1
மழையே
ஓ மழையே
ஒருமுறை சோவெனப் பெய்துவிடேன்..
மழைவானம் நீந்திப் பறக்கும்
பட்டாம்பூச்சிபோல
நானுமுன்னுள் ஒருநாள்
ஆழ்ந்துதான் போகிறேனே…
————————————————————
2
எனக்கென ஒரு சம்மதம்
தருவாயா ?
அடுத்த ஜென்மமென ஒன்று
உண்டெனில்
நீயெனக்கு மகளாய் பிறந்திடேன்,
உனைக் கொஞ்சி கொஞ்சியே யெனது
நரைகொட்டித் தீரட்டும்..
————————————————————
3
உன்னைக்கடந்து என்னால்
போகமுடிவதில்லை யென் மழைப்பெண்ணே..
இரவில் நீ
விளக்கணைத்துவிட்டுப் போய்விடுவாய்
ஆனால் உறங்கியிருக்கமாட்டாய்
என்பது தெரியும்,
நான் நீ வந்துநிற்குமந்த
சன்னலோரத்தையும் வாசல் கதவையும்
எடுத்துபோய்
எனது நினைவுவரை ஒளித்துவைத்திருப்பேன்,
நீயில்லா தனிமையைக்கொண்டு
இருட்டுமெனை கொள்ளத்துடிக்கும்..,
இருந்தாலும்
வெள்ளெந்தியாய் வாசலில் நின்று நான்
ஒரு கொசுவிடம் பேசிக் கொண்டிருப்பேன்
எனது மழைப்பெண்ணைப் பற்றி..
————————————————————
4
எங்கோ
கண்ணைக் கட்டிக்கொண்டு
நடக்கிறேன் நான்,
நீயோ
காதைப் பொத்திக்கொண்டு செல்கிறாய்..,
உனக்கு நானும் கேட்கவில்லை
எனக்கு நீயும் தெரியவில்லை
உள்ளே அக்கினியாய்
தகிக்கிறது அன்புத் தீ
வெறும் மனசாக மட்டுமே
இருவரும் ஒளிர்கிறோம்..
————————————————————
5
சிலவற்றை நான்
மிக பத்திரமாக வைத்திருக்கிறேன்,
நீ தொட்ட பொருளோ
அல்லது நீ பார்த்த பொருளோயெல்லாமில்லை
உனது பெயரின் சில
எழுத்துக்களது..
————————————————————
வித்யாசாகர்
பிங்குபாக்: வா வந்து வானம் நனை மழையே.. – TamilBlogs