மனிதப் போராட்டத்தின் வெளிறியச் சொற்கள்.. (அணிந்துரை)

தம்பி சேவகன் பரத் எழுதியுள்ள புத்தகத்திற்கான அணிந்துரை

ரு துளி மையிட்டு அதிலிருந்து நீளும் தொடர்கதையாய்; ஒரு சின்ன இதயத்துள் காற்றடைத்து உயிர்க்கும் வாழ்வில்தான் எத்தனை எத்தனைப் போராட்டங்கள்(?). அறுக்கும் நெல்லிலிருந்து அறுத்து புடைத்து உண்டு உண்டவனை எரிக்கும் சுடுகாட்டுத் தீ மூளும் சுடு-நாற்றத்தினோடு அமர்ந்திருக்கும் வெட்டியான் வரை, அவனுடைய வாழ்வியல் குறித்த சிந்தனையையும் கருத்தில் கொள்ளவேண்டிய நம் தலைவர்கள் வரை, முதல்வரிலிருந்து பிரதமர் வரை யாருக்கில்லை போராட்டம்?

ஆக போராட்டம் என்ற ஒன்று பிறப்பதே போதாமை எனும் புள்ளியிலிருந்து எனில், எனக்கு இது போதுமென ஆசைகளை சுறுக்கிக்கொண்டு ஆடம்பரத்தை விட்டொழித்து வாழ்க்கையில் விளம்பரத்தை தேடாதவர்களை என்ன சொல்லலாம் (?) ஞானி என்று அழைக்கலாமா? பிறகேன் இவ்வுலகம் பைத்தியம் என்கிறது அவர்களை? பிறகு உலகின் சூழ்ச்சுமம் புரியாதவர்கள் யார் ? அவர்களா அல்லது நாம்தானா? ஆக எங்கோ சிறு தவறிருக்கிறது. அதை நாம் கடந்துவிடுகிறோம். கடக்க முடியாதவர்கள் சேவை ஆற்றுகிறார்கள். கடக்க முடியாதவன் கவிஞனாகிறான். கவிஞன் என்பதற்கெல்லாம் அப்பாற்ப்பட்டு பலரின் உயிர்ப்பை வாழ்தலை படைப்பாக்கியிருக்கிறார் வாழ்வியல் நேசர் திரு. சேவகன் பரத் அவர்கள். அவருக்கு எனது பணிவான நன்றி.

மரமது காய்ப்பதும் பூப்பதும் இயல்பு. எங்கோ காய்ப்பதையும் பூப்பதையும் ஒருவர் சீர்செய்து பிறர் ருசிக்க தருவாரெனில் அவருடைய தாய்மையும் போற்றத் தக்கதில்லையா ? அத்தகு முயற்சியோடு இந்த அருமை மனிதரின் மனிதாபிமானத்தை, ஈரமான எண்ணங்களை முழு புத்தகமாக்கித் தர முன்வந்திருக்கும் எனது அன்புச் சகோதரர் திரு. ரவி தமிழ்வாணன் அவர்களுக்கும், மணிமேகலை பிரசுரத்த்தின் மொத்த உழைப்பாளிகளுக்கும் எனது பாத வணக்கம்.

ஆடையில்லை என்று ஏங்குவது வேறு, உண்ண உணவில்லையென வருந்துவது வேறு, ஈதிரண்டும் இருந்தும் அதை புரியாத வாழ்க்கை எத்தகு கொடிது? தெருவில் சிலர் யாருமற்று திரிகையில் அவர்களை அழைத்துபோய் ஏதேனும் செய்துவிட எனக்கும் இதயம் துடிக்கும். ஒரு நூறோ இருநூறோ கொடுத்தால் ஜென்மம் தீருமா? தீராதென தவிக்கும். என்றேனும் ஒருநாள் நான் இவர்களுக்கு நிரந்தரத் தீர்வை கொடுக்க முடியுமளவிற்கு வளர்ந்துவிட்டால் இவர்களையெல்லாம் முறையே அழைத்து சீர்செய்து விடவேண்டுமென ஒரு பெரிய ஆசையையும் கனவையும் மனது சுமந்தே திரியும். அந்த கனவின் கனத்திற்கு ஒரு நிரந்தர சாட்சியை முன்வைக்கிறது இந்த “புனிதம் தேடும் மனிதம்” எனும் அரிய படைப்பு.

ஆரம்பிக்கும் போதே ஆசிரியர் சொல்கிறார், இதயம் பலவீனமானவர்கள் இதைப் பார்க்காதீர்கள் என்று. உண்மையில் அவரிதை என்னிடமிருந்து தான் முதலில் மறைத்திருக்கவேண்டும், காரணம் தூக்கம் என்பதெற்கெல்லாம் முன் எனது நிம்மதியை தட்டிவிடுகிறது இப்புத்தகத்தில் புரளும் ஒவ்வொருப் பக்கமும். நான் உடுத்தியிருக்கும் எனது ஆடையும், வகிடெடுத்து வாரிய தலைமயிரும் எனையே மாறி மாறி பரிகசிக்கிறது. இவர்கள் வாழும் சமுதாயத்தில் தானே நீயும் வாழ்கிறாய் ? இவர்களைக் கொல்லும் பசியை மறந்து தானே நீ இலகுவாய் கடந்துபோகிறாய் ? உனை சமூக அக்கறைக் கொண்ட கவிஞன் என்று சொல்லிக்கொள்வது உனக்கே எத்தனை ஆழ உண்மை, யோசித்தாயா? அதலாம் சிந்தித்தால் உனக்கு மட்டுமல்ல, இந்த சீர்கெட்ட சமுதாயத்திற்கே நாணக்கேடென ஒரு சமநிலைப்பாடின்மையின் பெரிய கோபத்தை வாரியிறைக்கிறது இப்படைப்பு.

காரணம், நான் சம்பாதித்துக்கொண்டு பிறகு சேவை செய்வேன் என்றெண்ணுவது மடத்தனம். இருப்பதை கொடுப்பதில் தான் சேவை இயல்பாய் நிகழ்கிறது. உதவ நினைப்பவர் வெறுங்கை வீசிச்சென்று உதவியை துவங்கவேண்டும். அப்போது தான் நாளை பணம் நம் கையில் வருகையிலும் அது தக்க உதவிக்குப் போகுமென்பது எனது நம்பிக்கை. அதே போல, நம் எல்லோருமே நமக்கேற்றாற்போல் ஒவ்வொரு வட்டத்தை போட்டுக்கொண்டு, அதனுள் நின்றவாறு என்னிடம் ஒன்றுமில்லை ஒன்றுமில்லை என்கிறோம். நாம் ஒவ்வொருவரும் தனது “ஒன்றுமில்லா கைவிரித்துக் காட்டும் முன், சற்று ‘அறிவுக்கண் திறந்து பார்த்தால் மனக்கண் வழியே தெரியும்’ இந்த உலகிற்கு உதவ நம்மிடம் எண்ணற்றவைகள் உண்டென. அதைத்தான் இந்த படைப்பின் நாயகர் திரு. பரத் அதை புரிந்துக்கொண்டு தனது கவிதைப் பயணத்தை இவர்களிடமிருந்து துவங்கியுள்ளார். இன்னும் கூட கொஞ்சம் செதுக்கியிருக்கலாம் கவிதைகளை. ஆயினும் அங்கே கண்ணீர் ஆறாக ஓடும் உணர்வுகள் மெத்த கரைந்திருப்பதால் புத்தகம் கனத்துவிட்டது போல் கவிஞருக்கு.

ஒருமுறை நான் கண்டுள்ளேன், இதுபோன்றோரை ஒரு மாமனிதர் அழைத்துபோய், அவர்களை கழுவி, சுத்தம் செய்து, முடிவெட்டி, உடை மாற்றி, மருத்துவமும் பார்க்கும் காணொளி ஒன்றை ‘ஐயா வை.கோ. அவர்கள் தனது வாட்சப் மூலம் குரல் பதிவோடு பகிர்ந்திருந்தார். அதைப் பார்த்துவிட்டு நான் பலநாட்கள் எனது உறக்கத்தை தொலைத்திருக்கிறேன். ஆயினும் அங்ஙனம் செய்ய விழைந்தவரின் மனதையும் ஆற்றலையும் எண்ணி எண்ணி ‘இவர்தான் முழு இறைப்பணியைச் செய்கிறாரென’ பெரிதாய் நிறைவுற்றேன். அந்த நிறைவின் துளிக்குள்ளிருந்தே எனை வெளியே விட மறுக்கிறது இப்படைப்பும்.

ஆக, அவர்களை மட்டுமல்ல, இந்த சமுதாயத்தால் கைவிடப்பட்ட அநேகருக்காகவும் தனது சிந்தனைச் சாட்டையைச் சொடுக்குகிறார் இப்படைப்பின் ஆசிரியர். ஓரிடத்தில்; வேசி என்று நாம் நாக்கூசாது ஒதுக்கும் பெண்டிரின் ஆழ்மனத்தையும் அழகியல் படுத்த முனைகிறது இவரது கவிதையொன்று. சோவென ஒரு மழைப்பெய்து நின்றதும் ஓடிவந்து கால்களைக் கட்டிக்கொள்ளும் ஒரு சிறுபிள்ளையைப் போல, ஒரு நீண்ட ஒப்பாரிக்குப் பின் எழும் ஒரு கொடூர அமைதியினைப் போல, ஒரு விலைமகளைப் பற்றிய கவிதைக்குள் அவளுடைய கண்ணீர் கதைக்குப் பின் இப்படி எட்டி முளைக்கிறது இறுதி வரிகள் –

“எப்படிப்பட்ட வேசி யானாலும்
  இப்படியொரு கதையிருக்கும்
  அவளுக்கும் மனதிருக்கும்
  அந்த மனதை யாசி” அவளையும் சமவுணர்வோடு நேசி, அவளை அவளாக மாற்றியப் பங்காளன் இந்தச் சமூகமாகிய நீயும் தானென கொடுவிரல் ஒன்றைக் காட்டி நமை மனிதத்தால் மிரட்டுகிறது.

இன்னொரிடத்தில், ‘யாருக்கோ உழைக்க இங்கென்ன உனக்கு படிப்பு வேண்டி கிடக்கு, போ, வேறெங்கேனும் போவென எச்சரிக்கிறார் வெளிநாட்டு பணியாளர்களை இப்படைப்பின் ஆசிரியர் திரு. பரத். கல்லுக்குள் ஈரம்பார்க்கும் மாமனசு எங்களை நோவதா? வெளிநாட்டு வாழ்வென்பது தேடிப் போனதல்ல, கிடைத்ததுள் மகிழும் மனதாகத்தான் நாங்கள் இருட்டுள் புகுந்துக்கொண்டு வெளிச்சத்தை தேடியே இந்நாள் வரைக்கும் அலைந்துக்கொண்டிருக்கிறம். அதனால் இழந்துவிட்டது ஏராளம், பெற்றது வெறும் பணத்தை மட்டுமே.

ஆக, இப்படி அடுத்தடுத்து புரட்டுகையில் நம் மண்ணின் வாசனையை மட்டுமே அறிந்தோர் அத்தனைப் பேரையும் அழைத்து, ‘பார்.. நன்றாகப் பார், இதுவும்தான் நமது மண், இவர்களும் தான் நமது மைந்தர்கள், வா.. வந்து என்னோடு நட, இவர்களுக்கான பதிலைத் தா என்கிறது, நீளும் ஒவ்வொரு கவிதையின் பக்ககங்களும்.

எனவே அவைகளை நீட்டிக்கொண்டே போகாமல் ஒரு முற்றுப்புள்ளியாக இங்கே முடிகிறேன். நீங்கள் கவிதைகளுக்குள் பயணியுங்கள், உங்களின் காதுகளுக்கு அருகே வந்து கதறியழ உள்ளே நிறைய இதயங்கள் கண்ணீர் சிந்தியும், வாழ்க்கையை தொலைத்தும் காத்துக் கிடக்கிறது. என்றாலும் எச்சரிக்கிறேன், சற்று கவனமாகவும் செல்லுங்கள், சிலவேளை, நாம் வகுத்து வைத்துள்ள அழகியலின் இலக்கணம் கண்டு அந்த இதயங்கள் நமை பைத்தியம் எனலாம். அது உண்மையானதாகவும் இருக்கலாம். படித்துணருங்கள். புதுமை பிறக்கட்டும். அது புரட்சியாய் வெடிக்கட்டும். நாளையந்த புரட்சியிலிருந்து நமக்கான விடியலும் கிடைக்கட்டும்.

நன்றி..

வித்யாசாகர்

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in அணிந்துரை and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s