முடிநரைக்கும் போதே
வழிதடுக்கிப்போதல் வரமில்லை சாபம்,
வயசாளி கிழவன் கிழவின்னு
வாழ்க்கை கருவேப்பிலைப் போலானால்
பூமியது மெல்ல நோகும்..,
வயதைப் பிடித்துக்கொண்டு
வாழ்வில் சறுக்குவது வலிநீளும் சோகம்,
நிமிடமும்
நொடியும்
வெறுப்போடு
கனமாய் நகர்வது அப்பப்பா போதும்.,
உழைத்து உழைத்தே நொடிந்த
உடம்பிற்கு
நரை வந்தால் பசிகூட தீது,
அன்பு அன்பென உயிர்பிடித்திருந்தால்
சாகாததும்கூட
வாழ்தலின் தீராத தீதும்..,
அன்று
மகன் உறங்குகிறா னென்றும்
மகள் உறங்குகிறா ளென்றும்
நாங்கள் முத்தமிட்டுவிட்டு கடந்த நாட்கள் வேறு,
இன்று
அதே முத்தம் திகட்டிபோனப் பிள்ளைகளின்
பார்வையது வேறு..
காது செவிடானால்
கேட்காதது எவர் குற்றம் ?
கண் மழுங்கிப்போனால் பார்க்கயியலாதது
யார் குற்றம்?
திரும்பக் கேட்பதற்கும்
தெருவில் தடுமாறி நடக்கையில் தாங்கிப் பிடிக்கவும்
மகனெனும் அன்பு போதாதா?
மகளெனும் அன்பு போதாதா?
பார்வை குறைந்துவிடுகிறது
கண்ணாடி உடைந்து விடுகிறது
நினைவு மறதியில் –
அது தொலைந்துகூடப் போகிறது,
போகட்டுமென விட்டுவிட
மன்னிக்குமொரு சின்ன மனசு போதாதா?
உண்பது இரண்டிட்டிலி
ஏறுவது ஒன்பது சர்க்கரை,
கொடுப்பது உப்பில்லாச் சோறும்
உடைந்தரிசி கஞ்சும்,
பின்பும், கூடுவது கொழுப்பென்றால்
கொடுவாளால் வயதைக் கொன்றுவிடவா ?
இருப்பது ஒரு உடம்பு
அது மருந்தில்தான் வாழ்வென்றால்
உயிர்மூச்சு துறந்துவிடவா ?
காலைச் சிற்றுண்டி
மதியத்திற்குமுன் கிடைக்கும்,
மதியவுணவு பசிக்குப்பின்கிடைக்கும்
இரவு உணவை
இறக்கத்தானே உண்கிறோம் பசிக்கல்லவென
யாரேனும் அறிவீர்களா?
நீங்கள் வெளியில் சென்றுவிட்டு
வீட்டிற்கு வரும்வரை
பசித்துக் காத்திருக்கும் பெருசுகளின்
பசிபற்றி யாருக்கு கவலையிங்கே?
உங்ககளுக்குப் பசித்ததும் பசிக்கவும்
உங்களுக்குப் பிடித்ததும் பிடிக்கவும் மட்டுந்தானே
நாங்கள் –
வீட்டிலொரு முதியோராய் சபிக்கப்பட்டிருக்கிறோம்..?
நிற்பதும் நடப்பதும்
ஏதோ கடமைக்கு,
உறங்குவதும் எழுவதும்
ஏதோ கடமைக்கு,
வலிப்பதும் சகிப்பதும் ஏதோ கடமைக்கு,
உனக்கு இருப்பதாய் யிருப்பதே
எனது இறுதி கடமை தான் மகனே..?
அப்பாவுக்கு சர்க்கரை போடாதா..
அதுக்கு இதை தராத..
அதாண்ட தொல்லையா போச்சு..
கெழுவிக்கு கெளரவம் அதிகம்..
அது பொல்லாதது..
இன்னும் சாகாம கிடக்குறா..
இப்படி வார்த்தைகளை வீசிவீசி கொன்றப்பின்
மீண்டுமொருமுறை நாங்கள்
பேருக்குச் சாதல் பாவம் மகனே..,
செருப்பருந்து மாதங்கள் ஆச்சு
சொன்னால் அவளுக்கு கோபம் வரும்
சொன்னாலும் சொல்லாவிட்டாலும்
அவனுக்கு கோபம் வரும்,
சொல்லியும் வலிக்கிறது, சொல்லாவிட்டாலும் வலிக்கிறது
இருதலைக்கொல்லி நாங்கள்
இயற்கைக்கு புரியலையே..(?)!!
நான் ஒன்றே யொன்றை மட்டும்
கேட்கிறேன் மகனே.. மகளே..
இல்லையில்லை கேட்டது வலித்ததெல்லாம்
போதும்.. போதும்.. சொல்கிறேன் கேள்;
நீ இதையெல்லாம் எனக்குச்
செய்யவில்லை,
உனது பிள்ளைகளுக்கு செய்துகாட்டுகிறாய்!!
—————————————————-
வித்யாசாகர்
மிகவும் அருமை தோழர்.
LikeLike
நன்றி தோழர். மகிழ்ச்சி.
LikeLike