அன்பு தீயிட்டு எரி
சாதித் திமிர் பொசுங்கிப் போகட்டும்..
ஆசைத்தீயில் வெளிச்சம் சேமி
தற்கொலை தவிடுபொடியாகட்டும்..
நம்பிக்கை நெருப்பென்றாலும்
இறுக்கிப் பிடி
பயம் உதறு
மேல் கீழ் ஒடிந்து சரிசமமாகட்டும்..
புரியாதவருக்கும்
சேர்த்துக் காட்டுவது தான் அன்பு,
வாரி வாரிக் கொடு,
ஒழுங்கை அன்பு பார்த்துக்கொள்ளும்..
அன்பிற்கு ஏதுண்டு
பிணக்கு?
மீறி பிசகினால்
பிணங்கு..
அடித்தால் அடி
வெட்டினால் வெட்டு
தடுப்பதற்கு பொறு
அதற்காக அடிக்கும்வரை அடங்காதே,
கத்தியெடுத்தால்
கோடரி தூக்கு,
வெட்ட நினைத்தால்
வேங்கைபோல் சீறி நில்;
அன்பு செய்வதற்கு எதிரே நிற்பவர்
எவரானாலென்ன
எதிர்த்து கேள்; கத்து; கதறு
காட்டுமிராண்டி போல் ஆடு; மிரட்டு;
உன் பாட்டன் முப்பாட்டன்
செய்ததை நீயும் செய்..
உன்னை விரும்பிய
அவளையோ,
அவனையோ மட்டும்
விட்டுவிடாதே;
அது நொடியிலும் கொல்லும் மரணம்..
நொடிக்கும் நொடி
நினைவில் வலிக்கும் வலி..
காதல்; செய்வது சுலபம்
மறப்பது கடினம் என்றெண்ணுகிறாய்
அதுதான் தவறு..
இனி, செய்வதை கடினமாக்கு
சூழல் உணர்
வாழ்க்கைக்கு வசப்படுமா பார்
வசந்தமா அது சிந்தி
மறப்பதற்கு அவசியம் தவிர்
சேர்வதை மட்டுமே காதலாக்கு..
காதலி..
காதலுக்குத்தான்
கவிதை வரும்..
காதலுக்குத்தான்
காதலி வருவாள்..
காதலுக்கு மட்டுமே இவ்வுகலம்
காத்துக்கிடக்கிறது..
காதலி!!
—————————————————————
வித்யாசாகர்