கால்கள் உடைந்திடாத சக்கரம்
காலத்தோடு சுழல்கிறது
பிறகு ஊனத்தைப் பற்றி பயமெதற்கு ?
எல்லாம் மாறும்
காட்சிகளே பிறழ்கிறது; பின்
தோற்பதென்ன மூப்பதென்ன கேடு..?
வெற்றி உதிர்ந்திடாத மனங்களே
நம்பிக்கைக்கு சாட்சியெனச் சொல்லி
இன்னும் எத்தனை முகங்களில் அரிதாரம் பூச..?
வாழ்வது நிலைக்கலாம் நீளலாம்
சாவது ஒருமுறை யெனில்
தினம்தினம் செத்துப் பிழைப்பதேன்..?
வாழும்போதெல்லாம் வெற்றிக்கு ஏங்கி
கடைசிவரை தோல்விக்கே பயந்துத் தீர்வதைவிட
கொஞ்சம் வாழ்ந்துகொள் போதும்..
உறக்கத்தை சுமையாக்கி
பசியை பழகிக்கொள்
புகழ்ச்சியை பணத்தை கடந்துசெல்.,
பயமுட்களில்லா பாதையமை
சமூகத்தை அன்பொழுக நேசி
உன் வெற்றியை பிறர் வெற்றியாக்கு.,
இருப்பதை இயன்றவரைப் பகிர்ந்துகொள்
இல்லறத்தை உண்மையின் கண்ணாடியாக்கு
நானிலத்தையும் அறம்கொண்டு அள.,
கண்களை முயற்சி சிவக்க திற
மனதை நம்பிக்கை கனக்க மூடு
பயணத்தை உழைப்பால் மட்டுமே தொடர்.,
உலகில் எவரும் முழு தீயவரில்லை
நம்புமளவு எல்லோருமே நல்லோருமில்லை
பின் யாரிங்கே உயர்வும்? தாழ்வும்?
எதிர்மறை உடை; சமத்துவம் ஏந்து
எதிரும் புதிரும் ஒன்றென அறி
இயற்கையை உனக்குள்ளிருந்து வெளியே பார்; பார்க்க பழகு
ஒருமுறையேனும் மன்னித்துவிடு
ஒருமுறையேனும் கொடுத்து மகிழ்
ஒருமுறையேனும் அன்பு செய்..
பிறகு எட்டித்தான் பாரேன்
ஒரு கணம் நீ
சிகரத்தைத் தொட்டிருப்பாய்;
அல்லது
சிகரம் வெற்றிகளின் கூடாரமாயுனைத் தொட்டுக்கொள்ள
ஒரு தவமேனும் பூண்டிருக்கும்!!
————————————-
வித்யாசாகர்
பிங்குபாக்: நம்பிக்கையெனும் நெற்றிக்கண் திற.. – TamilBlogs