புத்தகத்துள் வைக்கும்
மயிலிறகினைப் போலவே
மனதிற்குள் வளர்ந்துவிட்ட
மாயர்கள் நாம்..
இந்த மண்ணிற்குத்தான்
மயிலிறகும் மறந்துப்போச்சு
மல்லிகை முற்றமும் பழசா ஆச்சு (?)
இனி காதலித்தாலென்ன
யாரை யார் மறந்தாலென்ன
நீ எல்லோரையும் போல் யாரையேனும்
மணந்துக்கொள்
நானும் எங்கேனும் நான்கு சுவற்றிற்குள்
யாரோடேனும் உயிர்த்திருப்பேன்
ஒருவேளை எப்பொழுதேனும்
உன்னை நினைத்துக்கொண்டால் நானும்
எனக்காக நீயும்
அழாமலாப் போவோம்?
அப்போதுச் சிந்தும் கண்ணீரால்
சபிக்கப்படட்டுமிந்த பூமி;
நீ போ
அதோ போகிறார்கள் பார், எத்தனையோப் பேர்
அவர்களோடு போ..
அவர்களும்
அப்படித்தான்;
நம்மில் நிறையப்பேர்
அப்படித்தான்;
கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள்!!
————————————————–
வித்யாசாகர்