1
ஒரு செடிக்கு அருகில்
நின்றுகொண்டு
அதில் பூக்கவிருக்கும் மலர்களைக் காண
காத்திருத்தல் எப்படிப்பட்ட ஒரு தவமோ
அப்படியெனக்கு,
உனை யொரு பொழுதில்
கண்டுவிடுவதும்..
————————————————————
2
அழகென்றால்
என்னவென்று நினைக்கிறாய் ?
இந்த உலகிலிருக்கும்
அத்தனைக் கண்ணாடிகளும்
அழகு தான்;
நீ பார்க்கையில் மட்டும்..
————————————————————
3
தினமும் உன்னிடம்
சாப்பிட்டாயா
தூங்கினாயா
வேலையா இருக்கியா
என்றெல்லாம் கேட்பதுண்டு;
அது நீ சாப்பிட்டதை
உறங்கியதைப் பற்றி அறிவதற்கல்ல,
உன்னிடம் நான் பேசியதாயும்
என்னிடம் நீ பேசியதாயும்
ஏதேனுமொரு கவிதைக்குள்
உனைப்பற்றி எழுதிவைக்க..
————————————————————
4
உனக்கொரு கோயில் கட்டவா
என்றுக் கேட்டால் நீ
சிரிப்பாய் தானே..?
ஆனால் உனக்கென கட்டிய
பல கோவில்கள்
மனதுள்ளே தினம் தினம் இடிந்துபோகிறது,
கோவிலில்லா விட்டாலென்ன
சாமியை தேடிப்பார் எனக்குள்ளே
எங்கும் நீயே நிறைந்திருப்பாய்..
————————————————————
5
ஏதேனுமொரு பறவைக்கு
தெரியுமா அந்த மொழி?
தெரிந்தால்
அதனிடமாவது சொல்லியனுப்பி விடுவேன்
உனக்கான நினைவையும்;
இந்த இரவின்
நீயில்லா கொடூர தனிமையைப் பற்றியும்..
————————————————————
வித்யாசாகர்
பிங்குபாக்: அழகெனும் சொல்லுள் ஆதிக்கம் செய்பவள்.. – TamilBlogs