ஓ மழைப்பெண்ணே.. அடி மழைப்பெண்ணே..

 

 

 

 

 

 

சங்கு நத்தைப் பல்லழகு சிந்துந்தேன் பேச்சழகு
மஞ்சள்வெயில் முகமழகு மழைவான மௌனமழகு.,
கன்னக்குழியழகு கருப்புமுடியின் வகிடழகு
காதல் பொய்யுமழகு மழைப்பெண்ணே நீ முழு அழகு!

சந்தனப் பூப் போல மெய்யழகுக் கொண்டவளே
செவ்விதழ்த் தீயள்ளி உச்சந்தலை சுட்டவளே
முழுகாதவ வயிறாட்டம் மனதிற்குள் நிறைந்தவளே
முழுமூச்சை அசைபோட்டு நெடுவானில் நின்னவளே!

எனக்கென சொற்களில்லை எல்லாமே நீயானாய்
மௌனத்தைச் சேகரித்தேன் முப்பொழுதின் மொழியானாய்
சுடரேந்திச் சித்திரமாய் முகமெல்லாம் இனிக்குதடி
நீ வந்து நின்றால்தான் நிசப் பொழுது மலருதடி!

தனிமையில் கொல்கிறாய் கவிதையுள் நெய்கிறாய்
கனவினுள் வருகிறாய் கனவாகவே முடிகிறாய்.,
உறக்கமும் தொலையுதே உனையெண்ணி உருகுதே
உயிர்வரை பூக்கிறதே உனைமட்டும் எண்ணுதே!

தீக்குச்சியாய் உரசினாய் தீச் சுடாமலே ஒளிர்கிறாய்
செந்தழல் பரப்பி செவ்வானில் சிவக்கிறாய்
சூரியக் கீற்றோ நீ? சிறுவிழி யசைவில் நகைக்கிறாய்
மின்னலிடுங் கண்ணாலே மைப்பூசி மிளிர்கிறாய்;

மொத்தத்தில், மொத்தத்தில் நீ உயிரள்ளிக் குடிக்கிறாய்
மறுசென்ம வரங் கேட்டு வரங்கேட்டு இனிக்கிறாய்
நஞ்சள்ளிக் குடிப்பதுபோலுன் பிரிவைத்தான் சுமக்கிறேன்
நீ சிரிக்காத பார்க்காத இடந்தன்னில் இறக்கிறேன்!!
—————————————————-
வித்யாசாகர்

 

 

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக