1)
கொலுசு அணி
தாவணி உடுத்து
மலர்களைச் சூடிக்கொள்
மை பூசு
கூந்தலை அழகு செய்
முகத்தை பொலிவாக்கு
வண்ண ஆடைகளை மாற்றிக் கொண்டேயிரு
அல்லது மாற்றாதே, எது வேண்டுமோ செய்
அதற்கெல்லாம் முன் –
ஒரேயொரு முறை சிரித்துவிடு..
———————————
2)
ஒவ்வொருமுறை
உனக்காக நான் வந்து
உனைப்பார்க்க நிற்கையிலும்
எனக்காக நீ காத்திருந்துவிட்டுச் சென்ற
கண்ணீர்த்துளியின் ஈரம்
நீ நின்ற இடத்தில்
உனது பெயரையும் எழுதிவிட்டே செல்கிறது..
—————————————
3
உன் அழகு
என்னைப் பெரிதாய்ச் சீண்டுவதில்லை
ஆனால்
உண்மையைச் சொல்லவா ?
அதுதான்
உன்னழகே..
—————————————-
4
நீ சிரித்தால் தான்
பனி விழுகிறது
நீ சிரித்தால் தான்
நிலா காய்கிறது
நீ சிரித்தால் தான்
தென்றல் வீசுகிறது..
உண்மையில் –
நீ சிரித்தால் தான்
எனக்கிந்த உலகமே விடிகிறது..
—————————————-
5
அவள் மழையெனப்
பெய்பவள்
உயிர்வரை நனைக்கிறாள்..
நட்சத்திரங்களைத்
தின்றவள்
தூரத்திலேயே நிற்கிறாள்..
இருட்டில் அலைபவள்
இதயத்துள்
ஒளிர்கிறாள்..
மந்திரம் கற்றவள்
மௌனத்துள்
வாழ்கிறாள்..
சலங்கைகள் அணிந்தவள்
நினைவுகளால்
சப்தமிடுகிறாள்..
கண் நீருக்குள் திரிபவள்
நிழலை
உடுத்திக் கொள்கிறாள்..
நெருப்பில் சுடுகிறேன் அவளை
இப்படியொரு
கவிதையாக மட்டுமே முடிகிறாள்!!
—————————————
வித்யாசாகர்