நீ என்னவா வரணும்னு கேட்டா குழந்தைகள் வானத்தளவிற்கு தனது கனவுச் சிறகுகளை பலவாறு விரிப்பதுண்டு. மகளுக்கும் அப்படியொரு கனவு உண்டு. அது ஆசிரியை கனவு.
எனைக் கேட்பார், அப்பா அண்ணா சொல்றான் விஞ்ஞானியா ஆவானாம், நான் என்ன ஆகப்பா என்பாள்..
உனக்கு என்ன ஆகனுமோ அதுவா ஆயிக்கோ என்பேன். இல்லையில்லை நீங்க சொல்லுங்க என்பார். உனக்கு பிடித்தாற்போல அப்போ எது சரியோ அதுவா ஆகலாம்டா என்பேன்
இல்லைனா நான் கலெக்டராயிடட்டா என்பார், ம்.. ஆனால் நிறைய புரட்சி செய்யவேண்டியிருக்குமேடா என்பேன். அதலாம் செய்வேன்ப்பா என்பார்.
சரி அப்படி வந்தா சந்தோசம் தான் என்பேன். இல்லையில்லை நீங்க சொல்லுங்க உங்களுக்கு என்ன ஆனா பிடிக்குமென்பார். எனக்கு ஆசிரியை பிடிக்கும்டா என்பேன்.
நல்லவர்கள் சொல்லித்தர வரணும்டா, உன்னைமாதிரி நல்ல பாப்பா எதிர்காலத்துல ஆசிரியையாக உருவாயிட்டா அதனால எத்தனை நல்ல குழந்தைகளை சிறந்த மாணவர்களா உன்னால் உருவாக்கிட முடியும் ல்ல என்பேன். சரி நான் ஒன்னு கலெக்டர் இல்லைனா ஆசிரியை ஆய்டுவேன் சரியா? என்பார்.
கனவுகள் இனிதே; நாளை நடப்பதென்னவோ யாரறிவார், எல்லாம் நல்லதாகவே நடக்கட்டுமென்று நல்லதையெண்ணி நகர்வோம்.
இன்று மகள் வித்யா பொற்குழலி ஆசிரியைக்கான மாறுவேடப் போட்டியில் பங்கேற்கிறார். ஆங்கிலத்தில் ஒலிக்கஇருக்குமவரின் குரலின்று எதிர்கால சரித்திரமாக இக்காற்றெங்கும் பரவி நற் கனவுகளை விதைக்கட்டும்.
“ஆசிரியைகளுக்கும் மாணவர்களுக்கும் வணக்கம்..,
மாணவர்களே இவ்வுலகின் வளர்ச்சிக்கான பலம். மாணவர்களே நாளைய மாபெரும் மாற்றத்திற்கான மறுமலர்ச்சிக்கான புரட்சி விதைகளாவார்கள். மாணவர்களே பெற்றோருக்கும் தனது ஆசிரியருக்கும் பல பெருமைகளைச் சேர்க்கிறார்கள். மாணவர்களை இம்மண்ணின் அரும்பெரும் செல்வங்களாக நான் மதிக்கிறேன். அத்தகைய பல நல்ல மாணவர்களுக்கு சிறந்ததொரு ஆசிரியையாக இருப்பதில் நான் பெருமகிழ்ச்சி கொள்கிறேன். நன்றி. வணக்கம்!”
வித்யாசாகர்
பிங்குபாக்: ஒரு ஆசிரியைக்கான கனவு.. – TamilBlogs