எனது எழுத்துறவுகளுக்கு வணக்கம்,
உணவள்ளி கடவுளிடம் வைத்தெடுத்து அமிழ்தமாய் உணர்வதைப்போல, சாம்பலெடுத்து இறை நம்பிக்கையோடு நெற்றியிலிடுகையில் சாம்பளது திருநீறானதைப் போல, மொழியை அழகியலோடு அலங்காரப் படுத்துகையில் அது கவிதையாக கிடைக்கிறது.
அழகியலில், ஆற்றாமையில், வஞ்சினத்தில், ஏமாற்றத்தில், காதலில், மகிழ்ச்சியில், மனமது பூரிக்கையில் எழும் உணர்வுகளை நாளைக்கென மனத்துள்ளே இலக்கியமாக்கி விதைப்பவன் நல்ல கவிஞனாக அறியப்படுகிறான். அத்தகைய நல்ல பல படைப்பாளிகளைக் கொண்டே காலம் தனது தாயன்பு முகத்தையும் கொடூர நகங்கீறிய வலிகளையும் திருத்தமாய் எழுதிகொள்கிறது. அப்படி பல காலங்களை தனக்குள் பூமி கனக்க இயற்றி வைத்துள்ள இனிய மொழி நம் தமிழ்மொழி.
தமிழின் காலம் மிகத் தொன்மையானது என்பதை இன்றும் நாம் நமது பழம்பெரும் பல சங்கயிலக்கியப் பாடல்களைக் கொண்டே அறிகிறோம். அத்தகைய ஆதியும் அந்தமும் கூடிய ஒரு மொழியின் வரலாற்றுவழி யெங்கும் அரிய பல படைப்புகளைத் தந்த கலைஞர்களும் கவிஞர்களும் ஏராளமானோர் உண்டு. அந்த எண்ணிக்கையற்றோரின் படைப்புப் பெருங்குளந்தன்னில் இதோ ஒரு அழகிய தாமரையெனப் பூக்கிறது எனது தொப்புள்கொடி உறவாளன் அன்புசகோதரன் மெத்தப் புகழ்மணக்கும் கவிஞன் திரு. யாழ் அகத்தியன் எழுதியுள்ள “நாளைகளின் நறுமணம்” எனும் கவிதைத்தொகுப்பு நூல்.
“என் கல்லறை மீது
எதுவும் எழுதிவிடாதீர்கள்
வாசிக்கும் பழக்கத்தில்
எழுந்தாலும் எழுந்து விடுவேன்” என்றுச் சொல்வது வாசிப்பே அற்றுபோய் இலையுதிர்ந்த மரங்களாய், பசுமையான சிந்தனைகளைத் தொலைத்துநிற்கும் மனிதர்களைப் பார்த்து செவுட்டில் அறியாது கடந்துபோகுமொரு நல்ல கவிஞனின் பக்குவமாகப் புரிகிறது.
மிக எளிய நான்கு சொற்களில் மிக அழகாக கவிதைகளை சரங்கோர்த்து விடுகிறார் தம்பி யாழ். ஒரு பெரிய தத்துவத்தை லேசாக சொல்வதற்கு கவிஞனால்தான் முடிகிறது. மரணத்தை முத்தமிடவேண்டுமா, மரணத்தை “ஏ மரணமே வந்து தான் பாரேன்” என மிரட்டவேண்டுமா, ஏ நிலவே வா கவிதையுள் உனை முடைகிறேனெனப் பிடித்து நட்ச்சதிரங்களோடு நிலவை வானப்பலகையுள் பூட்டி காதலியின் வீட்டுக் கதவிற்குள் அடைக்கவேண்டுமா? அது கவிஞனால் முடிகிறது.
இந்தக் கவிதையை பாருங்கள் –
“மரணத்தைப் போல்
காதலியுங்கள்
கொஞ்சம் காலதாமதம் ஆனாலும்
நிச்சயம் கிடைத்துவிடும் வெற்றி” என்றுச் சொல்லி யாராலும் மறுக்க இயலா மரணத்தினோடு நம்பினால் கிடைத்தே தீரவேண்டிய வெற்றியையும் காதலின் ஈடிற்கு வைக்கிறார் கவிஞர் திரு. யாழ் அகத்தியன்.
“நீ
கொளுத்திவிட்ட
மெழுகுவர்த்தி நான்
எப்படி உருகாமலிருப்பேன்” என்பதைவிட வேறப்படி தன் காதலியிடம் கேட்டிட இயலும், அன்பை தந்தவளே எப்படியுனை நினைக்காமலிருப்பேனென..
இன்னொரு கவிதை எனக்கு மிக பிடித்தது. சொல்லுள் தேனைப் பாய்ச்சும் வித்தையை போல அத்தனை அழகாக குட்டி வரிகளுள் ஒரு வானவில் புகுந்துகொண்ட வண்ணமிகு அழகு அது..
“காளான்களுக்கு
வேண்டியதெல்லாம்
குடை பிடிப்பதற்கு ஒரு மழை” என்கிறார்.
எத்தனை கம்பீரமான இயற்கையின் மீதான ஒரு இலக்கியப் பரிகசிப்பு அது. நேர்த்தியாக அளக்கத் தெரிந்திருக்கிறது சொற்களை கவிஞருக்கு.
இன்னொரிடத்தில் –
“தான் தங்கியிருக்கும்
மரத்தில்
தன் பசிக்கு பழங்கள் இருந்தாலும்
எந்தப் பறவையும்
தனக்கென்று ஒரு
தனிக்கூண்டை கட்டிக்கொள்வதில்லை” என்கிறார் மிக நாசூக்காக. எனக்கு வீட்டில் கற்றை கற்றையாக பணத்தைக் குவித்துவைத்துள்ள சுயநல துரோகிகளின் முகத்திலும், பட்டினி வயிறுகள் நிறைந்த குடிசைக்கு அருகே மிக உயரமாக எழுந்துநிற்கும் பல அடுக்குமாடி கட்டிடத்தின் சுவர்களின்மீதும் காரி உமிழ்ந்ததாகவே உறுத்தியது.
மிக ஞானம் தோய்ந்த கவிதை ஒன்றைப் பற்றி மட்டும் கண்டிப்பாக நான் இவ்விடம் பேசியேயாக வேண்டும்.
“என் விருப்பத்தை நான்
கைவிட்டுவிட்டேன்
இனி யார் கைவிட்டாலும்
எனக்கேதுமே வலிக்காது..”
இதுதான் பொதுவாக நமக்கு ஒரு எழுபது எண்பதாவது வயதுதனில் நரைக்கொட்டி பல்லாடும்போது தோன்றும் ஒருமித்த ஞானமில்லையா? எதிர்ப்பார்ப்பிருக்கையில் தான் நண்பர்களேயானாலும் “கொடுத்தால் நல்லவர், கொடுக்காவிட்டால் கெட்டவரெனும்” அற்பப் போக்கிற்கான மனநிலை வந்துவிடுகிறது.
நம் முந்தைய காலத்து வாழ்வமைப்புகள் இதற்கெல்லாம் வெகுதூரத்தில் நிற்பதுபோல் மிகுந்த அன்பும் கூட்டுறவுகளின் கூடாரமாகவும், நட்பும் காதலும் பெருகியுந்தான் இருந்திருக்கிறது. நட்பென்றால் எதிர்ப்பார்ப்பின்றி உயிருள்ளவரை நட்பென்றே அறிப்பட்ட காலமும் சூழலும் அன்றில் இருப்பதை நாம் நமது வரலாற்று வழியே காண்கிறோம். அக்காலத்தே துறவு என்பதே அவசியப்படாதிருந்ததை கேட்டிருக்கிறேன். ஆசையை, எதிர்பார்ப்புகளை விட்டு விலகி இருத்தல் வீட்டிற்குள் நிகழ்கையில் தனியே துறவறம் ஏற்பதென்பது அவசியமற்றுப் போயிருந்த காலமது. வீட்டிற்குள்ளே இருந்துக்கொண்டே வெளிவாழ்க்கையை உதறிவிடுவதும், உண்ணும் உணவை மருந்தாய் உண்டதும், ருசியை துறந்து பலர் பசிக்காய் வாழ்ந்ததுமென நம் பெரியோர்கள் அக்காலத்தே இல்லறத்தை கோயிலாகயெண்ணி அமைதி பூண்டு வாழ்ந்ததையெல்லாம் கண்டிராத மக்களில்லை நாம். இன்று வாழ்க்கை வேறு. உறங்கி விழித்து பல்துலக்கும் பற்பசையில் இருந்து இரவில் உறங்க பயன்படுத்தும் மெத்தை வரையொரு வியாபார அரசியலும், விற்பனைத் தந்திரமும், சுயநல ஆசைகளும் பெருகிநிற்பதை அறிகிறோம். அவைகளையெல்லாம் உதறிவிட எதிர்பார்ப்பின்றி வாழப் பழகுவோம். சுயநலமறுத்த நெஞ்சு நமை பொதுநலத்தில் கொண்டுசேர்க்கும். அங்கே பிறர் பசிக்கும் சேர்த்துச் சொட்டும் வியர்வையால் நம் எதிர்கால தலைமுறை பஞ்சமொழிந்து ஆனந்த வாழ்க்கை வாழ்கையில் அங்கே எல்லோருக்குமான சமத்துவமும், எல்லைக் கோடுகளற்ற உயர்ந்த விடுதலையும் சரிசமமாய் எல்லோருக்கும் கிடைக்கும் என்பதை ஒரு சின்ன கவிதயினுள் புகுத்தி எழுத்திற்கு அழகு சேர்க்கிறார் கவிஞர் திரு. யாழ் அகத்தியன். அவருக்கு எனது மனமார்ந்த நன்றி. தமிழ்கூறும் நல்லுலகிற்கு அவரால் மேலும் பல சிறந்த படைப்புகள் கிடைக்கட்டும், எழுதினால் அவரது புகழ் ஓங்கி மண்ணில் நிலைத்திருக்கட்டுமென வாழ்த்தி, கவிதைக்கான வாசலை நோக்கி வரவேற்றவனாய் விடைகொள்கிறேன்.
அனைவருக்கும் எனது அன்பு வணக்கத்துடன்..
வித்யாசாகர்