1
ஆயிரம் கைகள் எனை
அணைத்துக்கொண்டு தானிருக்கிறது;
என்றாலும் –
மனசு வெளியே சென்று தேடுவது
உன்னைமட்டுமே..
—————————————–
2
எறும்புகள்
சாரைசாரையாக எதையோ தேடிக்கொண்டேயிருக்கும்;
அதிலொரு எறும்பு நானாகயிருப்பின்
உனைமட்டுமே தேடியிருப்பேன்..
—————————————–
3
உன் பார்வையைவிட அழகு
உலகில் வேறில்லை;
கடவுள் ஒருவேளை நேரில் வந்தால்
நீ சிரிக்கும் சிரிப்பை மட்டும்
ஒரு வரமாகக் கேட்பேன்..
நீ பார்க்குமொரு பார்வைக்கு
மீண்டுமொரு தவம் கிடப்பேன்..
—————————————–
4
ஒருசில கணங்களது
உனை நினைத்திடாத கணம்,
மீறி நினைக்கையில் தீபோல் அள்ளி குடிக்கிறாய்
முழு நிலவாய் எனை வெளுக்கிறாய்:
உன் நினைவாக மட்டுமே
வெளித் தெரிகிறேன் நான்..
—————————————–
5
என்னதான் வேலையென்றாலும்
கூடவே
சுவாசிக்கவும் சுவாசிப்போமில்லையா ?
அந்த சுவாசக்காற்றில் நீயிருப்பாய்..
—————————————–
6
உறக்கத்திலிருந்து
கண் விழித்தாலும்
நீ மட்டுமே முதலில் தெரிகிறாய்;
அல்லது
தெரியக் கேட்கிறது மனசு..
—————————————–
7
உனை
பெரிதாக நினைப்பதில்லை
மறப்பதுமில்லை;
உண்மையில் –
நீ மறக்கும் இடந்தண்ணில் இறப்பேன்
நீ நினைக்க நினைக்க பிறப்பேன்..
நீ மறுக்கும் இடம் மட்டும்
வலிக்கும், நீ சிரிக்க சிரிக்க
உயிர் சுகிக்கும்..
நீ பார்க்காத பொழுதது
வெறுக்கும், நீ பார்க்கும்
நினைக்கும்
அன்பில் மட்டுமே அது இனிக்கும்..
—————————————–
8
உனக்காக
ஒருமுறை சாகத் துடிக்கிறது மனசு,
மீண்டும் பிறக்கையில்
எங்கேனும்
உனக்காகவே பிறந்துவிடமாட்டேனா..
—————————————–
9
உனது மௌனத்திற்கு கூட
சப்தமுண்டு
எனக்குமட்டும் கேட்கும் சப்தமது,
உனது பார்வைக்கு கூட
மொழியுண்டு
எனக்குமட்டும் படிக்கயியன்ற
மொழியது,
எனக்கும் உனக்குமான ஒரு
நீயிருக்கிறாய்;
அந்த நீ
எப்போதும் எனக்குள் இருப்பாய்!!
—————————————–
10
பொழுது அடங்குகையில்
படரும் இருட்டோடு
கண்களில் தூக்கம் அடங்குமோ இல்லையோ
உனக்கான காத்திருப்பை சுமந்துக்கொண்டு
படுப்பேன்,
ஒரு சொட்டுக் கண்ணீர்
தலையனையை நனைக்கும்
ஒரு சின்ன கனவு உனைத் தேடி அலையும்
கனவுகளில் உன் மனசுபோலவே
சிரித்துப் பேசுவாய்
நீ பேசியதை சிரித்ததை பார்த்ததை
நினைத்துக் கொண்டிருப்பேன்..
திடீரென குருவிகள்
சன்னலில் வந்து கத்தும்
காகங்கள் கரையும்
பொழுது புலரும்
கனவோ நினைவோ
என் நாள் முழுதும் நீயிருப்பாய்
உன் நினைவிருக்கும்,
நீ எல்லோருக்கும் நீ
எனக்கு நீ மட்டுமே எல்லாம்..
—————————————–
வித்யாசாகர்
பிங்குபாக்: பட்டாம்பூச்சி போல அவள்.. – TamilBlogs