உங்களுக்கு மழை வேறு; எங்களுக்கு வேறு..

 

 

 

 

 

 

 

 

தோ இந்த மழைத்துளிகளில்
சொட்டுகிறது அந்நாட்களின் நினைவு..
மணற்பூக்களும் செம்மண் ஆறுகளும் ஒடி
பனைமரக் காடுகளுக்கிடையே மழைத்தெருக்கள் மணத்த
சுகநாட்கள் அவை..

தெருவோரம் தேங்கிய வீடுகளைக்
கடந்துப்போகும் மழைநீரில்
எங்களுக்கான விடுமுறையைக் கப்பலாக்கித்தந்த
ஒரு நட்பினிய மழைக்காலமது..

ஒரு தும்பியின் வாலில் பூமிப்பந்தினைக் கட்டி
பட்டாம்பூச்சியின் இறக்கைகளில் வானத்தை போர்த்திவிட்டு
இந்த பிரபஞ்சத்தை கண்மூடி கண்மூடித் தாண்டிய
பொன்-நிலா பொழுதுகள் அவை..

கிளை ஒடிந்ததா மரத்தை வெட்டு
வீடு சாய்ந்ததா இடித்துப் போடென
போட்டவர்களுக்கு மத்தியில்;
மரத்தில் அதுவரை வாழ்ந்திருந்த குருவிக்கும்
வீட்டில் கூடுகட்டியிருந்த சிலந்திக்கும்
மாற்று யாசித்து மழையோடு அழுத மழைக்காலமது..

மழைக்கு வீடுபூட்டி
வெறும் சன்னலில் கைநீட்டி நனைந்தால்
மழையொரு மாயாஜாலம்தான்,
நிலா தெரியும் குடிசைகளுக்கு மழைவந்தால்
நொடிப்பொழுதும் ஈரத்தின் கனப்பொழுதாகும்,
மழைநீருக்குமுன் –
கண்ணீரில் வீடு குளமாகும்..

வீடெல்லாம் மழை மழைமழையாய்
பொழிந்துக்கொண்டிருக்கும்..
பொருக்கி வைத்திருந்த வரட்டியும் சுள்ளியும்
தங்கம் போல் விலையாகும்.,

பழையசாதம் கூட
எனக்குஉனக்கு என்று மாறும்,
போன மழைக்கு வாங்கிய மருந்தை
நினைவுற்று நினைவுற்று காய்ச்சலும்
தலைவலியும் மாறி மாறி தேடச் சொல்லும்.,

கத்தரிக்காய்க் கேட்டால் –
கடல்பாசிக்கு விலை சொல்வார்
தெருமுனைக் கடைக்காரர்.,

கொஞ்சம் உப்பு கடன் கேட்டால்
வாங்கிய சர்க்கரைக்கு கெடு கேட்பார்.,

அரிசி பருப்பு வாங்கவே
அண்டா குண்டானெல்லாம்
அடகுக்குப் போகும்,
கூரைவீட்டு ஏழைப் பணத்தை
வட்டிப்போட்டு உறிஞ்சும் அட்டைகள்
மழையிலின்னும் கூடிப்போகும்,
ஒரு காசு கூட்டிக் கேட்டால் – கேவலமாய்ப் பல்லிளிக்கும்
வீட்டில் வந்து –
அழகு முகத்தைக் கண்ணாடியில் பார்த்தால்
பித்தளைக் கம்பல் பீலா விடும்
சுருட்டுமுடி ச்சீ போ’ன்னும்
அவன் சிரித்த முகம் நினைவிற்கு வந்தால்
பளீரெனக் கண்ணாடி உடையும்,
பசியும் பரிகசிப்பும் மழைவந்தால் கூடவருமென்று
எல்லோருக்கும் எப்படிப் புரிய?

காலம் வேறு வேறாக மாறுகிறது
எது மாறினாலும் –
தனது கோர முகமாக
ஏழைகளை வைத்துக்கொள்கிறது,
ஏழைகளுக்கு முகம் கிடையாது
ஏழைகளுக்கு மழையின் இன்பம் கிடையாது
ஏழைகள் சரிசமமானவர்களில்லை இந்த சமூகத்துள்
ஏழைக்கு துணி கிழிந்திருந்தால் கேடில்லை
ஏழைக்கு நோய் வந்தால் உதவ நாதியில்லை
ஏழைக்கு கோபம் வரக்கூடாது
ஏழைக்கு பசியெடுக்கக் கூடாது
ஏழைக்கு ஆசை இருக்கக் கூடாது
பாவம்; காலத்திற்கு மிக ஏழ்மையான மனசு..,

மனசும் நனையும்
மழையில் மட்டுமே நனையும் மனிதர்களுக்கு மத்தியில்
எங்களின் மனசும் நனையும்
மழையில் மட்டுமல்ல –
மழைக்குப் பின்னும் இப்படி மழையை நினைத்தாலே
மனசு நனையும்,

மழையில் பால்வாங்கி
மழையில் முறுக்கு வாங்கி
மழையில் சூடாக சூப்பு வைத்து குடிப்பவர்களுக்கு
மழையில் பால் விற்றவர்
மழையில் முறுக்கு சுட்டு விற்பவர்
மழையில் கீரை சுமப்பவரைப் பற்றியெல்லாம்
நினைவு வரவேண்டும்
வராதவரை மனசுகள் இப்படிக் கண்ணீராலும் செந்நீராலும்
நனைந்துக்கொண்டு தானிருக்கும்.,

என்றாலும் மழை அழகு
மழையொரு வரம்
மழைக்கு பகைவர்களில்லை
மழை பாகுபாடு பார்ப்பதில்லை
மழைக்கு மேல்கீழ் கிடையாது
மழையை நாம் தான் வரமாகவும் சாபமாகவும்
மாற்றிக் கொள்கிறோம்.,

உண்மை தான்
உண்மையிருக்கட்டும் –

ஓட்டைக் குடிசைகளில்
எத்தனைத் தட்டிருக்கும், குவளை இருக்குமென
யாருக்கேனும் தெரியுமா?

சொட்டும் மழைத்துளியை
பிடித்து நிரப்பவேனும் வீட்டில்
பாத்திரங்கள் வேண்டுமென
வேகமாய் –
புயலோடுப் பெய்யும் மழைக்கு
ஒரு துளிகூட தெரிவதில்லைதான்..,

அவைகளைத் தாண்டியும் மழையழகு
மழைக்கு பேசத் தெரிந்தளவிற்கு
இசைக் கொட்டி பாடத் தெரிந்தளவிற்கு
எங்களைத் தெரியாது,
மழைக்கு நாங்கள் ஒதுங்கியது கிடையாது
ஒதுங்க எங்களுக்கு அன்றெல்லாம் –
சுடுகாடு மட்டுமே தயாராகயிருந்தது..

அன்றும் மழைவந்தால் மின்சாரம் போகும்
மழை மீண்டும் தொடர்ந்தால் மாடுகள் நோகும்
மறுநாளும் மழையென்றால் –
முந்தையநாள் சோறும்
முன்னிரவோடு தீர்ந்திருக்கும்,

பானையில் நீர் நிரப்பி வைக்கலாம் –
பசியில் வயிற்றைக் கட்டிவைப்பது பெரும்பாடு,
அடுப்பில் வெருந்தட்டை மூடலாம் –
அழும் பிள்ளைகளின் வாயை
அடியால் மூடுவது ஆக வேதனை,

சோறாவது சரி வயிற்றின் பாடு
இருட்டிற்கு ஒளி யார் தருவார் ?
குடிசைக்குள் பாம்பிருக்கா
நாய் நரி படுத்திருக்கா யாரறிவார்?

காற்றிற்கு விலைவைக்கும் தேசம்
தண்ணீரை விலையாக்கிய தேசம்
சோற்றிற்கும் சாதிப் பார்க்கும் தேசம்
இருட்டிற்கு ஒளி தருமா ?

சிமிலி விளக்கிற்கு மண்ணெண்ணையைத் தேடி
வீடு வீடாய் அலைவோம்..

இன்றும் சரி
அன்றும் சரி
பெரிய வீடுகளுக்கு
மழையொரு பொழுதுபோக்கு தான்,

மழைவந்தாலே மண் மணக்கிறதோ
இல்லையோ சமையலறை மணக்கும்
வீடு நனைகிறதோ இல்லையோ
நாக்கு எச்சிலில் நனையும்,

சில வீடுகளில் சூடாக பூரி போடுவார்கள்
தெருக்கடைகளில் பஜ்ஜி போடுவார்கள்
பணமிருப்பவர்களுக்கு எக்காலும்-
எல்லாமும் கிடைக்கும்,
நாங்கள் வெறும் மண்ணெண்னைக்கே
வீடுவீடாய் அலைந்துக் கொண்டிருப்போம்..,
வெளிச்சம் கிடைக்கவே
வெள்ளிக்கு தவமிருப்போம்..,

மழை அன்றும்
மழைமழையாய் மழைமழையாய்ப் பெய்யும்

இடிகூட இடிக்கும்
அந்த இடிகூட எங்கள் தலையில் விழாது..

மழைக்கென்ன தெரியும், மழையொரு
மனுநீதிச் சோழனைப்போல,
எல்லோருக்கும் சட்டம் ஒன்றுதான்
மழையும் ஒன்றுதான்
எல்லோருக்கும் ஒரு மழை தான்
அனால் அந்த மழைக்கு கீழேதான்; அன்றும் சரி
இன்றும் சரி
நனைபவர்கள் நாங்களாக மட்டுமே இருக்கிறோம்!!
—————————————————————
வித்யாசாகர்

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s