அது என் முதல் காதல்
ஞானிபோல் அனைத்தையும் மறந்து
அவளை மட்டும் நினைத்த காதல்,
முதல் நானிட்ட கோலத்தைப்போல
மனதிற்குள் அவளைச் சுற்றி சுற்றி
வட்டமடித்த காதல்,
என் ஆசைக்கு நான் தந்த முதல்
விடுதலை,
விரும்பும் மனதை விரும்பியவாறு
சுயமதிப்பு,
வாழ்வெனும் பெருந் தீக்கு
மனதுமூட்டிய முதல் துளி நெருப்பு,
பகலில் நிலாவையும்
புத்தகத்தில் அவளையும் வைத்துப் படித்த
முதல் பாடம்,
வீட்டில் மயிலிறகு குட்டிப்போடாதப்
புத்தகத்தில் எழுதிய
அழகு பெயர்,
அவளுக்குப் பதினாறும்
எனக்கு இருபதுமான யெங்களின் பதின்மவயதை
அன்றொரு ஞாயிற்றுக்கிழமையின் திரைப்பட இரவில்
கனவுகளோடு விதைத்துக்கொண்ட
காதலது..
எனது
கவிதைக்கு ‘உ’ போட்டு பழகியது
அங்கிருந்து தான், அவளிடமிருந்து..
****
அவளுக்கு முன்பும்
ஒரு குட்டிக் காதலுண்டு
ஊஞ்சலுக்கு நடுவே
மனங்கள் ஆடிய காதலது..
ஒரு இருபது முப்பது வருடத்து
ஆழமானவொரு காலக் கிணற்றுக்குள்
வெளிச்சமற்ற இருட்டோடு பொதிந்துள்ள
இரு மின்மினிப் பூச்சிகளின் அன்புக் கதையது..
பொடிமிட்டாய் தின்னும் வயதில்
உறவு இனித்த விதி போல அதுவுமொரு
சமூகம் சபித்த காதல் தான்..
என்னவோ
அந்தப் பெண்ணிற்கு என்னைப் பிடித்திருந்தது
எனக்கு அவளைப் பிடித்திருந்தது,
ஆசிர்வதிக்கப் பட்டவர்களைப்போல
அருகருகே அமர்ந்துக்கொள்வதும்,
இருவரும் கைகளை
இறுகப் பற்றிக்கொள்வதும்,
இருட்டில்
நிலா வெளிச்சத்தில்
எதுகையும் மோனையுமாய்
ஒரு கவிதைக்குள் இசைவதும்,
மழையில் இன்பமாய் நனைவதைப்போல
நாங்கள் அன்பில் நனைந்ததுமெல்லாம்
இப்பிரபஞ்சத்தின்
சாட்சியற்றவொரு காதலின் காலம்..
முகம் பார்க்க தெரியாது
மனசென்றாலோ அழகென்றாலோ
எங்களுக்கு என்னவென்றெல்லாம் அப்போது புரியாது,
எங்கிருந்தோ வீட்டிற்கு அருகே
அன்று குடி வந்தார்கள், பார்த்தோம்
விளையாடினோம்
எல்லோருக்கும் மத்தியில் கூட
ஏதோ ஒரு உறவாய் தனித்திருந்தோம்,
திடீரென ஒருநாள் இரவில்
சொந்தவூருக்கேச் சென்றுவிட்டார்கள்,
கடலுக்கு இனி
அலையே சொந்தமில்லையென்பது போலிருந்தது எங்களுக்கு,
அவள் அழுதாளா இல்லையா தெரியாது
நினைத்தாளா இல்லையா தெரியாது
சடாரென வானம் கண்களை மூடிக்கொண்டதைப்போல
அவள் தனித்துப் போய்விட்டாள்
பிரிந்தே போனோம்
பிரிந்தோம் சரி, மறந்தோமா ?
எப்படி மறப்பது ? மனதிற்கு சிலதை
மறக்கவே முடிவதில்லை..
பள்ளிக்கு செல்வதைப்போல
அவள் சென்றுவிட்டாள், மீண்டும்
வருவாளென்றே மனசு காத்துக்கிடக்கிறது..
அவள் தந்த முத்தங்களை மட்டும்
அந்த யாருக்கும் தெரியாத ஒரு புத்தகத்திற்குள்
இன்றுவரை மறைத்தே வைத்திருக்கிறேன்..
——————————————-
வித்யாசாகர்