துபாயிலிருந்து நான்
ஆறேழு வருடங்கள் கழித்து
ஊருக்கு வந்திருக்கிறேன்
பசேலென்றிருந்த ஊரே
பல கட்டிடமும்
பெரிய வீடுகளாகவும் மொத்தத்தில் மாறியிருந்தது.
தெருக்குழாயும்
ஊர்க்கோடியில் நாங்கள் அமர்ந்துப் பேசும்
கிணற்றடியுமெல்லாம் அகற்றப்பட்டு
நெடுக வீடுகளே இருந்தது..
அப்போதெல்லாம்
இதே தெரு அவ்வளவு வடிவா
ஊரே சொந்தமும்பந்தமுமா இருக்கும்,
நாங்களெல்லாம் ஆங்காங்கே
தெருவிலேயே இருந்து ஆளாளுக்கு
கூட்டம் கூட்டமாக விளையாடுவோம்
தெருவில் படிக்கப் போகும்
பிள்ளைகள் கூட இன்று மொத்தமாக ஏறியொரு
கூண்டு வண்டியில் போகிறார்கள்..
நிறைய மாறி இருந்தது
வீட்டிற்கு வீடு புகுந்து ஓடிய
வேலிகளும் இல்லை,
அக்கம்பக்கம் வாடகைக்கு தங்கியிருந்த
கரோலின் அக்காவும் இல்லை
காலித் மாமாவும் இல்லை
யார் யாரோ புதிதாக வந்திருந்தார்கள்
மாடியும் ஓடுமாக நிறைய வீடுகள் மாறியிருந்தது
சைக்கிள் நின்ற தெருக்களில்
காரும் மோட்டார்சைக்கிள்களும் நின்றிருக்க
நான்
நாங்கள் அன்று ஒடிவிளையாடிக் கொண்டிருந்த
தெருவையும், ஏறி விளையாடிய புங்கை மரங்களையும்
பூவரச மரங்களையும் எட்டி எட்டி தேடினேன்
அம்மா உள்ளிருந்து குரல் தந்தாள்
எடேய்…. எங்கயும் இவண் கூப்டான்
அவன் கூப்டான்னு போயிராத என்றாள்
எனக்கு கோபம்; அது ஏதோ பழக்கத்தில்
சொல்லுது போல,
இங்கே எனக்கான ஊரே இல்லை
எனது தெருக்களை தொலைத்திருந்தேன்
சொந்தங்களை தொலைத்திருந்தேன்
எனது நண்பர்கள் யாராவது ஓடிவந்து
டேய் சொட்டைன்னு கூப்பிடுவார்களா என்றிருந்தது எனக்கு!!
————————————————————
வித்யாசாகர்
“வடிவா”
LikeLiked by 1 person
வணக்கம், வடிவெனில் அழகென்று அர்த்தம் ராஜ். நன்றி..
LikeLike