வேலைக்காரன் (திரைவிமர்சனம்) வித்யாசாகர்!

முதன்முறையாக ஒரு திரைப்படத்தைப் பற்றி எழுத எனது கைகள் நடுங்குகிறது. சரியாக சொல்வேனா, இத்திரைப்படத்தின் மூலக்கருத்தை எனைப் படிப்போருக்கு புரியவைக்க இயலுமா, முழுமையாக நீங்கள் படிப்பீர்களா, படிக்கவைக்க வேண்டுமே, அதற்குத்தக எழுதவேண்டுமே.., எனும் பல பதபதைப்புதனை உள்ளுக்குள்ளே வைத்துக்கொண்டு தான் இவ்விமர்சனத்தை துவங்குகிறேன். இங்கே நான் கதைச் சொல்ல வரவில்லை, இந்தப் படம் நமக்கு என்னச்செய்ய விழைகிறது எனும் கேள்விக்கு பதில் சொல்ல முயற்சிக்கிறேன்.

கம்யுனிசம் என்றால் என்ன ? தந்தைப் பெரியார், டாக்டர் அம்பேத்கர், காரல் மார்க்ஸ் எழுதிய நள்ளிரவில் சுந்தந்திரத்தின் போதனை, மக்கள் அதிகாரம் என்பதன் சாரம் என இவ்வாறான இவையனைத்தையும் அதன் நிர்வாணத்தோடு வெளியெடுத்து எந்த ஒரு சார்பும் ஒட்டுதலுமின்றி அவர்கள் சமூக நோக்கமாக என்ன சொல்ல வந்தார்களோ அதை மட்டுமே நாம் புரிந்துக் கொள்ளவேண்டுமெனில்; உடனே சென்று இந்த “வேலைக்காரன்” திரைப்படத்தைப் பாருங்கள்.

ஒரு கிராமம் என்பது போல் ஒரு வெள்ளந்தியான பேட்டை, உள்ளே நுழைகையிலேயே மேலெழும் மண்வாசம் போன்றதொரு ஏழைகளின் வாசம், ஆங்காங்கே பொத்துப்போன ஓட்டு வீடுகளும், தளர்ந்து விழுந்த கூரையும், உடைந்துவிழுந்த சுவரும், மேலே சில நெகிழி யுரைப் போர்த்திய வீடுகளுமாய் குறுஞ்சந்துகளோடு வளைந்து வளைந்துப் போனால் ஒரு ஒதுக்குப்புறத்திலோ, அல்லது கூவம் ஆற்றிலோ, அல்லது கடற்கரை மணலிலோ அல்லது சென்னையின் மைய வீதிகளிலோ முடிவடையுமொரு குப்பமெனும் சிறுபகுதி. நம்முடைய ஒரு முதலாளியின் ஒற்றை பங்களா வீட்டின் மொத்த அளவு. அதில் பல குடும்பங்கள் இடுக்களோடும் பலச் சிக்கல்களோடும் வெறும் கூடாரங்களாக சிதறிக்கிடக்கும். அப்படிக் கிடக்கும் குப்பத்தைக் கண்டு, குடிசைகளைக் கண்டு என்றேனும் உங்களுக்கு வலித்ததுண்டா?

அவர்களுக்கான வாழ்வியலை, அங்கே மூக்கொழுகி சட்டையில்லாமல் இரட்டைக் குடுமி தலை களைந்து பழைய ரிப்பனைக் கட்டிக்கொண்டு அடிவயிற்றைக் காட்டியவாறு நிற்கும் ஒரு குழந்தையின் எதிர்காலத்தைப் பற்றி எப்பொழுதேனும் நீங்கள் சிந்தித்ததுண்டா?

அவர்கள் யார்? யாருக்காக அவர்கள் உழைக்கிறார்கள்? அவர்கள் மட்டும் அப்படி வாழ்வதன் குற்றம் யார்யாரைச் சாரும்? ஒருவர் பாஸ்புட் பிரியாணியையும், ஒருவர் பைவ்ஸ்டார் ஓட்டலிலும், உண்ணமுடிகையில் ஒருசிலர் மட்டும் பசியை சுகித்து தான் வாழவேண்டுமெனில் நாம் வாழ்க்கை சரியா? அதில் அறமுண்டா ?

அவர்களுக்கான கரிசனம் வேண்டாம் ஒரு சிறு அக்கறை மனதினுள்ளே இருந்ததுண்டா? இல்லையெனில் சென்று உடனே இந்த வேலைக்காரன் திரைப்படத்தைப் பாருங்கள். கெட்டியாக உரைக்கும். மனதை ஏழ்மை தைக்கும்.

படித்து படித்துச் சொல்கிறோம்; அரசியல் தவறு அரசியல்வாதிகள் சரியில்லை மக்களிடம் மாற்றம் வேண்டுமென்று. அந்த மாற்றமென்ன வனத்திலிருந்து விழுமா? நாம் மாறவேண்டாமா? குறைந்தபட்சம் நாம் மாறுவோம், மாறினால் என்னாகுமென்றாவது அவர்களுக்குக் காட்ட வேண்டாமா? அரசியல் வாதி என்றால் பயம், அதிகாரி என்றால் பயம், ரவுடி என்றால் பயம் எல்லாவற்றிற்கும் பயம் ஆனால் இவர்கள் எல்லோரின் ஒரேயொரு எதிர்பார்ப்பென்பது வெறும் பணம் மட்டுந்தானில்லையா? அதை நம்மிடம் நயவஞ்சகமாகப் பிடுங்கும், நம்மையே விற்பவராகவும் நம்மையே வாங்குபவராகவும் உருவாக்கி வைத்திருக்கும் இந்த முதலாளிகள் அதாவது கார்பரேட் எனும் கொடுங்கோலன் ஏற்படுத்தியுள்ள “லாபம் மட்டுமே நோக்கு” எனும் வியூகம் எல்லோரையும்விட, எல்லா பயங்கரவாதத்தையும் விட மிக பயங்கரமானதில்லையா?

அவனைத் தண்டித்தால் அவனால் குளிர்காயும் அரசியல் வாதிகளிலிருந்து கொலைகாரகள் அதிகாரிகள் என எல்லோருமே தன்னைத்தானே சரியாக்கிக்கொள்ள மாட்டார்களா?

இது தான் நான், இது தான் நாம் எனும் நமது நேர்த்தி யாரையும் எப்படிப்பட்டோரையும் அசைத்துப் பார்த்துவிடக்கூடிய வல்லமை மிக்கதெனில்; அதை வைத்து ஏன் முதலில் முதலாளித்துவத்தை சரிசெய்யக் கூடாது? மக்கள்சக்தியால் ஏற்படுமொரு புரட்சி ஏன் மக்களுக்கே உரிய நீதியை நிலைநாட்டக் கூடாது? நமக்கான அறத்தை ஏன் நாம் ஒவ்வொருவருமாக முதலில் கையிலெடுத்துகொண்டு நமக்காய் நாம் வாழப்பழகக் கூடாது? சக்கரத்தை முன்னால் சுழற்றினாலும் வண்டி ஓடும், பின்னால் சுழற்றினாலும் வண்டி ஓடுமென்று நாம் இதுவரை முதலாளிகளுக்கு புரியவைத்தே இல்லை.

அரிசயல் வாதி ஒரு போதைக்கு அடிமையைபோல. அவர்களுக்கு வெறும் பதவி வேண்டும், பணம் வேண்டும், புகழ் வேண்டும், அதற்காகத்தான் அவர்கள் எதையும் செய்ய துணிகின்றனர். ஆனால் அவர்களை அப்படிச் செய்யத் தூண்டிய ஆசை தான் இந்த முதலாளிகளின் முதலீடு. முதலீட்டை நாம் முதலில் உடைப்போம், அரசியல் வாதிகளின் ஆசையை நேர்வழியில் மாற்றுவோம், அதற்கு முதலில் இந்த கார்பரேட் கவர்ச்சியை அழிக்கவேண்டும்.

இது வாங்கினால் அது இலவசம், இதை தந்தால் அதை தருவேன் எனும் எண்ணத்தை நமக்குள் விதைத்தவனை நாம் இவனென்று அடையலாம் காணவேண்டும். எழுபது சதவிகிதம் தள்ளுபடி, ஐம்பது விழுக்காடு தள்ளுபடி, கழிவே இல்லாது தங்கம், சேவைக் கட்டணம் இலவசம் போன்ற ஜீவல்லரியில் துவங்கி, உணவகம், வீதி கடைகள், துணி கடை, ஷோ ரூம், சூப்பர் மார்கெட்,என எல்லா வியாபாரிகளின் கவர்ச்சி சொற்களை நாம் தூக்கி குப்பையில் எரிய வேண்டும். யாருமே இங்கு தர்ம ஸ்தாபனம் நடத்தவில்லை, லாபத்திற்குத்தான் உழைக்கிறார்கள் பிறகெப்படி இலவசமாய் ஒரு பொருள் கிடைக்கும் யோசிக்கவேண்டாமா? அப்படி தருவோர் ஒருவர் சென்று மாடிக்கு அருகில் இருக்கும் குடிசைக்கு கொடுங்கள், நாளை குடிசைகளும் கோபுரமாகும்.

ஒன்றைச் சொல்லவா, பசியையும் பட்டினியையும் எத்தனைப் பேர் அறிவீர்கள்? ஒன்றுமில்லா வீட்டில் வெறுமனே படுத்திருப்பது அல்ல பட்டினி, அது வறுமையின் ஆழப் பிரச்னை. பலகாரங்கள் சூழ்ந்த உலகிற்கு மத்தியில், வாசனை மிக்க உலகத்தாரோடு, அக்கம்பக்கத்து வீடுகளை தாண்டி மணக்கும் உணவுவிடுதிகளுக்கு மத்தியில் உலவும் பசியான வாழ்வாதாரம் இருக்கே அதை உணர்ந்ததுண்டா? சுண்டல் முறுக்கு கிழங்கு என்பதெல்லாம் போய் சிக்கன் பிங்கர் பக்கோடா, ஃபிக் ப்ரை, ஃபிஸ் நைன்ட்டி ஃபைவ் போடும் உலகம் தானில்லையா இது. இப்படிப்பட்ட உலகத்திற்கு மத்தியில் ஒரு நாள் ஒரு முழு நாள் யாரேனும் பட்டினி கிடந்து பாருங்கள், பசியின் வேதனை புரியும். அப்படிப்பட்ட பசியை ஒருவனால் டார்கெட் எனும் விசக்கோடு கிழித்து ஏழைகளின் ஆசையினை உழைப்பை வியர்வையை, நடுத்தர வர்க்கத்தாரின் கனவுகளை வியாபாரமாக மாற்றுவானெனில் அப்படிப்பட்ட சுரண்டலை, தந்திரத்தை வேசிதனம் என்போமா? அப்போதிங்கே அப்படிப்பட்டவர்களை அனுமதித்தது யார் குற்றம்? யாரின் குற்றமுமல்ல, நமது ஒட்டுமொத்த தொழிலாளர்களின் விசுவாசம் என்கிறதிந்த வேலைக்காரன் திரைப்படம்.

ஆம், விசுவாசம் தான் ஒரு கொலைகாரனை மீண்டும் கொலைச்செய்ய வைக்கிறது. விசுவாசம் தான் நயவஞ்சகத்தை மார்கெட்டிங் என்றுச் சொல்லி மக்களிடையே புகுத்துகிறது. விசுவாசம் தான் பத்தாயிரம் இருபதாயிரமென எலும்புத்துண்டைப் போல் பணத்தை தூக்கியெறியும் அரசியல்வாதிகளை தெரிந்தும், அவர்களிடமிருந்து அப்படிப்பட்ட தலைவரிடமிருந்து பணத்தைப் பெற்று அதை தனது ஊர்மக்களுக்கு கொடுத்து ஓட்டாக மாற்றி ஒரு நயவஞ்சகனை தலைவனாக்க வைக்கிறது. விசுவாசத்தால் தான் நாமெல்லோரும் மயங்குகிறோம். விசுவாசத்தால் தான் உடன்படுகிறோம் நாம்.

“நன்றி” என்ற ஒற்றை உயர்ந்த சொல்லை அறத்தின் வழியே ஆழ நம் மனதுள் பதித்துப்போன திருவள்ளுவரிடமிருந்து இந்த முதலாளிகள் திருடி அதன் மீது பூசிய சாயம் தான் இந்த விசுவாசம். அதை உடைதெரியுங்கள் என்கிறது இந்த “வேலைக்காரன்” திரைப்படம்.

ஐயா அப்துல்கலாம் சொன்னார், நீ உன் வேலையை விரும்பு அதற்கு விசுவாசமாய் இரு, நிறுவனத்தை விரும்பாதே என்றார், அது மாறிக்கொண்டே இருக்கும் என்றார். அதுதான் அந்த ஒற்றை வாக்கின் மூலமந்திரம் தான் நமை மாற்றிப்போடுமென நம்பிய ஒரு திறமை மிக்க இயக்குனரின் சமுதாய அக்கறையின் உண்மை வெளிப்பாடு இந்த வேலைக்காரன்.

காரணம் வெறும் முதலாளியின், மேலாளர்களின், அதிகாரிகளின், அரசியல்வாதிகளின் விசுவாசத்தைக் கொண்டுத்தானே அத்தனை முட்டாள்தனத்தையும் நாம் செய்கிறோம்? உணவு விசமெனில் அதை செய்பவன் யார் ? விற்பவன் யார்? மருந்துகள் நோய்களை உருவாக்குவதை கண்கூடாகப் பார்க்கிறோம். மருத்துவமனை போனாலே ஒரு பயம் வருவதை உணர்கிறோம். உடலுக்கு சரியில்லை என்றால் மருந்து வேண்டும், அந்த மருந்து முறையேயொரு மருத்துவமனையில் கிடைக்கும்ன்றால் அங்கேச் செல்ல நமக்கு பயம் எதற்கு? குழந்தை பிறப்பு என்றாலே உயிர்பயம் வருகிறதே ஏன் ? ஆபரேசன் என்றாலே அடிவயிறு கலக்குகிறதே எப்படி ? யாரோ சரியில்லை, எங்கோ தவறு நடக்கிறது, யார் யாரோ ஏமாற்றுகிறார்கள், யாரை நம்புவதென்றே தெரியவில்லை, ஏனெனில் நாமே முதலில் சரியில்லையே, நான் யாரையோ ஏமாற்றுகிறேன் எனவே யாரேனும் ஏமாற்றி விடுவார்களோ என பயந்தும் போகிறேன். ஆனால் யோசித்துப் பாருங்கள் மகாசனங்களே யாருமே நமை ஏமாற்றவில்லை, ஒரு விசுவாசமெனும் மறைதுணியை கண்முன்னே கட்டிக்கொண்டு நாம் தான் நமை பெரிதாக ஏமாற்றிக் கொள்கிறோம்.

யோசித்துப்பாருங்கள், அரிசியில் கலப்படம் விற்பது யார் வாங்குவது யார்? மருந்து போலி விற்பது யார் வாங்குவது யார்? உணவுப் பொருட்களில் நஞ்சு விற்பது யார், வாங்குவது யார் அதை தயாரிப்பது யார்? யாரோ ஒன்றிரண்டை இலவசமென்றுச் சொன்னால் ஓடிப்போய் வாங்கும்முன் சற்று யோசித்தோமா அதற்குள் என்ன தந்திரம் உண்டென? ஒடேன்றால் ஓடுவது, விற்கச் சொன்னால் விற்பது, கொடு என்றால் விசத்தைக் கூட புட்டியில் ஊற்றி குழந்தைக்கும் கொடுப்பது எவர்செய்யும் குற்றம்?

எனக்கு வேலை கிடைக்கணும், நான் டார்கெட் முடிக்கணும், எவனோ போடும் ஒரு பிச்சை போனஸ் காசு எப்படின்னா எனக்கு கிடைக்கணுமென்று நினைத்தால் அது பச்சை துரோகமில்லையா? அதைத் தானே இன்று வியாபாரமாக்கி வைத்துள்ளார்கள் நமைச் சுற்றி எல்லோருமே. நம் பசியையும், நம் ஆசையினையும், நமது ஏழ்மையை உடைக்கும் முன்னேற்றத்தையும் தானே ஆயுதமாக கையிலெடுத்துக் கொண்டுள்ளது இந்த அதிகார உலகம்?

எங்கோ ஆடையின்றி கிடந்தோம் ஆனால் அனாதையாக இல்லை, கூட்டாக தானே வாழ்ந்தோம்? இன்று ஆடைக் கட்டி அலங்காரங் கூட்டி மாளிகை யெழுப்பி உள்ளே யார் யாரோடு வாழ்கிறோம்? கடனோடும், மருந்தோடும், கட்டளைகளுக்கு பின்னே ஓடும் அவசரத்தோடும் தானே நமது வாழ்க்கை இன்றுள்ளது? எதற்காகவேனும் நின்று சிந்திக்கவாவது நம்மிடம் நேரமுண்டா ? எல்லாவற்றையும் காசாக்கி யாரோ ஒரு சில நிறுவனங்களும் அதன் போதையில் மயங்கி அணைத்து தலைவர்களும் தலைக் குப்புற விழுந்துக் கிடந்தால் நாளைய நம் பிள்ளைகளின் கதியென்ன ? சோற்றை மாத்திரையாக்கி கொடுத்துவிட்டதுதான் நாம் அவர்களுக்கு கொடுத்த விஞ்ஞானமா? அல்லது அது அவர்களுக்கு நாம் அளித்த சாபமா?

ஓடி விளையாட இடமின்றி கணினியில் மூழ்கி கைப்பேசியில் விழுந்துக் கிடப்பது தானே நாம் அவர்களுக்கு கற்றுத்தந்த முன்னேற்றம்? உண்மையிலேயே இதையெல்லாம் எண்ணி எண்ணி நான் பலமுறை மனதிற்குள் வேதனையில் நோவதுண்டு. இந்த மக்களை எந்த சாமி வந்து திருத்துமோ என்று தினம் தினம் தவம் கிடப்பதுண்டு. அதத்தனைக்கும் ஒரேயொரு மூலக்காரணம் நமது தவறான விசுவாசம் தானென எத்தனயோ நமது இளைஞர்களுக்கு புரியவைத்த நன்றி இந்த “வேலைக்காரன்” திரைப்படத்தைச் சாரும்.

தன்னுடைய வேலை சரியா, தான் தயாரிக்கும் மருந்து சரியா, நான் விற்கும் பொருட்கள் சரியா என எல்லோருமே யோசிப்போம். எப்படி இதையெல்லாம் மாற்றுவதென ஒட்டுமொத்தமாய் சிந்திப்போம். சிந்திக்க சிந்திக்க உண்மையை உணர உணர நமக்குள்ளும் இப்படத்தின் கதாநாயகன் அறிவைப் போல பல நல்ல குழந்தைகள் நல்ல இளைஞர்கள் உருவாவார்கள்.

செய்யும் தொழில் அறத்தோடு இருக்கவேண்டுமென்பது மட்டுமே முதலாளிகளின் முதல் குணமாக அமையவேண்டும். அறத்தை தாண்டி செல்லும் எவரும் மனிதத்தை தொலைத்தவர்களாகவே எஞ்சி நிற்கிறார்கள். ‘அறம் என்பதுதான் நம் அரண்’ என நம் ஒவ்வொருவருக்கும் புரியவேண்டும். அது புரிந்தால் அந்த அறத்தின் வழியான விசுவாசம் நமை தவறு செய்ய விடாது. அப்படி தவறு செய்ய தயங்கி நன்மையை செய்ய முனைவோமானால், நாம் அத்தனைப் பேரும் ஒட்டுமொத்தமாக முனைவோமானால் நம் வாழ்வில் வெளிச்சம் நிச்சயம் வருமென்று மிக அழகாகச் சொல்லி முடிகிறது இந்த “வேலைக்காரன்” திரைப்படம்.

இவன் சரியில்லை, அவன் சரியில்லை, அவன் இப்படி இவன் இப்படி என பலவாறு பலரைத் தூற்றுவதும், காக்கை பிய்த்தெடுக்கும் எருதின் புண் போல பிறரது வலியில் குளிர்காய்வதும், அல்லது இது இன்னாருடைய குற்றமெனச் சொல்லி ஒருசாராரை ஒதுக்குவதுமெல்லாம் பொதுவாக எல்லோரும் செய்வது. அப்படி ஒருவர் இன்னொருவரை ஒதுக்கிவைத்து. தாழ்வாகக் கண்டு, தனை உயர்வாக எண்ணி எண்ணியே இந்த மரபு மிக்க தமிழ் மண் இன்று பிளவுபட்டு அண்டை மாநிலத்தார்முன் தாழ்வாகவே கிடக்கிறது. அரசியலுள் பாருங்கள் அத்தனை நாற்றம் அடிக்கிறது. அதிகபட்சம் எல்லோருமே தவறு, யாருமே சரியில்லை, இவரிவர் குற்றவாளிகள் என்று தெரிந்தும் அவர்களை சார்ந்துள்ளோம். முதலில் அவர்களை விட்டுவைதுள்ளோம் என்பதே தவறு, பிறகு பாருங்கள் சார்ந்திருத்தல் எத்தகைய குற்றம்? நம்மொடுள்ள நல்லோரை சரியாக அடையாளம் காணாதது எத்தகைய இடர்?

ஆக அப்படியெல்லாம் நீளும் கேள்விகளை விட்டுவிட்டு இன்னொரு உத்தியைக் கையாண்டுள்ளார் இப்படத்து இயக்குனர். அது எல்லோரையும் அணைத்து ஒரு உலகளாவிய வெற்றிச் சுடரை தன்மூலம் ஏந்திக் கொள்வது. எல்லோரையும் சேர்ப்பது என்கையில் யாரையும் மன்னிப்பதெல்லாம் இல்லையது, தனது பலத்தை பன்மடங்காகக் கூட்டிக் கொள்ள் எல்லோருமே அறம் சார்ந்து நகரும் ஒற்றைப் புள்ளியது. அங்ஙனம் எல்லோரையும் ஒருத்தர் விடாது கூட்டி; உண்மையிலேயே உள்ளவொரு பிரச்சனையை எல்லோரின் பிரச்னை இதுவெனக் காட்டி தனக்கு வேண்டிய ஒரு வெற்றியை எல்லோரீன் முன்பாகவும் எல்லோரின் சம்மதத்தோடும் மிக இலகுவாய் தான் ஏந்திக் கொள்ளுமாறு சாதுர்யத்தை இயக்குனர் குழு இப்படத்தில் கையாண்டுள்ளது என்பதை இப்படத்தை முழுமையாகப் புரிந்தோர் உணர இயலும்.

சொல்லப்போனால், இதுவும் ஒரு மார்கெட்டிங் தான். அதையும் அழகாக இப்படமே இறுதியில் ஒப்புக்கொள்கிறது. என்றாலும், இத்திரைப்படம் முடிகையில் திரையரங்கில் அமர்ந்துள்ள நூற்றுக்கு நூறு பேற்றையும் இது என் பிரச்னை இது என் பிரச்னை, இது நம் ஒட்டுமொத்தப் பேரின் பிரச்னை என்று உணரவைத்தது, இயக்குனரின் திறமையும், நல்ல திரைக்கதையும், தம்பி சிவகார்த்திகேயனின் மகோன்னத நடிப்பும், மிரினாளினியாக வரும் நயன்தாராவிலிருந்து காசியாக வரும் பிரகாஷ் ராஜ் வரை, சினேகா வரை, அந்த அம்மாவாக நடித்த ரோகினி, அப்பாவாக நடித்த சார்லி வரை செம அசத்தலான போதுமான நடிப்பும், அதோடு மிகச் சரியான ஆள் தேர்ந்தெடுப்புமென எல்லாமே மொத்தத்தில் கலக்கியிருக்காங்க. கலை இயக்குனர் குறிப்பாக அனிருத் இசை என எல்லாமே அசத்தல்.

சரியா சொன்னா, பெருசா ரசிக்கவோ, இனிமையா உணரவோ, ஒரு கதை உள்ளிறங்கி நம் கனவினை தரவோவெல்லாம் ஒண்ணுமேயில்லை. ஒரு டாக்குமெண்டரி போல ஒரு படம் தான் இது. ஆனால், எல்லோராலும் அத்தனை அசாத்தியமாக தொட்டுவிட முடியாதளவிற்கு மிக திறமாக அதற்குள் நம் பிரச்சனையை உள்வைத்திருக்கிறது இந்த “வேலைக்காரன்” திரைப்படம். இன்னைக்கு வர நோய், பிள்ளைங்க மழுங்கடிப்பு, வளர்ச்சி வளர்ச்சின்னு நாம சுரண்டப்படும் மோசடியென அத்தனைக்கும் மொத்தமாக நீதிக் கேட்டு நமைத் தூண்டும் ஒரு சின்ன; அதேவேளை தீப்பொறியின் முதல் முத்தாக இந்தப்படம் அமைந்துள்ளது என்பது சத்தியமான உண்மை.

என் அண்ணன் ஒருவர் வீட்டிற்கு வந்தார். படம் எப்படிண்ணே என்றேன், அவர் சொன்னார் “நீ வேறப்பா, நான் இந்த முறை சூப்பர்மார்கெட் கடைக்குள்ள போனப்ப ஒரு பக்கெட்டையோ அல்லது ட்ராலியையோ எடுக்கவேயில்லையே, கையை வீசிக்குனு போனேன் எது வேணுமோ அதை எடுத்தேன்.., வந்துக்குனே இருந்தேன் பாரு..” என்றார். அது தான் இந்தப் படத்தின் வெற்றிக்கு சாட்சி.

உலகிலேயே தலைசிறந்த சொல் “செயல்” என்று ஒரு வசனத்தை இரண்டிடத்தில் கதாநாயகன் திரு. சிவகார்த்திகேயன் மிக அழகாகச் சொல்வார். வாருங்கள் நாமும் அதேபோன்ற வலிமை மிக்கதொரு சொல்லின் ஆழத்துள் இறங்குவோம். நமக்கு வேண்டியதை நாம் இன்றிலிருந்தே செயல்படுத்துவோம்.

எல்லோருக்கும் விசுவாசம் அவரவரது வெற்றியில், அவரவரது செய்யும் வேலையில் மட்டுமிருக்கட்டும். நாம் ஒவ்வொருவரும் உண்மையிலேயே நம் வேலையை நம் மனசாட்சிக்கு ஏற்ப சரியாய் செய்ய அவரவர் பங்கிற்கு அவரவர் முயற்சிப்போம், முடிவில் எல்லோரின் ஒட்டுமொத்த விடையுமாக நமக்கான விடியல் நமக்கு இனியதாக கிடைக்கட்டும்.

எல்லோரும் இதுவரை பல கேள்வியை தூக்கிக்கொண்டு ஒவ்வொரு ஆண்டையும் கடந்தோம், இனி நாம் நமது வேள்வியாக நமக்கான களத்தை, வாழ்வை அமைக்கும் தீர்வினை வேண்டி, அதற்கான முழு எண்ணத்தை மனதிலேந்தி பயணப்படுவோம். வருங்காலம் நமக்கு அனைவருக்கும் அறம் காலமாய் வெற்றியின் இனிப்போடு வரட்டும். பிறக்கும் நமது ஒவ்வொரு புது வருடமும் மகிழ்வோடு பிறக்கட்டும்.

இப்படத்தின் நாயகன் திரு. சிவகார்த்திகேயனுக்கும், இயக்குனருக்கும், இத்திரைப்படக் குழு அனைவருக்குமே “இப்படியொரு அறிவைத் தூண்டும் சிறந்த திரைப்படத்தை தந்தமைக்கு” மனம் கனக்கும் நன்றிகளை எல்லோரின் சார்பாகவும் சொல்லி அன்பூறும் மனதோடு விடைபெறுகிறேன்..

எல்லோருக்கும் எனதினிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளும்! வணக்கமும்!!
——————————————————–
வித்யாசாகர்

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in திரை மொழி and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s