ஒரு பூ உரசும் தொடுதலைவிட
உனை மென்மையாகவே உணருகிறேன்,
உன் இதயத்துக் கதகதப்பில் தானென்
இத்தனை வருட கர்வமுடைக்கிறேன்.,
உன் பெயர்தான் எனக்கு
வேப்பிலைக் கசப்பின் மருந்துபோல
உடம்பில் சர்க்கரை சேராமலினிப்பது; உயிர்
மூச்சுபோல துடிப்பது.,
உனக்கு அன்று புரியாத – அதே
கணக்குப்பாடம் போலத்தான் இன்றும் நான்,
எனக்கு நீ வேறு; புரிந்தாலும் புரியாவிட்டாலும்
நினைவுள் பிரியாதிருப்பவள் நீ.,
உனை யெண்ணுவதை
எண்ணுவதற்கேற்ற நட்சத்திரங்கள்கூட வானிலில்லை,
எனது சிரிப்பிற்குப் பின்னிருக்கும்
ஒரு துளிக் கண்ணீரைத் தொட்டுப்பார், உன் இதயம் சுடும்.,
உனக்கும் எனக்கும் தூரம் வெகுநீளம்
உனக்கும் எனக்கும் காலம் பெரு சாபம்
உனக்கும் எனக்கும் கண்கள் காற்றுவெளியெங்கும்
உனக்கும் எனக்கும் ஒன்றே பொருள்; நடைபிணம்.,
இவ்வளவு ஏன் –
உன்னுயிர்க்கும் என்னுயிர்க்கும்
பார்வையின் அளவில்லை, நினைக்குமளவில் மட்டுமே
உயிர்க்கும் நெருக்கமுண்டு.,
கனவுகளுக்கு கூட தெரியாது
யார் நீ யார் நானென்று;
கைக்குள் முகம் பொத்தி ஒரு பாடலை
ரசிக்கும் அந்த ஈரத்தில் மிதப்பவர்கள் நீயும் நானும்.,
சரிசரி, யாரோ நாம் புலம்புவதைக்
கேட்கிறார்கள் போல்,
காற்றுள் காது புகுத்தி நம் கண்களை
யாரால் பார்த்திட இயலும்?
போகட்டும் நீயொன்று செய் –
உன் கையில் இருக்கும் ஏதேனும் ஒரு பொருளெடு
அதன்மீது என் பெயரெழுது, அல்லது
ஒருமுறை என்னை நினை,
மீண்டும் –
அதே நீ நினைக்குமென் நினைவிலிருந்தும்
நான் நினைக்குமுன் நினைவிலிருந்தும்
மரணம் வரை –
மௌனத்துள் கனத்திருக்கட்டும் நம் காதல்!!
———————————————————————-
வித்யாசாகர்