மேல்கிளையில் அமர்ந்துக்கொண்டு
கீழ் கிளையை வெட்டுகிறோம்.,
அச்சாணியைப் பிடுங்கிவிட்டு
மாடுகளை விரட்டுகிறோம்..,
ஓட்டுகளை விற்றுவிட்டு
வாங்கியவனை தலைவ னென்கிறோம்
முதல்வரையேக் கொன்றாலும்
மடையர்களை முதல்வ ரென்கிறோம்,
பார்ப்பவர் சிரிக்கையில்
உயிரிலே வலியடா,
நெடுஞ்சான் கிடையாய் வீழ்வது
மண்ணில் போகும் மானமடா.,
உலகை சுழற்றிய வாள்முனையில்
பயத்தின் இரத்தவாடையா ?
கடல்தாண்டி பிடித்தச் செங்கோல்
இலவசத்திற்கு தலைச் சாய்ப்பதா ?
ஊருக்கே பாதைப் போட்ட
வீட்டிலின்று இருள்மூட்டம்,
இரண்டே வரிக்குள் அறம் முடிந்த
வள்ளுவ மண்ணில் அநீதி யாட்டம்.,
மரப்பாச்சி பொம்மைப்போல
மனிதர்களைக் கொண்டா விளையாட்டு?
மருந்தும் மதமும் கல்வியும் – ஏன்
வழங்கும் நீதியில் கூடவா கையூட்டு ?
தந்தை இழந்த வீடு போல்
தவிக்கிறது எம்மக்கள்,
தாயிழந்த வாழ்வென்றெண்ணி
தவற்றுள் நோகிறது எம் பூமி.,
தலைவனைத் தேடி தேடி
அறந்தனை தொலைக்கிறோம்,
ஆயிரம் பொய்யோடுக் கூட்டி
அரசென்று மதிக்கிறோம்.,
இல்லாதப் பேயிற்கு ஆயிரம் படமெடுப்போம்
லஞ்சமென் றறிந்தாலும் அஞ்சாது வாரி கொடுப்போம்
கொலையென்றாலும் பகலில் புரிவோம்
கண்ணெதிரே எதுநடந்தும் கண்மூடி கடப்போம்.,
மொழியில்லை மரபில்லை
பேச்சில் கூட அந்நிய வாசம்,
பிறக்கும் பிள்ளைக்கு வைக்கும்
பெயரிலிருந்தே நாற்றம் நாற்றம்..,
அம்மா அப்பா கூட
மம்மி டாடியில் இனிக்கிறது,
மம்தா கும்தா பெயரிட்டு
மணித்தமிழைக் கொல்கிறது..
அரிசி பருப்பு விற்கவெல்லாம்
குளிரறையும் குஷ்பு விளம்பரமும் வேண்டும்,
களையறுத்தவன் விதை விதைத்தவனெல்லாம்
கோமணமின்றி திரியவேண்டும்,
விளம்பரம் விளம்பரமொன்றே
யாம் மூழ்க வேகும் தீ இன்று,
அசிங்கத்தை அம்மணத்தை
நடுத்தெருவில் காட்டுதின்று,
விசத்தை அடைத்து
விதவிதமாய் வேடிக்கை ஜாலம்,
அதை குடிப்பதையும் கொடுப்பதையும்
காட்டுவதற்கு (கழக) டி.வி.கள் ஏராளம்,
கோமாளிகள் திரியும் மண்ணை
நாடென்று எப்படி யுரைப்பேன் ?
நமக்கான விடிவு கேட்டு
எத்தனை ஐந்தாண்டை இனியும் தொலைப்பேன் ?
அரிசி வித்த காசுக்கு
அடையாளம் மாறிப் போச்சு,
நேரே நடந்த தெருவெல்லாம்
பணம் பணம் பணமென்றே முழுப்பேச்சு.,
எங்கே எம் தமிழர் ?
எங்கே எம் வீரம் ?
எங்கே எம் மரபு ?
இப்படி எப்படி யானோம் நாம் ?
நீதிக்கு உயிர் மாய்த்த தமிழரில்லை
நெற்றிக்கண் சுட்டாலும் குற்றமென்ற வீரமில்லை
நெஞ்சு நிமிர்த்தி நாம் காத்த மரபில்லை
ஒரு தட்டுச்சோற்றில் பசியாறிய ஒற்றுமையில்லை,
வெறும் காற்றைஅடைத்து
ரத்தம் சுவைத்து
சோற்றிற்கும் பணத்திற்கும் பதவிக்கும்
புகழுக்கும் மட்டுமே வாழ்வதுதான் வாழ்வெனில்
ச்சீ அது வாழ்வில்லை; ச்சீ அது வாழ்வில்லை..
————————————————————————
வித்யாசாகர்