பெண்ணென்றால் பூப்பூக்கும் காய் காய்க்கும்
வானத்து நட்சத்திரங்கள் பூமியிலே வந்துமின்னும்
கடலும்.. வனமும்..
காற்றிடையே அவளோடு காதலுறும்,
பிறகென்ன(?)
அவளும் பெண்ணென்கிறாள் எதிர்ப்பு எங்கிருந்து வந்தது?
பிறக்கையில்
மூன்றுக் கையோடு பிறந்தால்
இரண்டாக வெட்டிக்கொள்ளலாம்,
இரண்டு இதயத்தோடு பிறந்தாலும்
ஒன்றாக அறுத்து அளந்துவிடலாம்,
இரண்டு பிறப்பாக பிறந்தவளை என்னச்செய்ய ?
மனதால் நொந்தவளை
மனதால் அறுப்பதா?
பிறப்பால் பிசகியதை பாவமென்று சபிப்பதா ?
முதலில் இது பிசகில்லையே யாரறிவர் (?)
இதுவும் ஒரு பிறப்பென்று எவருரைப்பர் ?
தாயிற்கு பெண் பிறந்தாலும் சரி
ஆண் பிறந்தாலும் சரி
பெண் ஆணில் பிறந்தது குற்றமெனில்
பெற்றது யார்?
அங்ஙனம் பிறந்தது எவரது குற்றம் ?
உடம்பில்
புடைத்திருக்கும் மார்பகங்களுக்கு
உஸ்.. பூ.. சூ.. வென பெயர் சூட்டுவோரே
சற்று நில்லுங்கள்,
நீங்கள் எப்பொழுதேனும் – சப்தங்களால்
வலிசூழ்ந்த உலகை அறிந்ததுண்டா ?
உள்ளே அழும், வெட்கி நோகும்
வார்த்தைகளால் உடையும் இதயங்களின்
பச்சை நாற்றம் கண்டதுண்டா?
வளர வளர அழுபவர்கள் மனிதர்களெனில்
அவர்களின் அழுகைக்கு காரணமான நாம்
மனிதர்களா?
குரல் தடித்தால் நானென்ன செய்ய?
உடல் வளைந்தால் நானென்ன செய்ய?
குரலுக்கும்
உடலுக்கும் பெயர்வைக்கும் முன்
எனது பசிக்குங் கொஞ்சம்
நஞ்சள்ளித் தாயேன்..?
பிழைக்கபோனால் இடமில்லை
பழகக் கேட்டால் உறவில்லை
பிஞ்சு மனசொழுக பேசினாலும் நம்பிக்கையில்லை
ஏன், ஒரு கழிவறையில் கூட
ஒதுங்க இடமில்லை..,
கெஞ்சி கெஞ்சி வாழ்க்கையை
பெண்ணாய்த் தானே சுமக்கிறோம் ?
எம் முன்ஜென்ம பகையை
எம்முள் தானே விரிக்கிறோம் ?
சாதிக்க ஆயிரம் திறமைகளையும்
ஆசைகளையும்
வைத்துக்கொண்டு பிறந்தாலும்
அதற்கெல்லாம் முன்
தன்னை தான் இதுவென்று விளங்கிக் காட்டவே
மரணம் முட்டிவிடுகிறதெனில்;
எமைக் கொன்றுவிடு எம் மண்ணே!!
ஒன்பதென பெயர் வைத்தாய்
அரவாணி என்று அடித்து விரட்டினாய்
சினிமாக்களில் கேலி செய்தாய்
திரும்பும் திசையெல்லாம் எமக்குக்
காம கரைபுகுத்தினாய்,
மேலாக ஒன்று செய் –
உன் மகளிடத்தில் ஒரு துளி
உனது மனைவியைப் போல் ஒரு துளி
உனது அக்காத் தங்கையாக
தோழியாக ஒரு துளி
ஒரு துளி ஒரு துளியென –
ஒரு துளி இடத்தையேனும் எடுத்து
நம்பிக்கையோடு எமக்குத் தா –
இது நானென
நாங்கள் பிறந்ததை உணர்ந்ததும்
உருவம் கலைத்து உடைகளை மாற்றிக்கொண்டு
அதோ அது எனக்கான இடமென வாழ
இந்த உலகில் ஒரு துளி இடத்தைத் தா,
அந்த துளியை
உனது வீட்டிலிருந்து துவங்கு
அந்த ஒரு துளியிலிருந்து பெருகட்டும் உம்
மானுடத்தின் கரிசனமும் கருணையும் மனிதமும்
எங்களையும் ஏற்று மகிழ…
———————————————————-
வித்யாசாகர்