். நாம் இணையத்தில் அவளென்ன சாதி, வெட்டியவன் என்ன சாதியென்று அலசுவதையெல்லாம் ஒரு தேனீரோடு அமர்ந்துக்கொண்டு வெறும் செய்தியாகப் பார்த்துவிட்டு பின் மறந்தேப் போய்விடுகிறோம். யோசித்துப் பாருங்கள் இங்கே யார் கீழ் ? யார் மேல்?
ஆக, மனிதர்களை சாதியால் அறுப்பது மனிதத் தன்மையன்று, அன்பினால் கட்டுவதே தாய்மை குணமென்பதை இவ்விடம் கவிஞர் நினைவுறுத்துகிறார்.
“யாரைப் பார்த்தாலும்
நீயாகத் தெரிகிறாய்
காரணம் கண்களா?
மனதா?” என்கிறார். அருமை. காதலைத் தொடாமல் எவன் தன்னை கவிஞன் என்றிடமுடியும்? ஆதிகாலத்திலிருந்தே மனிதர்கள் காதலால் பிண்ணப்பட்டவர்கள்தான். காதலால் தோன்றி, காதலுக்காய் வளர்ந்த சமூகம்தான் பின் அதை நாகரீகத்தின் ஆடைக்குள் போட்டுப் புதைப்பதற்கு உடன் சாதியையும் எடுத்துக்கொண்டு தலைவிரித்தாடுகிறது. காதல் ஒன்றும் அத்தனை பெரியக் குற்றமில்லை. அது இயல்பான ஒரு உணர்வு என்பதை பிள்ளைகளுக்கு அவர்கள் வளர்கையில் நடைமுறைவாழ்வோடு சேர்த்துச் சொல்லிதராததுதான் நமது குற்றம். சாமியையே உற்றுப் பார்த்தால் தெரியும் “இது மட்டுமல்ல கடவுள்” எல்லாம் தான் என்று தெரியும். பிறகு யாரையுமே கொல்லமாட்டாய் யாரையுமே கடிய மாட்டாய் எனவே உற்றுப் பார், ஆனால் புரிகையில் வெளியே வந்துவிடு என நம்மை ஆன்மிகக் கட்டுகளில் இருந்து விடுவித்தப் பெற்றோர் நம்மில் எத்தனைப் பேர்? இன்று சாமி இருக்கு இல்லை என்றுச் சொல்லி ஒரு போர் நடக்கிறது, காதல் சரி தவறு என்றுச் சொல்லி ஒரு போர் நடக்கிறது, சாதி வேண்டும் வேண்டாம் என்றுச் சொல்லி ஒரு போர் நடக்கிறது, இது நல்லது இது கெட்டது என்று ஒன்றையே இரண்டுபேரும் பேசும் அசட்டுத்தனமான விளம்பரத்தினூடே பல கொலைகளே நடக்கிறது. இதற்கெல்லாம் மத்தியில் எங்கே நாம் வாழ்கிறோம்? நானாக நான் இருக்கமுடிகிறதா? எல்லோரின் யோசனை எல்லோரின் அறிவு எல்லோரின் வலுக்கட்டாயம் எல்லோரின் விருப்பத்திற்கு மத்தியில்தான் தனது அடையாளத்தைத் தேடித் தேடியே நம் மொத்தப்பேரும் மடிந்துக்கொண்டிருக்கிறோம்.
இதற்கெல்லாம் ஒரு முடிவைத் தேடித்தான் இந்த மா. லட்சுமிநாதனைப் போல பல கவிஞர்கள் படைப்பாளிகள் இரவையும் பகலையும் தொலைத்துவிட்டு புத்தகத்தின் பின்னே அலைந்துக் கொண்டிருக்கிறார்கள்.
கவிஞர் மா. லட்சுமிநாதனை எனக்கு ஏறத்தாழ பத்தாண்டுகளுக்கு மேலாக தெரியும். குழந்தை மனசு. பிறருக்காக வாடும், பிறரின் நன்மைக்கு ஏங்கும் குணத்தைக் கொண்டவர். “எல்லாரும் நல்லா இருக்கனுங்க, எல்லாரும் நல்லா வரணும், யாருக்கெல்லாம் முடியுதோ அவர்களெல்லாம் பிறருக்கு உதவ தானாவே முன்வரணும்” என்பார் அடிக்கடி. தன் பிள்ளைகள், மனைவி, பெற்றோர், நண்பர்கள், இந்த தேசமென எல்லோர் மீதும் அலாதியான பிரியத்தை சமமாகக் கொண்டவர். அவருக்கு எனது வாழ்த்து.
இந்த “சிறகடிக்க ஆசை” எனும் எளியச் சொற்களால் ஆன வலிமையான பல எண்ணக் குவியல்களின் வழியே, ஒரு படைப்பாளியாக அவரைச் சந்திப்பதில் பெருமைக் கொள்கிறேன். நீங்களும் அதே பெருமையோடு இந்த புத்தகத்தை படித்துவிட்டு மூடிவைப்பீர்கள் எனும் நம்பிக்கையோடு உங்களை வாசிக்க வரவேற்று நான் விடைகொள்கிறேன். வாழ்க கவிஞர். மா. லட்சுமி நாதன்.
பேரன்புடன்..
வித்யாசாகர்
a good vimarsanam… vidhya….
yur betti in our ivel is very good and thotprovoking.
yogiyar
வெளிவந்து விட்டது.. வந்தே விட்டது!!..
My DEar FRiends!Please. BUY my latest Suya MunnerRa nool called
உங்கள் தேகமும் யோகாவும், ‘நிச்சயம்” வெற்றிபெறும் வழிகளும்..
…………..( சுயமுன்னேற்ற நூல்)-
………………………**கவியோகி வேதம்** published by Sree Jaisankar
MBA,..
கடலங்குடி பப்ளிகேஷன்ஸ், 38, Natesan St, தி.நகர்,சென்னை-17-
விலை ரூ 90+ கூரியர்20 ஆக 110 எம் நண்பர்க்கு மட்டும்(கழிவு- போக)
ph.. 044-24343406( ஆன்மிகப் பரவச நடை! வாங்கிப் பயன் அடைக-
அவரிடம் நீவிர் எம் நண்பர் என்க!)_
****************************************************************
Kaviyogi vedham,
President, Sree Lahari Babaji Yogasram,
2/682, 10th Cross st, Renga Reddy Garden,
NEELANKARAI, Chennai-600115
Cel no-09500088528
.
PL. visit my blog(for my poems etc)at http;//kaviyogi-vedham.blogspot.com/
2016-10-02 16:51 GMT+05:30 வித்யாசாகரின் எழுத்துப் பயணம் :
> வித்யாசாகர் posted: “இரசிக்கமுடியும் படித்து உணருங்கள்.. வானத்தில்
> பறக்கும் பறவையொன்று என்னென்ன எண்ணங்களைச் சுமந்துக்கொண்டு பறக்குமோ,
> யார்யாரைத் தேடிச் சுற்றுமோ தெரியாது. ஆயினும் ஒவ்வொரு பறவையும் தனக்கான ஒரு
> விதையையேனும் இம்மண்ணில் தூவிவிட்டே போகுமென்பதில் நமக்கெல்லாம் ஒரு”
>
LikeLiked by 1 person
நன்றி ஐயா..
LikeLike