(நேர்காணல் – திரு. சந்தர் சுப்பிரமணியன், ஆசிரியர், இலக்கியவேல், தமிழகம்)
1) குவைத்தில் இருந்து பணியாற்றும் நீங்கள், தமிழ்மொழியின் மீது அளவற்ற காதல் கொண்டுள்ளதற்கான பின்புலம் என்ன?
என் தாய்மண் மீதான அக்கறை.
மொழி எனது களம், அது போராடுவதற்கு இடம் தருகிறது. மொழி எனது ஆயுதம், எனது கோபத்தை எழுத்தாக்கப் பயன்படுகிறது. மொழி எனது யாவும், அது எனை தான் வாழ்ந்தக் காலத்திலிருந்து வந்தவனாக்குகிறது. மொழி எனது தமிழ், அது தன்னைத்தானே ஈர்த்துக் கொள்கிறது.
ஆங்காங்கே இரண்டாம்பட்சம் ஆகிப்போன என் மக்களை எண்ணி எண்ணி நோவதன் பொருட்டு; உலகின் எம்மூலையில் இருந்தாலும் தமிழர்க்கு மொழி குறித்தும் இனம் குறித்தும் விடுதலை பற்றியுமொரு உறுத்தல் ஈர்ப்பு இருந்துக்கொண்டேதான் இருக்கிறதென்பதை எனது வாழ்பனுபவமாக உணர்கிறேன்.
2) பொதுவாக உங்கள் படைப்புகளில் சமூகச் சிந்தனைகள் வெகுவாக காணப்படுகின்றன. இதற்கான காரணம் நீங்கள் வளர்ந்த சூழலில் கண்ட காட்சிகளின் தாக்கமா அல்லது, இலட்சிய உலகைக் காணவிழையும் இலக்கியவாதியின் நோக்கா?
லட்சியம் என்று பெரிதாய் ஒன்றுமில்லை. ஆயினும் என் மக்கள் விடுதலைக்கான வலி, எனது மண்ணின் சமத்துவத்திற்கான சமர், என் வழித்தடத்திலாவது உள்ள தூசுதனை கலைந்துபோகும் முயற்சியில்’ செய்வதை சமூகம் குறித்து சிந்தித்து செய்யவேண்டியுள்ளது.
யாரோ செய்தார் யாரோ செய்தார் என்பதை விட தவறுகளை தான் செய்ததாய் ஏற்று திருத்திக்கொள்ளவும், நல்லதை நானே செய்ய முன்வருவேன் எனும் முன்னெடுப்பிலும் மட்டுமே நான் முதல் ஆதாரமாக நின்று, உடன் வருவோரையும் நன்னிலம் நோக்கித் திருப்ப எண்ணுகிறேன்.
இப்படி வாழ் என்றுச் சொல்லிச் செல்வதைவிட வாழ்வதன் நோக்கில் உலகை மாற்ற விழைகிறேன். என்னைப் பொருத்தவரை சமூக பொதுநல அக்கறை என்பது படைப்பாளிக்கு மட்டுமே வேண்டிய ஒன்றாக இல்லாமல் ஒவ்வொரு மனிதருக்கும் உள்ளதொரு குணமாக மாறவேண்டும். தெருவில் போகும் ஒரு பிச்சைக்காரனுக்கு நானும் பொறுப்பென்று அவரவர் அவரவராக உணரவேண்டும். அன்று மனிதம் தானே செழித்தோங்கும்.
3) வாழ்க்கையின் அவலங்களை உங்களின் பல படைப்புகளில் மிக யதார்த்தமாகச் சித்தரிக்கும் நீங்கள், அத்தகைய ஒவ்வொரு நிகழ்வுக்கும் தீர்வையும் வைக்கின்றீர்களா? ஆம் எனில், அத்தீர்வு சாத்தியமா?
எனது படைப்புகளை தொடர்ந்து வாசிப்போருக்கு உணர இயலும். பொதுவாக நான் எந்த தீர்வையும் சொல்ல முயல்வதில்லை. எனக்கு தெரிந்த இன்றைய சரி நாளை தவறாக மாறலாம். எனக்கு இரண்டுத் தேக்கரண்டி சக்கரை ஒரு குவளை தேநீருக்கு போதுமெனில் மற்றவருக்கு மூன்று தேக்கரண்டி தேவைப்படுகிறது. இன்னும் சிலருக்கு ஒன்று கூட போதும், சிலருக்கு சர்க்கரையே இல்லாது இருந்தால் சரி என்கிறார்கள். எனில் இந்த சரி தவறு விகிதாச்சாரமே அவரவர் சுவை உணர்வு அறிவுக்கு ஏற்றாற்போல் மாறிக்கொள்கையில் எது சரி எது தவறு என்று தீர்மானிக்க எவரால் முடியும்?
இயற்கையில் நேராக முளைத்த முடிதான், சாய்வாக வளைத்து அழுத்தி வாரிவிட்டு அதை நாம் நேர் என்கிறோம். தலை வாரியவன் ஒழுக்கமானவன் இல்லாதவன் ஒழுக்கமற்றவன் எனில் யாரிங்கே குற்றவாளி? எல்லாம் காலத்தின் கைக்குள்ளே அடங்கிப்போகும் வாழ்க்கையிது. இந்த காலம்தான் நமை அவ்வப்பொழுது அதன் இயல்பு வடிவத்திற்கு ஏற்ப நமை மாற்றியும்விடுகிறது.
எனவே இங்கே சிந்தனையைத் தூண்டவும், வாழ்வின் அனுபவங்களை ஆதாரமாக வைக்கவும், சமகாலத்தை இதுவென்று பதிந்துச் செல்லவுமே இலக்கியத்தில் இடம் வேண்டியுள்ளது. அதையே நானும் செய்கிறேன். எழுதுவது நானாயினும் சரி அது யாராயினும் சரி சிந்திப்பது வாசிப்பவராக இருத்தல் வேண்டும். எனவே நல்ல சிந்தனையை படிப்பவருக்கு தரும் எழுத்தாகவே எனது எழுத்தும் இருக்கவேண்டும் என்பதே எனது எண்ணமும். ஆயினும் சாதியில் மேல்கீழ், விதவையின் மறுமணம், இறை தத்துவம், எண்ண வலிமைப் பயிற்சி என்றெல்லாம் வருகையில் சிலநேரம் அதனதன் முக்கியத்துவம் கருதி தீர்வினைச் சொல்லவும் கட்டாயம் வந்துவிடுகிறது.
4) புதுக்கவிதையில் பல்வேறு நூல்களை படைத்துள்ள நீங்கள், உங்களுடைய முன்னோடியாக யாரைப் பின்பற்றுகிறீர்கள்? அவருடைய தாக்கம் உங்கள் படைப்புகளில் எவ்வாறு பிரதிபலிக்கிறது?
எனக்கு முன்னோடி எனில் அது நான் வாழும் வாழ்க்கையும், அன்றாடம் காணும் எனது சமகால மனிதர்களும், விலங்குகளும், பூவும் மரமும் மண்ணும் மழையும் காற்றும் வானமும் நட்சத்திரங்களும் எனலாம்.
இளமைக்கால வயதில் விவேகனந்தர் சாண்டில்யன், பாலகுமாரன், சுஜாதா, தேவிபாலா, ராஜேஷ்குமார், ரமணிச்சந்திரன், வைரமுத்து என இன்றும் நிலைத்திருக்கும் சில ஜாம்பவான்களின் ஒருசில படைப்புக்களும், ஆன்மிக கதைகளும், ஆனந்தவிகடன் குங்குமம் ராணி குமுதம் போன்ற வார இதழ்களும், பல திரைப்படங்களின் வழியேவும் வாழ்வுதனைப் படித்ததுண்டு. அவைகளோடுச் சேர்ந்த அன்றன்றைய ஆதார நிகழ்வுகளையே எனது படைப்புக்களுக்குத் தேவையான ஆக்க விதைகளாகவும் மாற்றிக்கொள்கிறேன்.
எனவே எனக்கு முன்னோடி எனில் எனக்குமுன் வீசும் காற்றும், முளைவிடும் ஒரு வித்தும், கதறியழும் குழந்தையின் பசியும், மழை கசியும் கூரைவீடும், யாரோ ஒரு தூரத்து நண்பன் எழுதும் கவிதையும் கூட எனக்கு முன்னோடி தான்..
5) குவைத்தில் அமர்ந்துகொண்டு இந்தியச்சூழலில் இந்தியாவில் நடக்கும் நிகழ்வுகளை எழுதுவது எப்படிச் சாத்தியமாகிறது?
இரத்தம் குழையும் உடம்பிற்குள் பாய்வது எனது தாயகத்திலுள்ள உறவுகளின் வலியும் சந்தோசமும் தானே? உலகின் எம்மூலையில் இருந்தாலும் வாழ்வின் அர்த்தத்தை ஊருக்குள் தானே வைத்திருக்கிறோம்? நான் வெற்றிக்கொண்டால் பேசவும், துவண்டு விழுகையில் வார்த்தையினால் அணைத்துக்கொள்ளவும் எனது தாயும் தாய்மண்ணும் எனக்கு ஒன்று தானே? எந்த இடத்திலிருந்து துவங்கினோமோ அந்த இடத்தை நோக்கித் தானே பயணப்பட்டுக் கொண்டுள்ளோம்? பிறகு எனது எழுத்துக்களுக்கு மட்டும் விதிவிலக்கென்ன?
வெறும் எனக்கு மட்டும் பசி எனில் அங்கேயே ஒரு இட்டிலித்துண்டையோ அல்லது அரைத்தட்டுச் சோற்றையோ என்னால் இலகுவாக சம்பாதித்துக்கொண்டிருக்க முடியும். ஆனால் எனது பசி பலருக்கான பசி. எனது வயிறு பலர் உண்கையில் நிறைகிறது. அதுபோல்தான் எனது எழுத்துக்களும் எப்பொழுதும் முதலில் தாய்மண்ணையே தாங்கிநிற்கிறது.
6) வெகுவாக நீங்கள் கவிதைகள், கதைகள், கட்டுரைகள் ஆகையன குறித்த படைப்புகளைப் படைத்துள்ளீர்கள். இன்றுவரை எவ்வளவு படைப்புகள் பதிப்பாகியுள்ளன? அடுத்து வெளிவரும் படைப்புகள் எத்தகையன?
ஏராளமான படைப்புகள் புத்தகமாக்க உள்ளது. இருபத்தொன்று முடிந்தும் இன்னும் இருபதுக்கும் மேல் அச்சிடவும் உள்ளன. பிஞ்சுப்பூ கண்ணழகே எனும் மகள் அப்பா பற்றிய கவிதைகளும், நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும் காதல் கவிதைகளும், அம்மையெனும் தூரிகையே, கல்லும் கடவுளும், காற்றாடி விட்ட காலம், பறந்து போ வெள்ளைப்புறா, சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள், நீயே முதலெழுத்து, போன்ற சமூகக் கவிதைகளும், ஞானமடா நீயெனக்கு எனும் அப்பா மகன் பற்றிய கவிதைகளும், வாழ்த்துப் பா, சிறுவர் பாடல்கள், கண்ணீர் வற்றாத காயங்கள் எனும் ஈழத்துக் கவிதையுமென நிறைய படைப்புகள் அச்சு வேலைகள் நடந்துக் கொண்டுள்ளது.
அதின்றி திரைமொழி எனும் திரைப்பார்வை. மூன்று மணிநேரம் செலவிட்டு நாம் பார்க்கும் திரைப் படத்தினை நான் பார்த்த விதம். பொழுதைப் போக்கும் படங்களாக அல்லாமல் பொழுதினை ஆக்கும் திரைப்படங்களாக அவைகளை நாம் எவ்வாறு மாற்றிப் பார்க்கலாம் என ஒரு கட்டுரைத் தொகுப்பும். மீனும் மீனும் பேசிக்கொண்டன எனும் உயிர் தொடர்பு பற்றி பேசும் தொடர்க் கட்டுரைத் தொகுப்பும், சிறுகதை தொகுதி மற்றும் காற்றின் ஓசை எனும் ஒரு நீண்ட நன்னடத்தைகளைப் பேசத்தக்கதொரு நாவலும், சில குறுநாவல்களுமென வீட்டில் விற்காமல் அடுக்கியுள்ள புத்தகங்கள் போக எனது வலைதளத்துள் அடுக்கி வைத்துள்ள வெளிவராத படைப்புகள் ஏராளமுண்டு.
7) இலங்கையைக் குறித்த உங்கள் படைப்புகள் பலவுள்ளன. உலகளாவிய நிலையில் உங்கள் படைப்புகளை படைக்கவும், அவற்றைக் கொண்டு சேர்க்கவும் எப்படிச் சாத்தியமாகிறது?
பார்க்க பார்க்க வலிக்கிறது. வலிக்க வலிக்கப் பீறிடும் உணர்வுகள் கவிதைகளும் கதைகளுமாகின்றன. மொத்தத்தில் அக்கறை, என் சமுதாயத்தின் மீதும் மக்களின் மீதும் மண் மீதும் கொண்டுள்ள அக்கறையே இரைதேடி உயிர்வாழும் பறவையைப் போல எனை கவிதை கதையெனவும் தேடியலைய வைக்கிறது.
குறிப்பாக ஈழத்தில் வாழும் தொப்புள்கொடி உறவுகளுக்கு நேரில் சென்று உதவயியலாவிட்டாலும் எழுத்தாகவேனும் எழுந்து நின்று தோல் தருவோமே எனும் பதைபதைப்பில் வருவதே ஈழத்துப் படைப்புக்களுக்கான கரணம். பிறமொழி காரர்களின் இருட்டடிப்பில் தான் இன்று தமிழர்நிலை எங்கு காணினும் இரண்டாம் பட்சத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. பிறகு நாமும் நம்முறவுகளை, அவர்களின் வாழ்வுநிலையை மறந்து ஒரு பிடி சோறள்ளித் தின்போமெனில் நன்றாக உறங்குவோமெனில் அதற்கு முன் நம் மனிதத்தையும் நாம் தொலைத்தே நிற்கிறோம் என்றர்த்தம்.
8) உங்களுடைய படைப்புகளில் பெரும்பான்மையானவை உங்கள் சொந்த பதிப்பகமான முகிலின் வெளியீடுகள்தாம். வணிகரீதியாக எப்படி நிர்வகிக்கிறீர்கள்?
இப்படி வேண்டுமே என்றொரு குருவி சிறுசிறு குச்சிகளைப் பொறுக்கி அழகானதொரு கூடுதனைப் பின்னுவதைப்போல் நானும் எனது வியர்வைகளை சேகரித்து சேகரித்து புத்தகமாக்கிக் கொண்டுள்ளேன்.
ஆயிரம் புத்தகம் அச்சடித்தால் அதில் பத்து புத்தகங்களைப் பெற்றுக்கொண்டு ஹிக்கிம்பாதம்ஸ் மட்டும் தவறாமல் பணம் கொடுத்து உதவுகிறார்கள். மீதி தொள்ளாயிரத்து தொண்ணூறு புத்தகங்களும் எனது உழைப்பை தூக்கத்தை இயலாமையைப் பார்த்து சிரித்தவாறு பரண் தனில் கிடக்கிறது. அதில் பாதி சிலவேளை சில கடைகளில் கணக்கின்றி கொடுக்கப்பட்டுள்ளது. காசு மட்டும் இதுவரை தவறாமல் தர மறுக்கப் பட்டுள்ளது.
9) உங்களுடைய படைப்புகளை ஆய்வு செய்து சில மாணவர்கள் தங்கள் முதுமேநிலைப் பட்டங்களைப் பெற்றுள்ளார்கள். அதுகுறித்து சில தகவல்கள்?
புத்தகங்கள் விற்காவிட்டாலென்ன, என் அறிவும் உழைப்பும் அனுபவமும் இன்றைய மாணவச் செல்வங்களுக்கு உதவி இருக்கிறதே அது போதுமென்று நிறைவு கொண்ட ஒரு நற்செயல் அது நிகழ்ந்தது, நண்பர் திரு. கவியருவி இரமேசு என்பவர் மூலம்.
அவருடைய ஏற்பாட்டின் மூலம் திருவள்ளுவர் பல்கலைக் கழகத்தில் எனது பல நூல்கள் ஆய்விற்கு எடுத்துக்கொள்ளப் பட்டு “வித்யாசாகரின் எழுத்துக்களில் பெண்ணியம்” என்றும் “கனவுத்தொட்டில் நாவல் ஓர் ஆய்வு” என்றும் இரு ஆய்வுகள் நடந்து செல்வி ரா. மகாலட்சுமி மற்றும் திருமதி அ. கீதா போன்றோர் பட்டங்களைப் பெற்றனர்.
10) உங்கள் படைப்புகளுக்காக உலக அளவில் பல பட்டங்களையும், விருதுகளையும் பெற்றுள்ளீர்கள். அதுகுறித்த உங்கள் கருத்து?
லண்டன் தமிழ் வானொலி, ஆஸ்திரேலிய தமிழ் வானொலி, குளோபல் தமிழ் தொலைக்காட்சி மையம், இலங்கை தீபம் தொலைக்காட்சி போன்றோர் எனது படைப்புகள் குறித்து அறிமுகம் தந்தும் விருதுகள் பற்றி பேசியும் நேர்க்காணல் கண்டும் பெருமைச் செய்துள்ளனர்.
அதின்றி, தமிழ்த்தாய் அறக்கட்டளை அமைப்பு 2010இல் உலக தமிழ் கவிதை மற்றும் சிறுகதை அமைப்பும் சேர்ந்து ஒரு உலக மாநாடு ஒன்றை நடத்தியது. அதில் ஐயா திரு வா. மு. சேதுராமன் அவர்களின் திருக்கரங்களால் கொடுக்க அம்மா அங்கே நேரிடையாக எனக்கு பதிலாகச் சென்று ஐந்து விருதுகளை இலக்கியச்செம்மல் இரண்டு, தமிழ்மாமணி, கவிமாமணி என எல்லோர் முன்னிலையிலும் வைத்துக் கொடுத்து பெருமையுற செய்தது.
அதுபோல் குவைத்தில் நடந்த பெருவிழா ஒன்றில் நமது இந்தியத் தூதர் அவர்களின் திருக்கரங்களால் ‘தமிழோசை கவிஞர்கள் சங்கம்’ திரு. தம்பி ராமையா மற்றும் கதாநாயகன் விமல் போன்றோரின் முன்வைத்து பன்னூற்பாவலர் எனும் பட்டத்தைக் கொடுத்து பெருமைபடுத்தியது.
அதுபோல் நீதியின் குரல் மாத இதழ் வழங்கிய “வெண்மனச் செம்மல் வித்யாசாகர்” விருது வழங்கி கௌரவித்தது. அடுத்து கலைமகள் இலக்கிய இதழ் நடத்திய ராமரத்னம் குறுநாவல் போட்டியில் முதல் பரிசு, மற்றும் சென்ற ஆண்டு 2015-ற்கான சிறந்த படைப்பாளி விருது மற்றும் பல பரிசுகளும் பாராட்டுகளுமென மனதைச் சற்று நிறைத்து ஒரு நல்ல படைப்பாளி எனும் நம்பிக்கையை இச்சமூகம் அவ்வப்பொழுது சற்றேனும் கொடுப்பதுண்டு.
11) அண்மையில் உங்கள் படைப்பாற்றலுக்கு அணிசெய்யும் வகையில் உங்களுக்கு டாக்டட் பட்டம் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதுகுறித்த உங்கள் சிந்தனைகள்?
ஆம் அழைத்திருந்தார்கள். அறிவித்திருந்தார்கள். அமெரிக்க உலகத்தமிழ் பல்கலைக் கழகத்தின் சார்பில் கௌரவ முனைவர் (டாக்டர்) பட்டம் தருவதாகச் சொன்னார்கள். நானும் விடாது எனக்கெதற்கு டாக்டர் பட்டமெல்லாம், நானென்ன அப்படிச் செய்துவிட்டேன் என்றேன், அதற்கு அவர்கள் “இதுவரை நாற்பது வரை புத்தகங்கள் எழுதியுள்ளதைப் பாராட்டியும், அதிலும் அதை வெளிநாட்டில் வசித்துக்கொண்டு தமிழ்ப்பணி செய்தமையாலும், சிறந்த படைப்புக்களைத் தந்துள்ளதாகவும், ஆய்வுகள் மேற்கொண்டதன் அடிப்படையில் மொழி வளத்திற்கு உதவியதாகவும் ஒவ்வொரு நாட்டிலிருந்து தேர்வு செய்வதைப்போல் இம்முறை குவைத் நாட்டிலிருந்து ஒரு படைப்பாளியாக எனை தேர்ந்தெடுத்ததாக விவரம் சொன்னார்கள். ஆயினும் விழா நேரம் வேலையின் காரணமாக விடுப்பு கிடைக்காமல் செல்ல மறுத்துவிட்டேன். ஒருவேளை மீண்டும் வரும் வருடத்தில் அதே டாக்டர் பட்டம் மீண்டும் கிடைக்கப்பெறலாம்.
12) இலக்கியம் தவிர நீங்கள் பல்வேறு சமூகச் சேவைகளையும் செய்துவருகிறீர்கள். அதற்குப் பக்கபலமாக உங்களுக்கு உங்கள் குடும்பத்தாரும் துணைசெய்கின்றனரா?
நிச்சயமாக. இறைவன் அளித்த வரங்கள் எனது உறவுகள் அனைத்தும். நட்பாயினும் சரி, அம்மா அண்ணி அண்ணன் தம்பிகள் துணைவியர் யாராயினும் எங்களுக்குள் ஒருவரைப் பற்றிய ஒருவருக்கான புரிதலும் அதேநேரம் சமூகம் குறித்து உதவுவதற்கான சிந்தனை பல்வேறு வடிவில் அனைவருக்குமே உண்டு.
குறிப்பாக எனது மனைவியைப் பற்றிச் சொல்லுகையில் “பத்து வருடங்கள் கடந்து திரும்பிப் பார்க்கையில் நான் அவளாகவும் அவள் நானாகவும் மாறியிருந்தோம்” என்றேன் எங்களின் திருமண நினைவுநாளின்போது. அங்ஙனம் சேவைகள் குறித்தோ எழுத்து குறித்தோ எனது செயல்பாடுகளிலும் சரி அவருடைய ஒப்புதலிலும் சரி எங்களுக்குள் வேறுபாடெல்லாம் இருந்ததேயில்லை.
பொதுவாகவே நாங்கள் நிறைய பேசிக் கொள்வதுண்டு. கண்ணாடிக்குள் அடைப்பட்ட நீரினிடையே எந்த ஒரு பிரிவை இது இந்த நீர் இது இந்த நீர் என்று பார்த்திர இயலாதோ அதுபோல் எங்களுக்குள்ளும் எந்தவொரு பிரிவுணர்வோ மாற்றத்தையோ பார்த்திட இயலாது. மொத்தத்தில் அவள் எனக்கு மூத்த மகள்; அவளுக்கு நானும் அதுபோலவே.
13) இவ்வளவு சிறிய வயதில் இத்தனைப் படைப்புகளைப் படைத்துள்ள நீங்கள், இலக்கியத்தில் இன்னும் என்னவகையான சாதனைகளைச் செய்யவேண்டும் என்று திட்டமிட்டுள்ளீர்கள்?
இருபத்திநான்கு வருடத்திற்கு முன் பத்தாம் வகுப்பு படித்துவிட்டு வெளியே வந்தேன். எனது முதல் சம்பளம் எனது பதினான்கு வயதில் நான் வாங்கியது பத்து ரூபாய். சிறு வயதில் தீக்குச்சி அடுக்கி, ஊதுபத்தி அடுக்கி வாசனை திரவியம் தோய்த்து விளையாட்டாக சம்பாதித்தது பதினைந்து இருபது இருபத்தைந்து காசுகள். அப்போது எனது பெயர் வெங்கடாசலம் மட்டும் தான்.
அதே வெங்கடாசலம் வித்யசாகராகி புத்தகங்கள் பல எழுதி, ஆய்விற்கு உதவி, பிறந்தநாளிற்கு 2010-தில் முதல் தமிழ்ப் பாடல் எழுதி, விடுதலைக்கும் ஒற்றுமைக்கும் குழந்தைப் படிப்பிற்கும் பாடல்களை இசையோடு தனது முகில் (கிரியேசன்) படைப்பகம் மூலம் தயாரித்து வெளியிட்டு, முகில் பதிப்பகம் துவங்கி பிறரது புத்தகங்களையும் அச்சிட்டு தந்து அதோடு கூடவே தனது படிப்பையும் தொடர்ந்து முதுகலைப் பொறியியல் பட்டம் பெற்று, உயர் ஆய்வாளருக்கும் படித்து உலகளாவிய பதிவுசெய்யப்பட்டவர்களில் ஒருவராகி, தர மேலாண்மைத் துறையில் மேலாளராகி இன்று மாதத்திற்கு பல லட்சங்களை ஈட்டி அதில் பிறருக்கும் உதவ முடியுமெனில்; எனக்கும் கீழுள்ளோரை என்னளவிற்கேனும் கொண்டுவரும் முயற்சியே எனது எழுத்திற்குமான லட்சியமாகும்.
14) இலக்கியவேல் வாயிலாக வாசகர்களுக்கு நீங்கள் சொல்லவிழையும் செய்தி ஏதேனும் உள்ளதா?
உண்மயா இருக்க முயற்சிக்கவேண்டும். உண்மைதான் நமக்கான ஒளிவட்டம். இயல்புநிலை புரிய எந்தவொரு சூழலையும் அணுகவேண்டும். பிறர் மனசு பிற உயிர்கள் நோகாது வாழவேண்டும். பிறருக்கு இயன்றவரை உதவவேண்டும். எல்லாம் நாம் ஒன்றென்று அறிதல் வேண்டும். எல்லோரும் இயற்கையின் பிள்ளைகள் எனவே நமக்கு மதம் என்பது ஒரு பயிற்சி. கடவுள் புரியக் கற்கும் பயிற்சி மதம் சடங்குகள் அத்தனையும். எனவே மதத்திற்குள் சண்டையோ பிரிவினையோ மனிதர்களுக்குள் ஏற்றத் தாழ்வோ எல்லாம் பார்க்கக் கூடாது. மேல் கீழ் வருமாறு நம் வாழ்க்கை அமைந்திடக் கூடாது என்பதிலெல்லாம் எச்சரிக்கை வேண்டும். எல்லாம் உயிர்க்கும் பயம் உண்டு பசி உண்டு கோபம் உண்டு என்பது புரிகையில் உள்ளத்துள் எழும் சமநிலை உணர்வு எல்லோருக்கும் இருத்தல் வேண்டும். மன்னிப்பும் மனது நிரம்பிய அன்பும் கனிவு கொண்ட பார்வையும் தெளிவு கொண்ட நடையும் கம்பீரமும் வேண்டும். தவறைக் கண்டால் எவர்செயினும் கண்டிக்கும் வீரமும் திருத்தும் அறிவு பலமும் உடல் வலிமையையும் மன திடமும் ஒருங்கே எல்லோருக்கும் இருக்குமாறு நாம் எல்லோரும் வாழவேண்டும்.
இந்த வான் மண் காற்று போல நீர் போல நிலவு சூரியனைப் போல என்று நான் உனக்கும் நீ எனக்கும் பொதுவாய் அன்புற்று அமைகிறோமோ அன்றே அவசியமற்றுப் போகும் பாதுகாப்பு ஏவுகணைகளும் போர்க்களங்களும். எனவே உள்ளத்து அன்பை கையிலேந்தி எல்லோருக்கும் காட்டுங்கள். இயல்பாய் நிறைவாய் எல்லோரும் வாழட்டும். எங்கும் அன்பும் அமைதியும் நிலவட்டும். எம் மண்ணிலிருந்து ஒரு நன்னிலத்திற்கான அடையாளம் நீண்டு பரவி உலமெங்கும் பரவட்டும். பரவட்டும்.
இலக்கியவேலிற்கு நன்றி. ஆசிரியருக்கு நன்றி. வாசக பெருமக்களுக்கு நன்றி. வணக்கம்.
வித்யாசாகர்